உலகின் மிகப் பெரிய அழிப்பான்!

By திலகா

எழுதுவதற்கும் வரைவதற்கும் அழிப்பானின் தேவை இன்றியமையாதது. பிடித்துக்கொண்டு அழிக்கும் வகையில் மிகச் சிறிய அழிப்பான்கள் முதல் மிகப் பெரிய அழிப்பான்கள் வரை கிடைக்கின்றன. சிலர் விதவிதமான அழிப்பான்களை வாங்கி, சேகரிப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்திருப்பார்கள்.

ஜப்பானின் ‘சீட்’ நிறுவனம் தயாரிக்கும் அழிப்பான்கள் மிகவும் புகழ்பெற்றவை. 40 ஆண்டுகளுக்குப் பிறகு, சீட் நிறுவனம் ‘ரேடார்’ என்ற பெயரில் இன்னும் தரமான அழிப்பான்களை அறிமுகம் செய்தது. தற்போது ரேடார் நிறுவனம் இரண்டே கால் கிலோ எடை கொண்ட அழிப்பானை உருவாக்கியிருக்கிறது. ரேடார் எஸ்-60 அழிப்பான்களைவிட இது 200 மடங்கு பெரியது. சிறிய அழிப்பானும் இந்த ராட்சச அழிப்பானும் ஒரே வகை ரப்பரிலிருந்து ஒரே மாதிரியான தரத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த ராட்சச அழிப்பானைத் தூக்க முடிந்தால், சிறிய அழிப்பானைப் போலவே நன்றாக அழிக்கிறது.

எதற்காக இவ்வளவு பெரிய அழிப்பான்?

இவ்வளவு பெரிய அழிப்பான் யாருக்கும் தேவைப்படாதுதான். ஆனால், சீட் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஒரு போட்டியை நடத்திவருகிறது. அந்தப் போட்டிகளில் மிகப் பெரிய அழிப்பான்களைத் தயாரித்திருக்கிறார்கள் ஊழியர்கள். அதே போல் சமீபத்தில் நடந்த போட்டியில்தான் இந்த ராட்சச அழிப்பானை ஓர் ஊழியர் தயாரித்தார். இது போன்று போட்டிகளுக்காகத் தயாரிக்கப்படும் அழிப்பான்களை விற்பனை செய்ய மாட்டார்கள். ஆனால், இந்த ராட்சச அழிப்பான் குறித்து சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. பலரும் இந்த அழிப்பானை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தனர். அதனால், இந்த ராட்சச அழிப்பானை வணிக ரீதியில் தயாரிக்க ரேடார் நிறுவனம் முடிவெடுத்தது.

இரண்டு கிலோவுக்கும் மேல் எடைகொண்ட அழிப்பான்களைத் தயாரிப்பது எளிதான விஷயமில்லை. தடிமனான ரப்பரைச் சூடாக்குவது கொஞ்சம் சவாலானது. ஆனால், ரேடார் நிறுவனம் அதைத் திறமையாகக் கையாண்டு, விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டது. ரேடாரின் சிறிய அழிப்பான்களைப் போலவே ராட்சச அழிப்பானும் தரமானது என்று சொல்கிறது அந்த நிறுவனம். ஒரு ராட்சச அழிப்பானின் விலை 8,216 ரூபாய்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE