ஏ.ஆர்.ரஹ்மானின் கடைசி தங்கை பேட்டி!

By ஆர்.சி.ஜெயந்தன்

திரையிசை, தனியிசை இரண்டிலுமே சர்வதேச அளவில் சாதனைகளைப் படைத்து வருபவர் இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான். இரு ஆஸ்கர் விருதுகளையும் கிராமி உள்ளிட்ட ஆயிரத்துக்கு அதிகமான சர்வதேச விருதுகளையும் வென்றவர். அவரது வழியைப் பின்பற்றி, அவருடைய மூத்த சகோதரியான ஏ.ஆர்.ரைஹானாவின் மகன் ஜி.வி.பிரகாஷ், தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருந்து வருகிறார். அதேபோல் அவரது அம்மா ஏ.ஆர். ரைஹானா பிரபல பின்னணிப் பாடகியாகவும் இசையமைப்பாளராகவும் பல பாடல்களைப் பாடியும் இசையமைத்தும் இருக்கிறார். தற்போது ஏ.ஆர்.ரஹ்மானின் இளைய சகோதரியான இஷ்ரத் காதிரி இசைக் களத்தில் காலடி வைத்துள்ளார். ஏற்கெனவே மார்க்கம் சார்ந்த பல இறை இரக்கப் பாடல்களையும், அண்ணன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சில பாடல்களையும் பாடியிருக்கிறார்.

தற்போது இவர் அடுத்தகட்டமாக தனியிசை, திரையிசை இரண்டிலும் இசையமைப்பாளராக களம் கண்டிருக்கிறார். அதன் முதல் முயற்சியாக மகாகவி பாரதியாரின் புகழ்பெற்ற நாட்டுப் பற்றுப் பாடலான ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி’ என்கிற பாடலை இசையமைத்துப் பாடியிருக்கிறார். தமிழ்நாட்டின் புகழையும் முன்னோர், பெண்களின் பெருமையைப் போற்றும் இப்பாடலின் காணொளி வடிவத்தைப் பிரபல திரைப்பட இயக்குநர் ஆர். மாதேஷ் இயக்கியிருக்கிறார். இதனை வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளியிட இருக்கிறார்கள். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, “ ஒரு பாடகி என்பதைத் தாண்டி, அண்ணன் வழியில் இசையமைப்பாளராகவும் எனது பயணத்தைத் தொடர விரும்புகிறேன். எனக்கு பள்ளியிலிருந்தே மகாகவி பாரதியாரின் பாடல்கள் பிடிக்கும். அவருடைய பாடலுக்கு இசையமைத்துப் பாடியதை என் நாட்டுக்குச் செய்யும் சிறிய நன்றிக் கடனாகப் பார்க்கிறேன்.

எந்தையும் தாயும் - இசையமைத்துப் பாடியுள்ள இஷ்ரத் காதிரி

இந்தப் பாடலின் காணொளி வடிவத்திலும் நானே தோன்றியிருப்பதுடன் அதைத் தயாரித்தும் இருக்கிறேன்.

இயக்குநர் ஆர். மாதேஷ் எனது நீண்ட கால குடும்ப நண்பர். கேட்டதுமே ஒப்புக்கொண்டு மிக பிரம்மாண்டமாக காட்சியமைப்பு செய்து இயக்கிக் கொடுத்திருக்கிறார். இந்தப் பாடலை இன்னும் அண்ணனுக்கு நான் காட்டவில்லை. விரைவில் காட்டுவேன். பெண்கள், பெண்ணுரிமை உட்பட பாடப்பட வேண்டிய முக்கியமானவற்றை தனியிசைப் பாடல்களாகக் கொண்டுவர இருக்கிறேன். இதற்கிடையில் திரைப்படம் ஒன்றுக்கும் இசையமைத்து வருகிறேன். அதுபற்றி படக்குழுதான் முறைப்படி அறிவிப்பார்கள். திரைப்படங்களுக்கு இசையமைக்கும் அதேநேரம் தனியிசையில் தொடர்ந்து இயங்கவேண்டும் என்பது எனது திட்டம்” என்று கூறுகிறார். சென்னையில் படித்து வளர்ந்த இவர், இஷ்ரத் காதிரி என்கிற தன்னுடைய பெயருக்கு ‘மகிழ்ச்சியின் பாதை’ என்று பொருள் எனத் தெரிவித்தார். தனது இசை அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நிறைவினையும் கொடுக்கும் விதமாக இருக்கும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE