ஒரு மரங்கொத்தியும் 312 கிலோ உணவும்!

By ஸ்நேகா

மரங்கொத்திகள் மரங்களைக் கொத்தி புழு, பூச்சிகளை உண்ணும். மரங்களைக் கொத்தி பருப்பு, கொட்டைகள் போன்ற உணவுப் பொருள்களைச் சேமித்து வைக்கும். ஆனால், ஒரு மரங்கொத்தியால் எவ்வளவு உணவைச் சேமிக்க முடியும்?

சுமார் 317 கிலோ கருங்காலிக் கொட்டைகளை ஒரு மரங்கொத்தி சேமித்திருக்கிறது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கலிபோர்னியாவைச் சேர்ந்த நைக் காஸ்ட்ரோ பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்று, 20 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகிறது. ஆனால், முதல் முறையாக ஒரு மரங்கொத்தியால் முந்நூறு கிலோவுக்கும் அதிகமான உணவைச் சேமித்து வைக்க முடியும் என்பதைக் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்திருக்கிறது.

கலிபோர்னியாவில் உள்ள ஒரு குடும்பம் தங்கள் வீட்டுச் சுவரில் மரங்கொத்தி அதிகமான துளைகளைப் போட்டுக்கொண்டிருக்கிறது. அதனால் சுவர் பாழாகிறது. மரங்கொத்தி துளையிடாதவாறு, சுவரைச் செப்பனிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

நிறுவனத்திலிருந்து ஒருவர் சுவரைச் செப்பனிடும் பணிக்காகச் சென்றார். அங்கே ஒரு மரங்கொத்தி சுறுசுறுப்பாகச் சுவரைக் கொத்துவதும், கொட்டைகளை வைப்பதுமாக இருப்பதைக் கண்டார். சுவர் முழுக்க ஏராளமான துளைகள். ஆனால், துளைகளுக்குள் வைக்கப்பட்ட கொட்டைகள் எங்கே செல்கின்றன என்பது மட்டும் அவருக்குத் தெரியவில்லை. சரிசெய்வதற்காக சுவரை உடைத்தபோது, நடுவில் இடைவெளி இருப்பதை அறிந்துகொண்டார். ஒன்று அல்லது இரண்டு கிலோ கொட்டைகள் இந்தச் சுவருக்குள் இருக்கலாம் என்று நினைத்து, எடுக்க ஆரம்பித்தார். எடுக்க எடுக்க கொட்டைகள் மலைபோல் குவிந்துகொண்டே இருந்தன. அவற்றை 8 பெரிய பைகளில் நிரப்பி, எடை போட்டனர். 312 கிலோ கருங்காலிக் கொட்டைகள் இருந்தன!

சுவர் சரிசெய்யப்பட்டது. இனி அந்த மரங்கொத்தி குளிர்காலத்துக்குத் தேவையான உணவை வேறு இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE