இந்திய கிரிக்கெட்டில் இன்று (07-02-1999): அனில் கும்ப்ளே நடத்திய 10 விக்கெட்டுகள் வேட்டை!

By மிது கார்த்தி

பிப்ரவரி 7-ஆம் தேதியை இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே மட்டுமல்ல, இந்திய ரசிகர்களும் நிச்சயம் மறக்கமாட்டார்கள். ஆம், இந்தத் தேதியில்தான் டெல்லி பெரோட்ஷா கோட்லா மைதானத்தில் (இன்று அருண் ஜேட்லி மைதானம்) பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தார் அனில் கும்ப்ளே!

இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பு உறவில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக, 1989இல் இந்திய அணி பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடிய பிறகு, அங்கு செல்லவே இல்லை. அதுபோலவே 1987இல் இந்தியாவில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகு, அந்த அணியும் இந்தியா வரவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி, 1999இல் இந்தியாவுக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடுவதற்காக வந்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றிருந்தது. தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நான்காவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தானுக்கு இந்திய அணி 419 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சயீத் அன்வரும் அப்ரிடியும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். பாகிஸ்தானின் ஸ்கோர் 101-ஐ எட்டியபோது அப்ரிடியின் விக்கெட்டை கும்ப்ளே வீழ்த்தி, விக்கெட்டுகள் வேட்டையைத் தொடங்கி வைத்தார். அதன் பின் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தியவண்ணம் இருந்தார் கும்ப்ளே. சொல்லி வைத்தார்போல் கும்ப்ளேவின் பந்துவீச்சில் பாகிஸ்தானியர்கள் பெவிலியனை நோக்கி மூட்டையைக் கட்டினர்.



கும்ப்ளே 7 விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர், 10 விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்பிருப்பதாகக் கருதிய கேப்டன் முகம்மது அசாருதீன், எதிர்முனையில் ஜவகல் ஸ்ரீநாத்திடம் பந்தைக் கொடுத்து, ‘ஆஃப் சைடில்’ பந்தை வீசுமாறு சொன்னார். அதாவது, ஸ்ரீநாத் பந்தில் விக்கெட் வீழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக அப்படிச் சொன்னார். ஸ்ரீநாத்தும் அதன்படியே செய்தார். பந்துவீசியபோது இரண்டு பந்துகள் ‘வைடு’களாகவும் சென்றன. டெஸ்ட் போட்டியில் ‘வைடு’ மிகவும் அகலப் பந்துக்குத்தான் வழங்கப்படும் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

9 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, கடைசி கட்டத்தில் தாக்குப்பிடித்து விளையாடிய, கேப்டன் வாசிம் அக்ரமை கும்ப்ளே கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார். அந்தத் தருணத்தில் டெஸ்ட் போட்டியில் உலகில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற அரிய சாதனையைப் படைத்தார் அனில் கும்ப்ளே! இந்த 10 விக்கெட்டுகளையும் 74 ரன்களை விட்டுக்கொடுத்து வீழ்த்தினார்.

அன்று வலுவாக இருந்த பாகிஸ்தான் அணியின் சயீத் அன்வர், அப்ரிடி, இஜாஸ் அகமது, இன்சமாம் உல் ஹக், முகம்மது யூசுப், மொயின்கான், சலீம் மாலிக், வாசிம் அக்ரம், சக்லைன் முஸ்டாக் ஆகியோர் அனில் கும்ப்ளேவின் மாயாஜால சுழற்பந்து வீச்சில் வீழ்ந்தனர். 1956இல் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் ஜிம் லாக்கர் 53 ரன்களை விட்டுகொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இச்சாதனையைப் படைத்த ஒரே வீரராக இருந்தார் ஜிம் லாக்கர். 43 ஆண்டுகள் கழித்து இச்சாதனையைச் சமன் செய்தார் அனில் கும்ப்ளே. அந்த மகத்தான சாதனை இந்திய கிரிக்கெட்டில் என்றும் பேசப்படும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்