இந்திய கிரிக்கெட்டில் இன்று (08-02-1952): சென்னையில் அரங்கேறிய இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றி!

By மிது கார்த்தி

எந்த ஒரு கிரிக்கெட் அணிக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது என்பது பெரும் கனவு. அதிலும் முதல் டெஸ்ட் வெற்றி என்றால், அது மிகப் பெரிய கவுரவமாகப் பார்க்கப்படும். இந்திய கிரிக்கெட் அணிக்கு அந்தக் கவுரவம் இன்றே (08-02-1952) கிடைத்தது. அதுவும் மெட்ராஸ் (இப்போது சென்னை) எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில்தான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் வெற்றி கிடைத்தது.

சுதந்திரத்துக்கு முன்பே இந்திய கிரிக்கெட் அணி தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 1932 ஜூன் 25 அன்று விளையாடியது. அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள்தான் கிரிக்கெட்டில் கோலோச்சி வந்ததன. 1932 முதல் 1951வரை இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகளுடன் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தது. இதில் 13 போட்டிகளில் தோல்வியும், எஞ்சியப் போட்டிகளை சமனிலும் (டிரா) இந்தியா முடித்திருந்தது.

எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தின் பழைய தோற்றம்

சுதந்திரத்துக்குப் பிறகு 1952ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி முதன் முறையாக இந்தியாவுக்கு வந்தது. இந்தப் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன், கான்பூர் கிரீன்பார்க் மைதானம், சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற்றன.

இதில் முதல் போட்டி சமனில் முடிந்திருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில்தான் இந்திய முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றது. அந்தப் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் பங்கஜ் ராய் 111 ரன்களும், பாலி உம்ரிகர் 130 ரன்களையும், ஒட்டுமொத்தமாக மன்கட் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு உதவினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE