CIFF 2022 | 7 நாள்.. 7 படங்கள்..

By ஆர்.சி.ஜெயந்தன்

கோலாகலமாக நேற்று தொடங்கியது 20வது சென்னை சர்வதேசத் திரைப் படவிழா. மாநிலம் முழுவதிலுமிருந்து காட்சி ஊடகக் கலையைப் பயிலும் மாணவர்களும் உலக சினிமா ஆர்வலர்களும் சென்னையில் குவிந்திருக்கிறார்கள்.

எந்தத் திரையரங்கில், எத்தனை மணிக்கு, எந்த நாட்டுத் திரைப்படத்தைப் பார்க்கலாம் என்பதைத் தெரிவிக்கும் திரையிடல் அட்டவணை, படங்களின் கதைச் சுருக்கம் அடங்கிய சிற்றேடு இரண்டையும் புரட்டிப் பார்த்து, அலசி ஆராய்ந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

ஒரு நாளைக்கு நான்கு படங்களைப் பார்த்தே தீருவது என்கிற துடிப்புடன் திரையரங்கிலேயே குடியேறிவிடும் உலக சினிமா காதலர்கள் நிறைய பேர் உண்டு. வேறு சிலர் ஒரு நாளைக்கு ஒரு சிறந்த படத்தையாவது பார்த்துவிடத் துடிப்பார்கள். இவர்கள் அனைவருக்காகவும் பட விழாவின் இரண்டாம் நாளான இன்று தொடங்கி 22ஆம் தேதி வரை 7 நாட்களில் தவறவிடக் கூடாத 7 படங்களின் சுருக்கமான அறிமுகம் இங்கே:

மனதையும் திருடும் மாயக்காரன்: பெர்லின் நகரம். அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தனியே வசித்து வருகிறார் அன்னா. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புகழ்பெற்றத் திரைப்படத் தாரகை. தற்போது பட வாய்ப்புகள் அற்றுப் போய்விட்ட நிலையில், வாழ்க்கையை கௌரவமாக நடத்த வேறு வேலை செய்யலாம் என்கிற முடிவுக்கு வருகிறார். அதே குடியிருப்பின் கீழ்த்தளத்தில் வசிக்கும் மைக்கேலும் அன்னாவின் வயதையொத்தவர். அவரும் தனியாள். அன்னாவுக்குப் பேச்சுத் துணையாக அமைந்துபோகிறார்.

அன்னாவின் பொலிவான தோற்றத்தைக் காணும் யாரும் நடுத்தர வயதைக் கடந்தவர் என்று நம்ப மாட்டார்கள். இந்நிலையில்தான் அந்தச் சம்பவம் நடக்கிறது. அன்னா தெருவில் நடந்து செல்லும்போது அவரது கைப் பையை ஓர் இளைஞன் அபேஸ் செய்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிக்கிறான். நாட்கள் நகர்கின்றன. அன்னாவிடம் குரல் பயிற்சியும் உச்சரிப்புப் பயிற்சியும் எடுப்பதற்காக இளைஞன் ஒருவன் வருகிறான். அவனது பெயர் அட்ரியன். அவனுக்குப் பயிற்சியளிக்கும் அன்னா, பையை அபகரித்துச் சென்ற ஆசாமி அவன்தான் என்பதைக் கண்டுபிடிக்கிறார்.

கோபம் தலைக்கேறுகிறது. மோதலாக முடிய வேண்டிய கதை, நட்பாக முகிழ்க்கிறது. இருவருமே அந்தக் குறிப்பிட்ட நாளின் மோதலைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கின்றனர். நட்பின் அடுத்தக் கட்டப் பரிமாணம் அவர்களை எந்த எல்லைக்கு அழைத்துச் செல்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள நீங்கள் ‘ஏஇஐஓயூ’ (A E I O U) படத்தைப் பார்க்க வேண்டும். ஜெர்மானிய நடிகரும் இயக்குநருமான நிக்கோலெட்ஸ் கிரிபெட்ஸ் இயக்கியிருக்கும் இப்படம் பெண் பார்வையாளர்களுக்கு பிரத்யேகக் காட்சியாகவும் திரையிடப்படுகிறது.

ஆக்கிரமிப்பில் துயருறும் எழுத்தாளர்! - கடந்த 74 ஆண்டுகளாக மத்திய கிழக்கின் அமைதிக்குச் சவாலாகத் தொடர்வது இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினை. இஸ்ரேலில் சிறுபான்மையினராக வசிக்கும் பாலஸ்தீனர்களைப் பற்றி பல உலக சினிமாக்கள் வந்திருக்கின்றன. இது 2022இன் மிக முக்கியமான படம். விரக்தியும் தோல்வியும் அழுத்தும் மனச் சிக்கலில் உழலும் வலீத், இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை.

இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமான ஹைஃபாவின் கடற்கரையோரக் குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் இவரது கனவு, ஒரு நாவலாசிரியராக வெற்றி பெறுவது. ஆனால், ஒரு வரிகூட எழுத முடியாத அளவுக்கு இடையூறுகளைச் சந்திக்கிறார். அண்டை வீட்டுக்குக் குடிவரும் ஜமால், நாவல் எழுத வலீத் உட்காரும்போதெல்லாம் பாப் இசையை அலற விடுகிறார். இன்னும் பல சேட்டைகள்.

