நம்மில் பலருக்கும் புதுப் புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால், கற்றுக்கொள்ளத் தொடங்கும்போது அந்த விஷயத்தின் கடினத்தன்மை நம் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போடும். அதனால் நமக்குச் சலிப்பு ஏற்பட்டு ஆரம்பித்த இடத்திலேயே விட்டுவிட்டுப் போய்விடுவோம். பார்ப்பதற்கு எளிமையாகவும் ஆர்வமூட்டும் விதத்திலும் தோன்றும் விஷயங்கள் கூட இவ்வளவு கடினமாக இருப்பதேன் என்ற விரக்தியான கேள்வியும் நம்முள் அடிக்கடி எழும். கற்றலில் இருக்கும் இந்தச் சிக்கல்களுக்கு எளிமையான நான்கு சூத்திரங்களைச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற ரிச்சர்டு ஃபெய்ன்மன். இதைக் கொண்டு எந்த விஷயத்தையும் கற்றுக்கொள்ளலாம்.
முதல் சூத்திரம்: இலக்கைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்!
ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் விஷயம் என்ன என்பதைத் தாளில் மேல் பகுதியில் எழுதிக்கொள்ளுங்கள். பரிணாமம், கருந்துளை, பெருவெடிப்பு, இலக்கணம் இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எதைக் கற்றுக்கொள்ளப் போகிறோம் என்ற தெளிவு உங்களுக்கு இருக்க வேண்டும். அந்த விஷயத்தைப் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரிகிறதோ அவற்றையெல்லாம் எழுதிக்கொள்ளுங்கள்.
இரண்டாவது படி: குழந்தைக்குச் சொல்லிக்கொடுங்கள்!
நீங்கள் கற்க விரும்பும் அந்த விஷயத்தை 5 வயது சிறுவனுக்கு பாடம் போல் நடத்துவதாகக் கற்பனை செய்துகொண்டு எழுதுங்கள். “ஆறு வயது குழந்தைக்கு உங்களால் ஒரு விஷயத்தை விளக்கிச் சொல்ல முடியவில்லை என்றால் அந்த விஷயத்தை நீங்களே புரிந்துவைத்திருக்கவில்லை என்றுதான் அர்த்தம்” என்று ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் கூறியிருக்கிறார்!
ஐன்ஸ்டைனின் E = mc 2 சமன்பாடு சிறுவர்களுக்குக் கூடத் தெரியும் அளவுக்குப் பிரபலம் என்றாலும் அதன் அர்த்தம் அவர்களுக்குத் தெரியாது அல்லவா? சரி, நம்மைக் கேட்டால் நிறை, ஒளிவேகம், ஆற்றல், சார்பியல் என்று கலைச்சொற்களைப் பயன்படுத்தி விளக்குவோம். சிறுவர்களுக்கு அது புரியுமா? ஒரு பொருளில் உறைந்திருக்கும் அளப்பரிய ஆற்றலைப் பற்றியது அந்தச் சமன்பாடு. அதை எளிய உதாரணங்களைப் பயன்படுத்திச் சொன்னால் சிறுவர்களுக்குப் புரியக்கூடும்.
ஒரு காகிதத்தை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். ஒரு தீக்குச்சியை உரசி, காகிதத்தில் வைத்துப்பாருங்கள், காகிதத்துக்குள் உறைந்து கிடக்கும் சக்தி எவ்வளவு என்பது புரியும்! இப்படி எளிய உதாரணங்களைக் கண்டுபிடித்துச் சிறுவர்களுக்குப் புரியும்படிச் சொல்லிப் பார்க்க வேண்டும். ஃபெய்ன்மேன் கூறிய இரண்டாவது படியைப் பின்பற்றிப் பார்த்தால் எவ்வளவு சிக்கலான விஷயத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்?
மூன்றாவது படி: திரும்பிப் பாருங்கள்!
நீங்கள் கற்றுக்கொள்ளும் விஷயத்தில் குறிப்பிட்ட ஒரு இடம் உங்களுக்கு ஒழுங்காகப் புரியவில்லை என்றால் எந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் கற்கிறீர்களோ அந்தப் புத்தகத்தை எடுத்து, குறிப்பிட்ட அந்தப் பகுதியைத் தெளிவாக ஒரு முறை படித்துப்பாருங்கள். ஒரு காகிதத்தை எடுத்துக்கொண்டு ஃபெய்ன்மன் விதிப்படி அந்த விஷயத்தை எளிமையாக எழுதிப் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படித் தொடங்கிய இடத்துக்குத் திரும்பிச் செல்வது கற்றலில் முக்கியம்.
நான்காவது படி: மறுபடியும் முதலிலிருந்து…
நீங்கள் இதுவரை எழுதி வைத்திருக்கும் குறிப்புகளையும் விளக்கங்களையும் திரும்ப ஒரு முறை வாசித்துப் பாருங்கள். மூல நூலில் உள்ள கலைச்சொற்கள், விளக்கங்கள் ஏதும் உங்கள் குறிப்புகளில் இடம்பெற்றிருக்கின்றனவா என்று பாருங்கள். அப்படி இடம்பெற்றிருந்தால் அவற்றை எளிமையான மொழிக்கு மாற்றி எழுதுங்கள். இப்போதும் உங்கள் விளக்கம் எளிமையாகவும் தெளிவாகவும் இல்லையென்றால் உங்களுக்குப் புரிதல் போதாது என்றே அர்த்தம். மறுபடியும் முதலிலிருந்து தொடங்குங்கள்! நான்காவது படியில் முக்கியமான இன்னொரு விஷயம், நீங்கள் அளிக்கும் விளக்கங்களுக்கு ஒப்புமைகளை உருவாக்குவது.
உதாரணத்துக்கு, சார்பியல் கோட்பாட்டைப் புரிந்துகொண்டவர் உலகிலேயே மூன்று பேர்தான் என்றொரு புகழ்பெற்ற வதந்தி சார்பியல் கோட்பாட்டின் தொடக்க காலத்தில் உண்டு. அந்த அளவுக்குக் கடினமானதாகக் கருதப்படும் சார்பியல் கோட்பாட்டையே ஐன்ஸ்டைன் மிக எளிமையான ஒரு ஒப்புமையின் மூலம் புரியவைத்தார். “சூடான அடுப்பின் மீது ஒரே ஒரு நிமிடம் உங்கள் கைகளை வைத்திருந்தாலும் அது ஒரு மணி நேரம் போல் உங்களுக்குத் தோன்றும். அழகான பெண்ணொருத்தியுடன் ஒரு மணி நேரம் உட்கார்ந்துபாருங்கள், அந்த ஒரு மணி நேரமும் ஒரு நிமிடம் போல் உங்களுக்குத் தோன்றும். அதுதான் சார்பியல் கோட்பாடு” என்று சொன்னார் ஐன்ஸ்டைன்.
இதுபோல் எளிய, நகைச்சுவையான, சுவாரசியமான ஒப்புமைகளைக் கொண்டு உங்கள் விளக்கங்களை எழுதிப் பார்த்தால் அது புரிதலுக்கு மிகவும் உதவும். இவ்வளவு எளிமையான சூத்திரங்களைக் கொண்டு எப்படிக் கடினமான விஷயங்களைக் கற்றுக்கொள்வது என்ற சந்தேகம் நமக்கு வரலாம். இந்த சூத்திரங்களின் பயன்பாடு நடைமுறையில் நிரூபணமான ஒன்று. ஆகவே, ஃபெய்ன்மேன் துணையுடன் தொடங்கட்டும் உங்கள் கற்றல் செயல்பாடு!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago