விடுதலைக்குப் பிறகு இந்திய அரசுக்கு எதிராக முதன்முதலில் குரலெழுப்பியவர்கள் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த நாகா, மிசோ இனத்தவர்களே. இதில் ஒன்றுபட்ட அசாமின் நாகா மலைப்பகுதிகளில் வசித்து வந்தவர்கள் காலங்காலமாக நாகாக்கள் என்றே அழைக்கப்பட்டனர். ஆனால் லுசாய் மலைப்பகுதிகளில் வசித்தவர்கள் அப்போது பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டனர்.
ஏகப்பட்ட சர்வாதிகாரிகள்!
இவர்களில் பெரும்பான்மைப் பிரிவினர் லுசாய்கள் என்பதால் அப்பகுதி லுசாய் மலைப்பகுதிகள் என்றே அழைக்கப்பட்டது. எனினும் லுசாய்கள் தவிரச் சைலோ, ஹமார், பைத்தே, சுக்தே போன்ற இனக்குழுக்களும் இங்குக் கணிசமாக வசித்தனர். இந்த லுசாய் இனக்குழுக்களின் பஞ்சாயத்து தலைவர்களே காலங்காலமாக இப்பகுதியை ஆட்டிப் படைத்தனர். இந்தியா விடுதலை பெற்றபோது இந்தச் சர்வாதிகாரத் தலைவர்களின் எண்ணிக்கை 200-க்கும் மேல் ஆனது.
இச்சமயத்தில் லுசாய் அல்லாத இனப்பிரிவுகளைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் இந்தத் தலைவர்களின் அதிகாரத்தை எதிர்த்துக் குரலெழுப்பினர். படிப்படியாக அனைத்து இனப் பிரிவுகளைச் சேர்ந்த இளைஞர்களையும் கவர்ந்திழுத்து மிசோ யூனியன் என்பதாக அது உருமாறியது. இந்த அமைப்பின் முயற்சியின் விளைவாக அசாம் பகுதியில் மிசோ என்பது பழங்குடிப் பிரிவாக 1951-ல் அங்கீகாரம் பெற்றது.
பெயர் மாற்றம்
இனக்குழுத் தலைவர்களுக்கு எதிரான இந்த அமைப்பின் போராட்டத்தின் விளைவாக 1954-ல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் 259 பஞ்சாயத்து தலைவர்களின் பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு உதவும் வகையில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, படிப்படியாகச் சாதாரண மக்களின் நிலை உயரத் தொடங்கியது. தொடர்ந்து இதுவரை லுசாய் மலைப்பகுதிகள் என்று அழைக்கப்பட்ட பகுதியை மிசோ மலைப்பகுதிகள் எனப் பெயர் மாற்றம் செய்ய முயற்சி எடுக்கப்பட்டது.
அதுவரை பல்வேறு குழுக்களாக இருந்தவர்கள் தங்களை மிசோ என அடையாளப்படுத்திக் கொள்ளத் தொடங்கினர். இந்த மாற்றங்கள் அனைத்தும் மிசோ யூனியன் மூலமே நடைபெற்றன. 1961-ல் நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, அதற்கு முன்புவரை பல்வேறு இனங்களாகப் பதிவு செய்யப்பட்ட, இப்பகுதி மக்கள் மிசோ என்றே பதிவுசெய்தனர். இதன் விளைவாக முன்பு லூசாய், ஹமார் எனப் பல இனப்பெயர்களில் பதிவாகியிருந்த மக்கள் எண்ணிக்கை காணாமலே போனது.
தனி மாநிலம் கோரி
இதைத் தொடர்ந்து இப்பகுதியில் 1959-ல் ஏற்பட்ட கடும் வறட்சியைச் சமாளிக்க மிசோ தேசிய வறட்சி முன்னணி அமைப்பு நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. அன்றைய அசாம் அரசும், மத்திய அரசும் போதிய நிவாரண ஏற்பாடுகளைச் செய்யாத நிலையில் அரசுக்கு எதிராகக் குரலெழுந்தது. அதை அடுத்து 1961-ல் அசாம் மொழி அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டபோது இதை எதிர்த்து அன்றிருந்த நாகா மலைப்பகுதிகள், லுசாய் மலைப்பகுதிகள் ஆகியவற்றில் கடுமையான கசப்புணர்வு உருவானது.
இவ்வாறு தொடர்ச்சியான சம்பவங்கள் அனைத்தும் இணைந்து இப்பகுதியில் மிசோ யூனியன் என்ற அமைப்பு மிசோ தேசிய வறட்சி முன்னணி என்பதாக மாறி, பின்னர்த் தனிநாடு கோரும் குழுவாக மிசோ தேசிய முன்னணி 1966-ல் உருவானது. நாகா குழுக்களைப் போலவே ராணுவத்தை எதிர்நோக்கிய இவர்களும் அண்டை நாடுகளான சீனா, பர்மா, அன்றைய கிழக்கு பாகிஸ்தான் ஆகியவற்றில் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களாக மாறினர். ஒரு கட்டத்தில் இவர்களின் முகாம்களை அழிக்க விமானப் படையும் பயன்படுத்தப்பட்டது.
கிராமம் கிராமமாக மக்கள் அகற்றப்பட்டுப் பாதுகாப்பு படைகளின் கண்பார்வையில் தங்க வைக்கப்பட்டனர். இவ்வாறு மிசோ தேசிய முன்னணி சுமார் 20 ஆண்டுகள் இந்திய அரசுக்கு எதிராகப் போராடிய பின்னர் 1986-ல் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. அதை அடுத்து மத்திய அரசின் கீழ் துணைநிலை மாநிலமாக இருந்த இப்பகுதி தனிமாநிலமாக 1987-ல் உருவானது.
வடகிழக்குப் பகுதியில் மேலாதிக்கம் செலுத்திவந்த வங்காளிகளுக்கு எதிராக அசாம் மொழியை வளர்த்தெடுப்பதில் கிறிஸ்தவப் பிரச்சாரகர்கள் அப்போது முயற்சி எடுத்தனர். அதைப் போலவே லுசாய் மலைப்பகுதிகளிலும் கிறிஸ்தவ மதத்தை வளர்த்துக் கல்வியைப் புகட்டியதோடு, அப்பகுதியில் புழங்கிவந்த துலியான் மொழியைச் செழுமைப்படுத்தினர். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள மூன்று மாநிலங்களில் இதுவும் ஒன்று.
இம்மாநிலத்தில் சக்மா, லாய், மாரா என்ற பழங்குடிப் பிரிவினர்களின் முன்னேற்றத்திற்காக மூன்று சுயாட்சிப் பகுதிகள் செயல்பட்டு வருகின்றன. எனினும் இங்கு வசித்துவந்த ப்ரு இன மக்கள் தாக்கப்பட்ட நிலையில் மாநிலத்திலிருந்து வெளியேறி அருகிலுள்ள திரிபுராவில் தஞ்சம் புகுந்து தனிமுகாம்களில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். நீதிமன்றங்கள் தலையிட்டபோதிலும் இன்றுவரை அவர்களால் தங்கள் பாரம்பரியப் பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago