பி.கே. ரோசி கூகுள் டூடுல்

By செய்திப்பிரிவு

இன்று திரைக் கலைஞர் பி.கே. ரோசியின் டூடுலை வெளியிட்டு, பெருமைப்படுத்தியிருக்கிறது கூகுள். 1903, பிப்ரவரி 10 அன்று திருவனந்தபுரத்தில் பிறந்த ரோசிக்கு இது 120ஆவது பிறந்தநாள்.

மலையாளத் திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த முதல் பெண் என்கிற சிறப்பைப் பெற்றவர் ரோசி. தந்தையை இழந்த பிறகு ரோசியின் குடும்பம் வறுமையில் வாடியது. அதனால் சிறு வயதிலேயே கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார். ஆனாலும் நடிப்பிலும் இசையிலும் அவருக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. உறவினர் ஒருவரின் உதவியால் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடிப்பு, இசை போன்ற துறைகள் பெண்களுக்கு ஏற்ற துறைகளாகக் கருதப்படாத காலகட்டம் அது. அந்தக் கற்பிதங்களை எல்லாம் உடைத்து, ஜே.சி. டேனியலின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் ரோசி. அப்போதுதான் ‘ராஜம்மா’ என்கிற இயற்பெயர் ‘ரோசி’ ஆக மாறியது. 1928ஆம் ஆண்டு ‘விகதுகுமாரன்’ திரைப்படம் வெளியானது. ஒரு தலித் பெண் எப்படி நாயர் பெண்ணாக நடிக்கலாம் என்று பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

பின்னர் டிரக் டிரைவராக இருந்த கேசவ பிள்ளை என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, ‘ராஜம்மாள்’ என்கிற பெயரில் தமிழ்நாட்டில் குடியேறிவிட்டார் ரோசி.

நடிப்பை நிறுத்தி பல ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளத் திரையுலகம் ரோசியை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. ‘பி.கே. ரோஸி, உங்கள் தைரியத்திற்கும் நீங்கள் விட்டுச் சென்ற மரபுக்கும் நன்றி’ என்றது.


வுமன் இன் சினிமா கலெக்டிவ் (WCC) 2019 இல் பி.கே. ரோசி என்கிற பெயரில் பெண்களுக்கான ஒரு திரைப்படச் சங்கத்தை நிறுவியது. இது ‘பி.கே. ரோசி ஃபிலிம் சொசைட்டி’ என்று அழைக்கப்படுகிறது; பெண்கள், திருநங்கைகள் போன்றோரால் நடத்தப்படுகிறது. பெண் திரைப்படத் தயாரிப்பாளர்கள், பெண் திரைப்பட வல்லுநர்கள் ஆகியோரைக் கொண்டு பெண்ணியத் திரைப்படங்களைக் காட்சிப்படுத்துவது, விவாதிப்பது, கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE