95-வது ஆஸ்கர் விருது: இறுதிப் பரிந்துரைக்குத் தேர்வாகியிருக்கும் இந்திய ஆவணப்படம்.

By நிஷா

மார்ச் 12 அன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு பிரிவுகளில் தேர்வுக்கு அனுப்பப்பட்ட படங்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. அதில், இந்திய இயக்குநர் ஷெளனக் சென் இயக்கிய 'ஆல் தட் ப்ரீத்ஸ்' (All That Breathes) எனும் ஆவணப்படம் சிறந்த ஆவணப்பட பிரிவின் இறுதிப் பரிந்துரைக்குத் தேர்வாகியுள்ளது.

இரண்டு சகோதரர்களுக்கும் அவர்கள் நேசிக்கும் பருந்துக்கும் இடையிலான நேசத்தின் வழியே தில்லியின் கொடூர முகத்தையும், சூழலியல் ஆபத்துகளையும் உணர்த்தும் படைப்பு இது. ஆவணப்படம் என்பதால், இதில் அவர்களின் வாழ்வு புனைவு அல்ல.

தில்லியின் மறுபக்கம்

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் தில்லியும் ஒன்று. பெருநகருக்கே உரிய வேலையின்மை, பொருளாதார அழுத்தம், விரக்தி போன்றவை அங்கே வசிக்கும் சாமானியர்கள் நித்தமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். இந்தப் பிரச்சினைகளை மீறியே, பல்வேறு மாநிலத்தை, பல்வேறு மதத்தைச் சேர்ந்த சாமானிய மக்கள் தங்கள் வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் வாழ முயன்று வருகின்றனர்.

ஷெளனக் சென் இயக்கியிருக்கும் 'ஆல் தேட் பிரீத்ஸ்' தில்லி நகரத்தின் மற்றொரு கொடூர முகத்தை ஆவணப்படுத்தி உள்ளது. மக்களின் மனங்களில் விதைக்கப்படும் வெறுப்பு அரசியலின் பாதிப்புடன் சேர்த்து, காற்று மாசுபாட்டால் ஏற்படும் கொடிய பாதிப்பும் இதில் காத்திரமாக ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன.

கதைக்களம்

தில்லியில் வசிக்கும் நதீம், சவூத் எனும் இரண்டு இஸ்லாமியச் சகோதரர்கள் ஒரு கரும்பருந்தை நேசிக்கிறார்கள். அதன் காரணமாக அவர்கள் பருந்து சகோதரர்கள் என அழைக்கப்படுகிறார்கள். கரும்பருந்தின் மீதான நேசம் மற்ற பறவைகளின் மீதான ஒன்றாகவும் விரைவில் மாறுகிறது.

தில்லியின் காற்று மாசுபாட்டால், வானம் மூடப்படுவதும், அதிலிருந்து பறவைகள் ஆயிரக்கணக்கில் கீழே விழுவதும் அங்கே தொடர்கதை. அவ்வாறு விழும் பறவைகளை மீட்டெடுத்து, அவற்றுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், தாங்கள் வசிக்கும் வீட்டின் சிறிய அடித்தளத்தில் அவர்கள் ஒரு தற்காலிக பறவை மருத்துவமனையை நிறுவுகின்றனர். அதன் மூலம் காற்று மாசுபாட்டின் கொடிய நச்சில் அகப்பட்டு கீழே வீழும் பறவைகளைக் காப்பாற்ற முயல்கின்றனர்.

தற்போது பெருகிவரும் வெறுப்பு அரசியலின் ஆபத்தை விட, பன்மடங்கு வீரியம் கொண்டது சுற்றுச்சூழல் மாசுபாடு. வெறுப்பு அரசியலால் பாதிக்கப்படும் சகோதரர்களுக்கும், காற்று மாசுபாட்டால் புறக்கணிப்புக்கு உள்ளாகும் பறவைகளுக்கும் இடையிலான ஆத்மார்த்தமான உறவின் மூலம் அது நமக்கு உணர்த்தப்படுகிறது. மனிதர்களுக்கும் பறவைகளுக்கு இடையிலான நேசத்தினூடே தில்லி போன்ற பெருநகரங்களில் உயந்துவரும் காற்று மாசுபாடும், சமூக பதட்டங்களும் இதில் கவித்துவமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, கடந்த மே மாதம் பிரான்ஸின் கான் நகரில் நடைபெற்ற 75-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆவணப்படத்துக்குத் தங்கக் கண் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

சிறப்புப் பக்கம்

9 days ago

மேலும்