எதிர்பாராத விதமாக இருவேறு கலாச்சாரப் பின்புலங்களைக் கொண்ட வலீத்தும் ஜமாலும் மானுடப் பேரன்பின் இழையில் எப்படி இணைந்தார்கள் என்பதே மஹா ஹஜின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மெடிட்டரேனியன் ஃபீவர்’ ( Mediterranean Fever) திரைப்படம். நிரந்தரமான ஆக்கிரமிப்பில் வாழும் பாலஸ்தீனர்களின் மனச்சோர்வு, முடிவில்லாமல் தொடரும் அவர்களது தேசியத் துயரத்தின் உருவகமாக இந்தப் படத்தின் திரைக்கதையிலும் கதாபாத்திர எழுத்திலும் துலங்குவதை இப்பிரச்சினையின் வரலாற்றுப் பின்னணியுடன் புரிந்துகொள்ளமுடியும்.

ஜபார் பனாஹியின் பாய்ச்சல்! - ஈரானிய சினிமாவுக்கு மறுமலர்ச்சியைத் தந்த புரட்சி இயக்குநர் ஜாபர் பனாஹி. நாட்டை விட்டு வெளியேற முடியாமலும் வீட்டுச் சிறையில் இருந்தபடியும் இவர் உருவாக்கிய படங்கள் ஈரானிய சினிமாவில் புதிய உருவாக்கியவை. இவரது திரையுலகச் செயல்பாடுகளுக்கு விருது கொடுப்பதற்குப் பதிலாக 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, அவரைக் கைது செய்து கடந்த ஜூலை மாதம் சிறையில் அடைத்தது ஈரான் அரசு. கைது செய்யப்படும் சில மாதங்களுக்கு முன் இவர் ரகசியமாக ஒளிப்பதிவு செய்து உருவாக்கிய படம்தான் ‘நோ பியர்ஸ்’ (No Bears). இயக்குநர் சிறையில் இருக்கும்போதே 79 வது வெனிஸ் திரைப்பட விழாவில் உலகப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட இப்படம், நடுவர்கள் சிறப்பு விருதை வென்றிருக்கிறது.

இந்தப் படத்திலும் பனாஹி தனது நிஜக் கதாபாத்திரத்தையே ஒரு சுயசரிதைபோல் முன் வைத்திருக்கிறார். துருக்கி எல்லைப் பகுதிக்குச் செல்லும் பனாஹி, அங்கே தனது திரைப்படப் பணிகளை தொடர்கிறார். எதிர்பாராத சிக்கலில் தவிக்கும் ஒரு காதல் இணையைச் சந்திக்கும் அவர், அவர்களைப் பின்தொடர்வதுதான் கதை. திரைமொழியின் வழியாக அதிகார வர்க்கத்துக்கு எதிரான குரலை முன்வைக்கும் ஒரு சுதந்திர விரும்பியின் மௌனமான கேள்விகள்தான் பனாஹியின் படைப்புகள். அவரது அடுத்தக் கட்ட பாய்ச்சல் இப்படம்.

காதலுக்கும் நோய்க்குமான கைகலப்பு: விஜய், அஜித் படங்களில் டூயட் பாடல்களின் லொக்கேஷனாக, சுவிட்சர்லாந்து நாட்டின் பனி மூடிய ஆல்ப்ஸ் மலைகளைக் கனவுப் பிரதேசம்போல் பார்த்துப் பழகிய அனுபவம் தமிழ் ரசிகர்களுக்கு உண்டு. அதே ஆல்ப்ஸ் மலை கிராமம் ஒன்றின் அசலான வாழ்க்கையை ‘எ பீஸ் ஆஃப் ஸ்கை’ (A Piece of Sky) என்கிற சுவிஸ் நாட்டுத் திரைப்படத்தின் மூலம் காணலாம். மார்கோ ஒரு திடகாத்திரமான இளைஞன். அந்த விவசாய மலையக கிராமத்துக்குப் பிழைக்க வருகிறான்.

மலை விவசாயம் மிகவும் கடினமானது. அதன் செங்குத்தான சரிவுகளில் இறங்கி வெகு எச்சரிக்கையாகப் பசும் புல்லை கால்நடைகளுக்கு எடுத்துவர வேண்டும். தனது கடுமையான உழைப்பால் அந்தக் கிராமத்து மனிதர்களின் அன்பை மட்டுமல்ல; உள்ளூர் பெண்ணான அன்னாவின் காதலையும் பெறுகிறான். திருமணம் அவர்களது காதலை இன்னும் பிணைக்கிறது. ஆனால் மார்கோவைத் தாக்கும் உடல்நலப் பிரச்சினையில் அந்தக் காதல் தன்னைத் தக்க வைத்துக்கொண்டதா, இல்லையா என்பதை காதலின் குளிருடன் காட்சியாக்கித் தந்திருக்கிறார் சுவிஸ் இயக்குநரான மைக்கேல் கோச்.

பாடம் கற்றுத் தரும் இயற்கை: நாம் பகட்டான மனிதர்களாகவும் இருக்கலாம். செல்வம் உங்கள் காலடியில் கரைபுரண்டு ஓடலாம். ஆனால், இயற்கை நினைத்தால் உங்களை அடுத்த வேளை உணவுக்குக்கூடக் கையேந்த வைத்துவிடும் என்பதைத் துள்ளும் இளமையோடும் சூழ்நிலையில் வெடிக்கும் எள்ளல் நகைச்சுவையோடும் உங்கள் முன் விரிக்கிறது மற்றொரு சுவிஸ் இயக்குநரான ரூபன் ஊட்ஸ்லேன்ட்டின் ‘ட்ரையாங்கிள் ஆப் சாட்னெஸ்' (Triangle of Sadness) திரைப்படம்.

பிரபல மாடல் ஜோடிகளான கார்ல், யயா இருவரும் உலகப் பெரும் செல்வந்தர்கள் பயணிக்கும் க்ரூஸ் சொகுசுக் கப்பலில் இன்பச் சுற்றுலா செல்கிறார்கள். பணச் செருக்கும் மதுவும் காமமும் வழிந்தோடும் அந்தப் பயணத்தை பெருமிதத் தருணங்களாகப் பகிர்ந்துகொள்கிறார்கள் பயணிகள். எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகும் அக்கப்பல், உணவுக்குக்கூட வழியற்ற ஒரு தீவில் தரை தட்டிக் கவிழ்கிறது. உயிர் பிழைக்கும் போராட்டத்தில் பணம் படைத்தவர்களின் குணச்சித்திரங்கள் இயற்கையின் முன்னால் என்ன பாடு படுகின்றன என்பதை மனம் விட்டுச் சிரித்து ரசிக்கலாம்.

மீண்டும் பிறக்கும் இருவர்! - கடந்த 2018இல் கான் படவிழாவின் போட்டிப் பிரிவில் தங்கப் பனை விருதை வென்ற ‘ஷாப்லிப்டர்ஸ்’ (Shoplifters) படத்தைத் தந்த புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குநர் ஹிரோகாசு கொரீடாவின் புதியத் திரைப்படம் ‘புரோக்கர்’ (Broker). தேவாலயத்தின் குழந்தைகள் தொட்டிலில் நிராதரவாக விட்டுச் செல்லப்படும் பச்சிளம் சிசுக்களைத் திருடி, குழந்தையில்லாதவர்களுக்கு விற்றுப் பணம் பார்க்கும் இருவர் நண்பர்களாக இருக்கிறார்கள். தன் குழந்தையைத் தேவாலயத் தொட்டிலில் போட்டுவிட்டு, சில நிமிடங்களில் மனம் மாறித் திரும்ப வரும் பெண்ணிடம் வசமாகச் சிக்குகிறார்கள்.

அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக அவர்கள் இருவரையும் அவள் ஒரு பயணம் அழைத்துச் செல்கிறாள். அந்தப் பயணத்தில் அந்த இருவரும் மீண்டும் புதிய மனிதர்களாகப் பிறக்கிறார்கள். ஹிரோகாசுவின் படங்கள் வாழ்வாதாரத் தேவைக்காக குற்றங்களை நோக்கி நகரும் சாமானிய மனிதர்களின் உலகைப் பேசுபவை. அவநம்பிக்கையாக முன்வைக்கப்படும் பிரச்சினைகளை, அவர் எப்படி நம்பிக்கையாக மாற்றுகிறார் என்பதுதான் அவரது திரைமொழியின் அணுகுமுறை. இந்தப் படத்திலும் அந்த கலாபூர்வத்தை ரசிகக்கலாம்.

பதின்மத்தின் பாடம்! - அது 1994ஆம் வருடம். பெற்றோரைப் பிரிந்த பதினைந்து வயது சோபியா மெக்சிகோவின் லாஸ் அர்போலேடாஸ் என்கிற சிறிய நகரத்தில் தனது தங்கையுடன் குடியேறுகிறாள். பெற்றோரின் வழிகாட்டுதல் இல்லாத, பதின்மத்தின் ஊற்றாகப் பீறிடும் உணர்வுகளின் ஊஞ்சலில் படபடக்கும் அவள், தன் வயதையொத்த ஈவாவைச் சந்திக்கிறாள். ஈவாவின் கலக மனப்பான்மையும் அவளது சாகச குணங்களும் அவளுடன் நெருக்கத்தை உருவாக்குகின்றன.

புதிய தோழமையும் உறவும் சோபியாவுக்கு கற்றுத்தரும் பாடங்களும் வாழ்க்கை பற்றிய புரிதலும் என்ன என்பதை, மெக்சிக இயக்குநரான மார்செலினோவின் ‘மை கேர்ள்ஃபிரெண்ட் இஸ் தி ரெவல்யூஷன்’ (My Girlfriend Is the Revolution) படத்தில் கண்டு வியக்கலாம். - தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 mins ago

சிறப்புப் பக்கம்

25 mins ago

சிறப்புப் பக்கம்

57 mins ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

மேலும்