குமரன் சுமந்த கல்... (கதை) - வி.சி. கிருஷ்ணரத்னம்

By செய்திப்பிரிவு

குமரனின் அப்பா வசதியானவர். அதனால், தான் நினைத்ததை எல்லாம் அப்பா வாங்கித் தர வேண்டும் என்று நினைத்தான் குமரன். அவரோ அவசியமானவற்றை மட்டுமே வாங்கிக் கொடுத்தார். இதனால் குமரனுக்கு அப்பா மீது வருத்தம் இருந்தது. அப்பாவிடம் பேசுவதையே தவிர்த்தான். அம்மா மூலம் தனக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டான்.

அன்று அம்மாவிடம் தனக்கு ஒரு விலை உயர்ந்த சைக்கிள் வேண்டும் என்று கேட்டான். அப்போது அங்கே வந்த குமரனின் அப்பா, “ஏற்கெனவே ஒரு சைக்கிள் நல்லாதானே இருக்கு? எதுக்குப் புது சைக்கிள்?” என்று கேட்டார்.

“நீங்கள் சம்பாதிப்பது எல்லாம் எனக்காகத்தானே? நான் கேட்பதை வாங்கிக் கொடுத்தால் என்ன?”

“நான் சம்பாதிப்பது எல்லாம் உனக்குதான் என்று யார் சொன்னது? மகனை வளர்த்து, பெரியவனாக்குவது என் பொறுப்பு. மற்றபடி நீ விரும்பியதை எல்லாம் வாங்க வேண்டும் என்றால், நீயே உழைத்து, சம்பாதித்துதான் வாங்க வேண்டும். அதற்கு இப்போதே நன்றாகப் படிக்க வேண்டும்” என்று அப்பா சொன்னவுடன் கோபத்துடன் வெளியே சென்றான் குமரன்.

அப்போது கிராமத்திலிருந்து ஒரு முதியவர் வந்தார். அவரிடம் குமரன் குறித்து, தன்னுடைய வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார் குமரனின் அப்பா.

“கவலை வேண்டாம். அவன் புரிந்துகொள்வான்” என்றார் பெரியவர்.

சற்று நேரத்தில் குமரன் வீட்டுக்கு வந்தான்.

“குமரா, நல்லா இருக்கியா? நாம ரெண்டு பேரும் வெளியில் போயிட்டு வரலாம். வா” என்று அழைத்தார் முதியவர்.

குமரனும் அவருடன் அமைதியாகச் சென்றான்.

“இந்தக் குன்றில் ஏறலாமா?”

“ஓ... எனக்கும் குன்றில் ஏறப் பிடிக்கும்” என்று சிரித்தான் குமரன்.

“இந்தச் சின்னப் பாறாங்கல்லைத் தூக்கிக்கிட்டு நீ மேலே ஏறணும். முடியுமா?”

முடியும் என்பதுபோல் தலையாட்டினான் குமரன்.

இருவரும் குன்றில் ஏறினார்கள். சிறிது நேரத்திலேயே குமரனுக்குக் கை வலிக்க ஆரம்பித்துவிட்டது.

குன்றின் உச்சியை அடைந்ததும் பாறாங்கல்லை வீசச் சொன்னார் முதியவர். குமரனுக்குக் கோபம் வந்துவிட்டது.

"கஷ்டப்பட்டு பாறாங்கல்லைச் சுமந்து வந்தேன்... என் உழைப்பை ஒரு நொடியில் வீணடிக்கச் சொல்றீங்களே, இது நியாயமா?தூக்கிக்கொண்டு வந்த எனக்குக் கோபம் வராதா?” என்று கேட்டான்.

"இந்தப் பாறாங்கல்லை, கஷ்டப்பட்டு நீ தூக்கிட்டு வந்தது போலதான் உன் அப்பா சொத்தைக் கஷ்டப்பட்டு சேர்த்து வச்சிருக்கார். ஆனால், அதையெல்லாம் உணராமல் அவருடைய சொத்தை அனுபவிக்கணும்னு நினைக்கிறே... அது மட்டும் எந்தவிதத்துல நியாயம்?” என்று கேட்டார் முதியவர்.

குமரனுக்குத் தன் தவறு புரிந்தது. வீட்டுக்குச் சென்றவுடன் அப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்