புது கம்பெனிக்கு மாறுவது தவறல்ல

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

“அந்தக் கம்பனியை விட்டு வர என்ன காரணம்?” என்று நேர்காணலில் கேட்டால் என்ன சொல்வது? உண்மையைச் சொல்லலாமா? பழைய கம்பனியில் பிணக்கு என்றால் என்ன செய்வது? கம்பனி மாறுவதே தவறு என்பது போலப் பாசாங்கு செய்யும் நேர்காணல் குழுவிடம் எப்படி நடந்து கொள்வது? ”

என ஒரு வாசகர் கேட்டிருந்தார்.

காலம் முழுவதும் ஒரே நிறுவனத்தில்தான் வேலை என்பதை இன்று ஜப்பானியர்களே பின்பற்றுவதில்லை. அரசாங்கம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் நீங்கலாக எந்த வேலையிில் இருப்பவர்களும் எப்போது வேண்டுமானாலும் மாறத் தயாராக இருப்பவர்கள்தான்.

முன்பு பத்து, பதினைந்து வருடங்கள் இருந்தால் ஸ்திரத்தன்மை என்றார்கள். போற்றினார்கள். இன்று இருந்தால் ‘வெளியே விலை போகாதவர்கள்' என்று உள்ளேயே பெரிதாக மதிப்பதில்லை. புதிய ஆட்களுக்குக் கிடைக்கும் சம்பளமும் மரியாதையும் பழைய ஆட்களுக்குக் கிடைப்பதில்லை.

ஆனால் அதற்கான காரணங்கள் முக்கியம். குறிப்பாக நேர்காணலில் அந்தக் காரணங்களை அவர்கள் அறிய முற்படுவது நியாயமே. உங்கள் தேர்வு செய்வதுகூட இதைப் பொறுத்து அமையலாம்.

அதனால் இதை நாம் சற்று விரிவாக அலசுதல் நல்லது.

முதலில் ஒரு வேலையை விட்டு இன்னொரு வேலை தேட என்ன காரணம்? அதிக சம்பளம்தான் என்கிறீர்களா? அதுதான் இல்லை.

மனிதவள ஆராய்ச்சிகள் அதை நாலாவது முக்கிய காரணமாகத்தான் சொல்லுகின்றன.

முதல் காரணம்? பாஸ் தொல்லைதான். நீங்கள் ரிப்போர்ட் செய்யும் உங்கள் மேலதிகாரி உங்களைச் சரியாக நடத்த வில்லை என்றால் கண்டிப்பாக வெளியே வாய்ப்புகள் தேட ஆரம்பிப்பீர்கள்.

“பணியாளர்கள் நிறுவனங்களை விட்டு விலகுவதில்லை. அவர்களின் உடனடி மேலதிகாரிகளை விட்டுத்தான் விலகுகிறார்கள்” என்றார் அஸிம் ப்ரேம்ஜி. விப்ரோ நிறுவனத்தின் தலைவர்.

மேலதிகாரியுடனான மோசமான உறவுதான் பெரும்பான்மையானவர்களிடம் வெளியே போகும் எண்ணத்தை விதைக்கிறது. போக வேண்டும் என்ற முடிவு உறுதியானவுடன் பிறகு சற்றுக் கூடுதலான சம்பளம் அல்லது வசதிகள் தேடுவது இயல்பு. ஆதாரக் காரணம் உங்களை அப்ரைசல் செய்யும் உங்கள் பாஸ் உங்களை எப்படி நடத்துகிறார் என்பது தான்.

அடுத்த காரணம், இப்போது செய்யும் வேலையை விடப் பெரிய பங்கை ஆற்றக்கூடிய வாய்ப்புகள். இந்தக் கூடுதல் பொறுப்புகள்தான் இரண்டாம் காரணம்.

மூன்றாம் காரணம் நல்ல எதிர்காலம் உள்ள வேலை அல்லது துறை அல்லது நிறுவனம் என்றால் மாறுவது.

நான்காவதுதான் கூட ஆயிரம் ரூபாய் என்பதற்காக மட்டும் மாறுவது.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இரண்டாம், மூன்றாம் காரணங்களிலும் சம்பளம் அதிகமாகலாம். ஆனால் அது மூல காரணம் அல்ல. அது ஒரு போனஸ் காரணம். ஆனால் வெறும் பணத்திற்காக மாறுதல் நான்காவது காரணம்.

இதில் நீங்கள் எந்தக் காரணத்திற்கு விலகினீர்கள் என்பதை அறிய முடிந்தால் அது உங்கள் ஆளுமை, ஊக்கம் மற்றும் வருங்காலச் செயல்பாடு பற்றியும் அறிய முடியும். அதனால்தான் நேர்காணலில் அந்தக் கேள்வி- “ஏன் அங்கிருந்து வருகிறீர்கள்? நல்ல கம்பனி ஆயிற்றே!”

பதிலுக்கான தங்க விதி:

நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தைப் பற்றியோ அல்லது உங்கள் மேலதிகாரி பற்றியோ மோசமாகப் பேசாதீர்கள். அது நல்லதும் அல்ல. சாமத்தியமான செயலும் அல்ல. உங்கள் தேர்விற்குச் சற்றும் உதவாது.

அதற்காக ஆஹா ஓஹோ என்று பொய் சொல்ல வேண்டாம். “அவ்வளவு நல்ல கம்பனி என்றால் ஏன் அதை விட்டு வருகிறாய்?” என்று கேட்கலாம். உங்கள் பணி, கற்றல், வளர்ச்சி, எதிர்காலத் திட்டங்கள் என உங்களைச் சார்ந்த காரணங்களைப் பிரதானப் படுத்துங்கள். பழைய நிறுவனம் சார்ந்த காரணங்கள் வேண்டாம்.

இன்றைய சூழலில் மூன்றி லிருந்து ஐந்து வருடங்களாவது ஒரு வேலையில் இருப்பது நல்லது. அதற்குள் அடுத்த வேலை தேடினால் அதற்குப் பெரிய காரணங்கள் இருக்க வேண்டும்.

உங்கள் திறனும் தகுதியும் நீங்கள் பார்க்கும் வேலைக்கு அதிகமாக உள்ளது என்பதை நீங்கள் நிரூபிக்க முடிந்தால், அதுதான் நேர்காணல் வெற்றி. உங்கள் தேடலில்் நியாயம் பார்ப்பார்கள்.

இன்று 30 வயதில் ஜெனரல் மேனேஜர் ஆக முடியும். ஆசைப்படுவதில் தவறில்லை. அதற்கான தகுதியும், வாய்ப்பு கொடுத்தால் செய்வேன் என்ற நம்பிக்கையும் இருந்தால் நேர்காணலில் பரிசீலிப்பார்கள்.

என் நண்பர் ஒருவர் தொடர்ந்து வேலை தேடி நேர்காணல்களுக்குச் செல்வார். நல்ல வேலை.பிரமாதமான சம்பளம் இருக்கும். தன் பாஸிடமே சொல்லிவிட்டுச் செல்வார்: “என் சந்தை மதிப்பு தெரியணும் சார்!” அதே போல நேர்காணல் நிகழ்வுகளையும் பாஸிடமே பகிர்ந்துகொள்வார்.

இது ஏமாற்று வேலை இல்லையா என்று கேட்டால் அவர் சொல்வார்: “ஒரு வேலைக்கு இத்தனை பேர் களைப் பார்த்துப் பலரை நிராகரித்து ஒருவருக்கு வாய்ப்பு தருதல் நியாயம் என்றால் பல வேலைகள் கிடைத்து, அதில் பலவற்றை நிராகரித்து ஒன்றை ஏற்பதோ, அல்லது இருக்கின்ற வேலையில் சம்பளத்தைக் கூட்டுவதிலோ என்ன தவறு உள்ளது?”

உங்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைப்பது எவ்வளவு சிரமமோ, அதே போல நல்ல ஆள் கிடைப்பது நிறுவனத்திற்கு அவ்வளவு சிரமம். அதனால் இந்தச் சம வாய்ப்பை சமயோசித புத்தியுடன் கையாளுங்கள்.

ஏன் மாறுகிறீர்கள் என்ற கேள்வி பற்றி அதிகம் கவலைப் படாமல், சேர்ந்தால் என்ன செய்வீர்கள் என்று பட்டியல் இடுங்கள். அது அவர்களின் உரிய கவனம் பெறும். உங்கள் வேலை மாற்றத்தை அவர்களே உறுதி செய்யலாம்!

டாக்டர் ஆர். கார்த்திகேயன்- தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்