நரிக்கூட்டத்துடன் வளர்ந்த நாய்!

By ஸ்நேகா

அமெரிக்காவில் உள்ள நிவாடா பாலைவனம் வழியாகச் சென்றவர்கள் ஒரு வித்தியாசமான காட்சியை சில மாதங்களாகப் பார்த்து வந்தார்கள். நரிக்கூட்டத்துடன் ஒரு நாயும் சேர்ந்து விளையாடுகிறது, சாப்பிடுகிறது, வேட்டைக்குச் செல்கிறது, உறங்குகிறது! சுமார் 7, 8 மாதங்களுக்கு முன்னால் வீட்டில் வளர்ந்த இந்தக் குட்டி நாய், எப்படியோ வழிதவறி பாலைவனத்துக்குள் சென்றுவிட்டது. நாயை அங்குள்ள நரிக்கூட்டம் ஒன்று, விரட்டிவிடாமல் தங்கள் கூட்டத்துடன் அரவணைத்துக்கொண்டது.

நாயை நரிக்கூட்டத்துடன் கண்ட சில விலங்குநல ஆர்வலர்கள், அந்த நாயை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று நினைத்தார்கள். காரணம், வீட்டில் வளர்ந்த ஒரு நாயால், பாலைவனத்தில் நரிக்கூட்டத்துடன் வளர்வது கடினம். அவை அன்பாகவே கவனித்துக்கொண்டாலும் நாய்க்கு அந்தச் சூழலைத் தாக்குப் பிடித்து வாழ்வது சிரமம். நோய்த் தொற்று ஏற்படலாம். நாய் பலவீனமடைந்தால், பிற விலங்குகளால் கொல்லப்படலாம்.

நாயைப் பிடிப்பதற்காக முதலில் கேமராவை வைத்து, நடமாட்டத்தைக் கண்காணித்தனர். பிறகு நாயைப் பிடிக்கக் கூண்டு ஒன்றை அமைத்தனர். ஆனால், அந்த நாய் கூண்டுக்குள் சிக்கவே இல்லை. சமீபத்தில் வீடியோவில் பதிவான காட்சிகளில் நாயின் உடலில் சில புண்கள் தென்பட்டன. நாள்கள் செல்லச் செல்ல நாயின் உடல்நிலைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று விலங்குநல ஆர்வலர்கள் கவலை அடைந்தனர்.

7, 8 மாத பாலைவன வாழ்க்கைக்குப் பிறகு, கடந்த சனிக்கிழமை அன்று நாய் கூண்டுக்குள் மாட்டிக்கொண்டது. ஆனாலும் நாய் முரண்டுபிடிக்கவில்லை. கத்தவில்லை. அமைதியாகக் கூண்டுக்குள் அமர்ந்துகொண்டது. மீட்புக் குழுவினர் அந்த நாயை மீட்டு, சிகிச்சை அளித்தார்கள். பாலைவனத்தில் நரிக்கூட்டத்துடன் ஏழு, எட்டு மாதங்கள் வாழ்ந்தாலும் நாய், மனிதர்கள் மீது அன்பாகவே இருக்கிறது. இந்த நாயை அன்பான மனிதர் யாராவது விரைவில் தத்தெடுத்துக்கொள்வார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE