விண்வெளியில் பறந்த முதல் இந்திய வீராங்கனை!

By ஸ்நேகா

கல்பனா சாவ்லா இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த விண்வெளி வீராங்கனை. 1962 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி இன்றைய ஹரியாணா மாநிலத்தின் சிறிய நகரமான கர்னாலில் பிறந்தார். சிறு வயதிலேயே விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருந்தார். தன் கனவை நிஜமாக்கும் விதத்தில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்தார். 1984ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். 1988இல் அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவில் வேலைக்குச் சேர்ந்தார்.

9 ஆண்டுகளுக்குப் பிறகு கல்பனா சாவ்லாவின் கனவு நிஜமாகும் வாய்ப்பு வந்தது. 1997ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி கல்பனா சாவ்லா தனது முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்! 'கொலம்பியா விண்கலம்’ கல்பனா சாவ்லாவைப் பத்திரமாக பூமிக்குக் கொண்டுவந்து சேர்த்தது. இந்தியர்களும் அமெரிக்கர்களும் கல்பனா சாவ்லாவைக் கொண்டாடினார்கள்.

2001 இல் கல்பனா சாவ்லா இரண்டாவது விண்வெளிப் பயணத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்தப் பயணம் தள்ளிப் போனது. 2003ஆம் ஆண்டு ஜனவரி 16 அன்று கொலம்பியா விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்றார் கல்பனா சாவ்லா. வெற்றிகரமாகப் பயணத்தை முடித்துக்கொண்டு, பிப்ரவரி 1, 2003 அன்று பூமிக்குத் திரும்பும்போது கொலம்பியா விண்கலம் வெடித்ததில் உயிர் இழந்தார். இது கல்பனா சாவ்லா உயிர் இழந்து இருபதாவது ஆண்டு.

கல்பனா சாவ்லாவின் நினைவாக சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியது நாசா விண்வெளி நிறுவனம். கல்பனா சாவ்லா 31 நாள்கள், 14 மணி நேரம், 54 நிமிடங்கள் விண்வெளியில் கழித்திருக்கிறார். கொலராடோ பல்கலைக்கழகம் கல்பனா சாவ்லா பெயரில் விருது வழங்கி வருகிறது. இந்தியாவிலும் வீரதீரச் செயல்களுக்கான விருது கல்பனா சாவ்லா பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவையும் இந்தியாவையும் பெருமைப்படுத்திய விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா, இளைஞர்களின் ரோல்மாடலாக இருக்கிறார்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE