‘துறவி’ நண்டுகளுக்கு ஏன் இந்தப் பெயர்?

By ஸ்நேகா

துறவி நண்டுகள் பத்துக்காலி இனத்தைச் சேர்ந்த மெல்லுடலிகள். இவற்றில் சுமார் 800 இனங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. துறவி நண்டுகளின் முன் பகுதி தடித்த ஓடால் ஆனது. ஆனால், வயிற்றுக்குக் கீழே இருக்கும் பின்பகுதி மென்மையானது. அங்கே இறுக்கமாகப் பற்றிக்கொள்ளக்கூடிய கொக்கி போன்ற ஓர் உறுப்பு இருக்கும்.

துறவி நண்டுகள் தங்களின் உடலை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக இறந்த சங்கு, நத்தை போன்றவற்றின் ஓடுகளை நாடிச் செல்கின்றன. தனக்கு ஏற்ற ஓடு கிடைத்துவிட்டால், மென்மையான பகுதியை ஓட்டுக்குள் நுழைத்து, கொக்கி போன்ற உறுப்பின் மூலம் ஓட்டை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, வாழ ஆரம்பிக்கின்றன. உடல் வளர்ந்தவுடன், வேறு ஒரு பெரிய ஓட்டைத் தேடிச் சென்று வசிக்க ஆரம்பிக்கின்றன. சில நேரம் ஓடுகளைப் பிடிக்க போட்டியே நடைபெறும். சண்டையில் வெற்றி பெறும் துறவி நண்டு, அந்த ஓட்டுக்குள் குடிபுகுந்துவிடும். ஓடுகள் கிடைக்காதபோது, பிற துறவி நண்டுகள் விட்டுச் சென்ற பழைய ஓடுகளுக்குள் நுழைந்து வாழும் துறவி நண்டுகளும் உண்டு.

துறவி நண்டுகளை ‘தூய்மைப் பணியாளர்கள்’ என்றும் சொல்வார்கள். காரணம், இறந்து போன விலங்குகளின் சதைத் துணுக்குகள், சிப்பிகள், கடல்தாவரங்களை போன்றவற்றை உண்டு சுத்தமாக்குகின்றன.

‘துறவி’ என்று ஏன் பெயர் வந்தது என்றால், அதற்கான காரணம் ஒன்றும் இல்லை. தவறுதலாக இந்த நண்டுகளுக்குத் ‘துறவி’ என்கிற பெயர் வந்துவிட்டது. பெரும்பாலும் துறவி நண்டுகள் கூட்டமாகவே வசிக்கின்றன. இனப்பெருக்கக் காலத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து குடும்பம் நடத்துகின்றன. பிறகு, பெண் துறவி நண்டுகள் கடலுக்குச் சென்று முட்டைகளை இடுகின்றன. கடலில் முட்டைகள் வெடித்து, குஞ்சுகள் மிதக்கும். அவை வளர்ந்து, ஓடு உருவாகிய பிறகு கரைக்கு வருகின்றன. அங்கே தங்களுக்கு ஏற்ற ஓடுகளைத் தேடி, குடிபுகுந்துவிடுகின்றன.

பிளாஸ்டிக் மாசு காரணமாகப் பெரிய அளவில் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றன துறவி நண்டுகள். பிளாஸ்டிக் பாட்டில்கள், டப்பாக்கள் போன்றவற்றை ஓடு என்று நினைத்து, குடிபுகுந்துவிடுகின்றன. இதனால் வெகுவிரைவில் இறந்தும் போய்விடுகின்றன. கடலைத் தூய்மை செய்யும்போது கிடைக்கும் பிளாஸ்டிக் பொருள்களுக்குள் இறந்த துறவி நண்டுகள் அதிக அளவில் கிடைக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE