இந்திய கிரிக்கெட்டில் இன்று (01-02-1985): முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்த முதல் வீரர்

By மிது கார்த்தி

றிமுக டெஸ்ட் போட்டியில் சதமடிப்பது கிரிக்கெட்டில் அரிதான நிகழ்வுதான். அறிமுகமாகி முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சதமடிப்பது, கிரிக்கெட்டில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பிரம்மாண்ட சாதனை. அந்த மகத்தான சாதனைக்குச் சொந்தக்காரராக இந்தியர் ஒருவர் இருக்கிறார். அவர், முன்னாள் கேப்டன் முகம்மது அசாருதீன்.

1984 நவம்பர் முதல் 1985 ஜனவரி வரை சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக டேவிட் கோவர் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்தது. அப்போது 21 வயது அசாரூதின் என்கிற ஒல்லியான இளைஞர் இந்திய அணிக்குள் காலடி எடுத்து வைத்தார். அணியில் இடம்பெற்றும் முதல் இரண்டு போட்டிகளில் களமிறக்கப்படாத அசாருதீன், கல்கத்தாவில் (இன்று கொல்கத்தா) நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்டார். தன்னுடைய அறிமுகப் போட்டியிலேயே 110 ரன்களைக் குவித்து சாதனை படைத்தார் அசாருதீன்.

நான்காவது டெஸ்ட் போட்டி மெட்ராஸ் (இன்று சென்னை) சேப்பாக்கம் மைதானத்தில் (பொங்கல் டெஸ்ட்) நடைபெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 48 ரன்களை எடுத்த அசாருதீன், இரண்டாவது இன்னிங்ஸில் 105 ரன்களை விளாசி இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். இத்தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் 1985, ஜனவரி 31 முதல் பிப்ரவரி 5 வரை நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 122 ரன்களைக் குவித்த அசாருதீன், முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்த முதல் வீரர் என்கிற மகத்தான சாதனையைப் படைத்தார். அசாருதீன் மூன்றாவது சதத்தை பிப்ரவரி 1ஆம் தேதிதான் படைத்தார். அந்த வகையில் இந்தச் சாதனை படைக்கப்பட்டு 38 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். டெஸ்ட் அரங்கில் தன்னுடைய முதல் அறிமுகப் போட்டியிலேயே சதத்தைப் பதிவு செய்தது போல, 2000ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகக் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்தவர் அசாருதீன் என்பது வியப்பான சேதி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE