விடைபெறும் 2022: அறிவியலின் முக்கிய நிகழ்வுகள்

By நிஷா

அறிவியலின் வளர்ச்சி ஒவ்வோர் ஆண்டும் அபரிமிதமாக வளர்ந்துவருகிறது. இதற்கு 2022ஆம் ஆண்டும் விதிவிலக்கல்ல. 2022இன் முக்கிய அறிவியல் நிகழ்வுகள் குறித்த பார்வை இங்கே:

பெண்களைவிட வேகமாக முதுமையடையும் ஆண்கள்

சமீபத்திய ஆய்வின்படி, ஆண்களுக்குப் பெண்களைவிட வேகமாக வயதாகிறது. உயிரியல் ரீதியாகப் பெண்களைவிட 4 வயது மூத்தவர்களாக ஆண்கள் இருக்கிறார்கள் என்றும், அதை இளம் வயது ஆண்களிடம் தெளிவாகக் காண முடியும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மனித ரத்தத்தில் நுண்ஞெகிழித் துகள்கள்

வரலாற்றில் முதல் முறையாக, மனித ரத்தத்தில் நுண்ஞெகிழித் துகள்கள் கலந்திருப்பது 2022இல் கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 80 சதவீதத்தினர், நுண்ஞெகிழித் துகள்களை ரத்தத்தில் கொண்டிருந்தனர். இந்த நுண் துகள்கள் உடலுக்குள் பயணித்து உள் உறுப்புகளில் தங்கக்கூடும் என்பதை இந்தக் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது.

புற்றுநோய்க்கு முடிவுரை

டோஸ்டார்லிமாப் என்பது ஒரு புற்றுநோய் மருந்து. அந்த மருந்தின் செயல்திறன் சோதனையின் ஒரு பகுதியாக, 12 புற்றுநோய் நோயாளிகளுக்கு அந்த மருந்து ஆறு மாதங்கள் வழங்கப்பட்டது. அந்தச் சோதனையின் முடிவுகள் 100% முழுமையான வெற்றியைக் காட்டின. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, உடல் பரிசோதனை, எண்டோஸ்கோபி, பிஇடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் ஆகியவை அந்த நோயாளிகளின் உடலில் புற்றுநோய் மறைந்ததை உறுதிசெய்தன. ஒரு மருந்துப் பரிசோதனை இதுபோன்ற அசாத்திய முடிவுகளைக் காட்டுவது இதுவே முதல் முறை.

ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட மூளை

ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வகத்தில் மூளைச் செல்களை வளர்த்தனர். அந்த மூளைச் செல்கள் 1970களின் வீடியோ கேம், பாங் போன்றவற்றை விளையாடக் கற்றுக்கொண்டன. மேலும், அவை சூழலை உணர்ந்து அதற்கேற்ப பதிலளிக்கும் தன்மையையும் கொண்டிருந்தன. ஸ்டெம் செல்கள், எலியின் கருமுட்டைகள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 8,00,000 செல்கள் அந்த ஆய்வகத்தில் ‘சிறுமூளையாக’ வளர்க்கப்பட்டன.

மீண்டும் உயிர்பெற்ற பன்றிகள்

மரணித்துச் சில மணிநேரமான பன்றிகளின் உடலினுள் ஊட்டச்சத்து நிறைந்த திரவத்தைச் செலுத்துவதன் மூலம் அவற்றின் உடலில் இருக்கும் இறந்த செல்களை அறிவியலாளர்கள் உயிர்ப்பித்துள்ளனர். அந்தப் பன்றிகள் சுயநினைவின்றி இருந்தபோதிலும், அவற்றின் மூளை, இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செல்கள் மீண்டும் செயல்படுவதற்கான அறிகுறிகளைக் காட்டின.

குழந்தை கருந்துளை

2022 டிசம்பரில் எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள் குவாண்டம் கணினியில் இரண்டு சிறிய கருந்துளைகளை வெற்றிகரமாக உருவகப்படுத்தி அவற்றுக்கிடையே ஒரு செய்தியை அனுப்பினார்கள். ஒரு பரந்துபட்ட பார்வையில் சொல்வது என்றால், விண்வெளியையும் காலத்தையும் சிதைக்காமல் ஒரு விண்வெளி நேரச் சுரங்கப்பாதையை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

செயற்கைக் கரு

விந்தணுவையோ கருமுட்டையையோ பயன்படுத்தாமல், எலியின் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி ஒரு செயற்கைக் கருவை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். அந்தக் கருவானது மூளையையும் இதயத்தையும் உருவாக்கியதோடு, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கு அடித்தளத்தையும் உருவாக்கியிருந்தது.

பிரபஞ்சத்தின் அற்புதம்

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, பிரபஞ்சம் முழுவதிலுமிருந்து பழங்கால ஒளியின் முதல் படங்களை அனுப்பியது. சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு நிகழ்ந்தது. அதிலிருந்து 100 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு உருவான ஆரம்பக்கால பிரபஞ்சத்தை விஞ்ஞானிகள் தற்போது படம்பிடித்துள்ளனர்.

எதிர்காலத்துக்கான தூய்மையான ஆற்றல்

ஓர் அணுசக்தி எதிர்வினையை, டிசம்பர் 2022 இல் முதன்முறையாக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். அந்த எதிர்வினை, அதைப் பற்றவைக்கப் பயன்படுத்தப்படும் லேசர் ஆற்றலைவிட அதிக ஆற்றலை உற்பத்தி செய்தது. இதைப் பயன்படுத்துவதன் மூலம், உலகின் வெப்பநிலையை உயர்த்தாமல் மனித இனத்தின் மின்சாரத் தேவைகளை வழங்குவதற்குக் கிட்டத்தட்ட வரம்பற்ற, கார்பன் இல்லாத ஆற்றலை உருவாக்க முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE