ஒரு திரைப்படம், நிகழ்வு என எதுவாயினும் அதை வேகமாகவும் வீச்சுடனும் கொண்டு சேர்க்கும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன். கடந்த 27 ஆண்டுகளாக 450 படங்களைக் கடந்து பணிபுரிந்து வரும் இவர், தற்போது ‘பவுடர்’ படத்தின் மூலம் ஒரு நடிகராகவும் அடியெடுத்து வைத்திருக்கிறார் நிகில். அவரிடம் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
திரைப்பட மக்கள் தொடர்புத் துறைக்கு எப்படி வந்தீர்கள்? நீங்கள் பணியாற்றிய முதல் படம் எது? - பத்திரிகையாளனாக ஆக வேண்டும் என்பது என் பள்ளிக் காலக் கனவு. காரணம், என்னுடைய தாத்தா டி.எஸ்.சொக்கலிங்கம் ‘மணிக்கொடி’ இலக்கிய இதழைத் தொடங்கிய மூன்று பேரில் ஒருவர். ‘தினமணி ’ பத்திரிகைத் தொடங்கப்பட்டபோது அதன் முதல் ஆசிரியராக பொறுப்பேற்று பணி புரிந்தவர்.. ‘பேனா மன்னன்’ என்று பாராட்டப்பட்ட அவரது தலையங்கம் ஒவ்வொன்றும் அந்தக் காலத்தில் பேசப்பட்டன என்று அப்பா சொல்லியிருக்கிறார்.
தாத்தாவின் வழியில் செல்வது என்று முடிவெடுத்ததும் மைசூர் பல்கலைக்கழகத்தில் ‘டிப்ளமோ இன் ஜர்னலிசம்’ படித்து முடித்துவிட்டு பத்திரிகையுலகில் வேலை தேடினேன். தாத்தா பணிபுரிந்த தினமணியில் சேர வேண்டும் என்று விரும்பினேன். ‘முதலில் ‘ப்ரீலேன்ஸர்’ ஆக எழுதுங்கள்’’ என்று அங்கே உதவி ஆசிரியராக இருந்த தமிழ்மகன் எனக்கு எழுதும் முதல் வாய்ப்பைக் கொடுத்தார். பிறகு, வண்ணத்திரை, பொம்மை, சினிமா எக்ஸ்பிரஸ் என்று சினிமா பத்திரிகைகளில் எழுதினேன். அப்போது, பாக்யராஜ் சாருக்கு மக்கள் தொடர்பாளராக இருந்த ‘சினி நியூஸ்’ செல்வத்தின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் உதவியாளராக சேர்ந்து 6 வருடங்கள் பணிபுரிந்தேன்.
எனக்குத் தனியாகப் பல பட வாய்ப்புகள் வருவதைப் பார்த்த அவர், ‘இதற்குமேல் உனக்கு பயிற்சி தேவையில்லை. இனி தனியாகச் சென்று நீ இயங்கலாம்’ என்று ஆசீர்வதித்து அனுப்பினார். இயக்குநர்கள் இணையான ஜேடி - ஜெர்ரியின் விளம்பரப் படங்களுக்கு நான் பணிபுரிந்திருந்ததால், அவர்கள் முதன் முதலாக இயக்கிய ‘உல்லாசம்’ படத்துக்கு என்னை மக்கள் தொடர்பாளராக நியமித்தார்கள்.
» ஆவடி | மகன் உயிரிழந்த சோகத்தில் தம்பதி தற்கொலை
» ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திருத்தியமைப்பு
இத்துறைக்குள் நுழைந்தபோது உங்கள் வெற்றியைத் தீர்மானித்தது எது? - சினிமாவில் ‘மக்கள் தொடர்பு அலுவலர்’ என்று சொல்வதில் முரண்படுகிறேன். உண்மையில் இதைப் ‘பத்திரிகைத் தொடர்பு அலுவலர்’ என்று சொல்வதே சரி. பத்திரிகைகள், ஊடகங்கள் ஆகியவற்றுக்கும், படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் இடையே தகவல் பரிமாற்றத்துக்கு ஒரு பாலம்போல் செயல்படுகிற பணி. இதில் என்ன செய்ய வேண்டும் என்பதைவிட, எதையெல்லாம் செய்யக் கூடாது எனத் தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல், தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் வேகமும் துல்லியமும் மிக முக்கியம். பத்திரிகையாளனாக பணிபுரிந்த அனுபவத்தால், வார இதழ்கள், இருவார இதழ்கள், மாத இதழ்கள், நாளிதழ்கள் ஆகியவற்றுக்குச் செய்திகளைக் கொண்டு சேர்க்க ‘டெட்லைன்’ என்பது எவ்வளவு முக்கியம் என்று தெரியும். பத்திரிகைகளுக்கும் செய்திப் பசி உண்டு. அதைப் புரிந்துகொண்டு பேட்டிகளை ஒருங்கிணைப்பு செய்து, செய்திகளை முன்னதாகவே கொண்டு சேர்த்துவிடுவேன். அவை சரியான சமயத்தில் ‘பப்ளிஷ்’ ஆகிவிடும். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
மக்கள் தொடர்பாளர் வழியாகப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் மரபு, திரையுலகில் அருகிக்கொண்டு வருகிறது. மக்கள் தொடர்பாளர்களின் தேவையை சமூக ஊடகங்கள் குறைத்துவிட்டன அல்லவா? - நிறையவே..! வி.சி.டி. அறிமுகமானபோது ‘திரையுலகத்துக்குக் கேடு.. அதைத் தடை செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து திரையுலகினர் தலைமைச் செயலகம் நோக்கிப் பேரணி நடத்தினார்கள். அந்தப் பேரணியில் கலந்துகொள்ளாத ஒரே கலைஞர் கமல் சார். ‘தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்க முடியாது.
எனவே அதன் வளர்ச்சிக்கு ஏற்ப நம்மை மாற்றிகொள்ள வேண்டும்’ என்று அவர் சொன்னார். அப்போது அதை யாரும் ஏற்றுகொள்ளவில்லை. இன்றைக்கு விசிடி போய் டிவிடி, ப்ளூ ரே ‘டேட்டா டிரான்ஸ்ஃபர்’ வரை வந்துவிட்டது. அனைத்தையும் திரையுலகம் இன்று பயன்படுத்திக்கொள்கிறது. அப்படித்தான் சமூக ஊடகங்களின் வளர்ச்சியையும் பார்க்கிறேன். ட்விட்டர் அறிமுகப்படுத்தப்பட்டபோதே, அதில் இணைந்து எனது ஊடகத் தொடர்புப் பணியை மேலும் விரிவாக்கினேன்.
இன்று அதில் என்னை 4 லட்சத்து 88 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். டிவிட்டர் தவிர, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட பிரபலமான சமூக ஊடக்கங்களில் ஒட்டுமொத்தமாக 1.5 கோடி பேர் என்னைப் பின் தொடர்கிறார்கள். முன்பெல்லாம் பிரபலங்களைப் பேட்டியெடுக்க வேண்டும் என்றால் ‘அவருடைய பி.ஆர்.ஓ’ யாரென்று கேட்டு, அவரை அணுகி, நேரம் பெற்று அதன்பின்னர்தான் ஒரு பத்திரிகையாளர் பேட்டியெடுப்பார். இன்று வாட்ஸ் அப் குழுக்களில் ‘பேட்டியெடுக்க அவருடைய மொபைல் நம்பர் அனுப்புங்கள்’ என்று கேட்டு பெற்றுக்கொண்டு அவர்களே எடுத்துவிடுகிறார்கள். இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டால்தான் இத்துறையில் ‘சர்வைவ்’ ஆக முடியும்.
அதேபோல், ‘இந்த நடிகர் தனது ட்விட்டரில் கூறியதாவது.. தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.. இண்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்’ என செய்திக்கான ஆதாரமாக சமூக ஊடகங்களை தயக்கமின்றி குறிப்பிடுவதை பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் ஏற்றுக்கொண்டுவிட்டன.
கமல் - ரஜினி ஆகிய உச்ச நட்சத்திரங்களுக்குப் பணிபுரிந்தபோது நீங்கள் கற்றுக்கொண்டது என்ன? - எதுவொன்றைக் கையிலெடுத்துவிட்டாலும் அதில் கடைசிவரை முட்டிமோதிப் பார்த்துவிட வேண்டும். அதில் நமக்குக் காயம் ஏற்படலாமே தவிர, அடுத்தவர்களுக்கு சின்ன சிராய்ப்புகூட இருக்கக் கூடாது. ‘இது கஷ்டம்! இது முடியாது! இதற்கு அதிக செலவு பிடிக்கும்’ என்று பின் வாங்கக் கூடாது என்கிற முயற்சியைக் கமல் சாரிடம் கற்றுக்கொண்டேன்.
எத்தனை உயரத்தை வாழ்க்கை கொடுத்தாலும் காலின் பிடிமானம் தரையில் இருக்க வேண்டும் என்பதை ரஜினி சாரிடம் கற்றுக்கொண்டேன். மனிதர்களை அணுகும்போது ‘ஆக் ஷன் - ரீயாக் ஷன்’ என்பதில் அவரளவுக்கு பக்குவப்பட்ட ஓர் ஆளுமையைப் பார்க்க முடியாது.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ‘பவுடர்’ படத்தில் நடிகராகக் களமிறங்கி இருக்கிறீர்களே..? - சாருஹாசன் நடித்திருந்த ‘தாதா 87’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அப்படத்தின் இயக்குநர் விஜய் ஜியுடன் வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கே கோயிலில் இருந்த குருக்கள் ‘நீங்க நிகில் முருகன்தானே..! ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?’ என்று கேட்டு மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்டார்.
வழிபாடு முடித்து வெளியே வந்தபோது இரண்டு குடும்பத்தினர் என்னை அடையாளம் கண்டுகொண்டு அன்பைப் பொழிந்து, அவர்களும் செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். இதைப் பார்த்த விஜய் ஸ்ரீ ஜி, “ஆள் அரவமற்ற புறநகரில்கூட உங்கள் முகம் பதிவாகியிருக்கிறது. எனது அடுத்த படத்தில் நடியுங்கள்” என்றார். நான் மறுத்தேன். “உங்களை ஹீரோவாக நடிக்க அழைக்கவில்லை. எனது அடுத்த படத்தில் ஐந்து கதைகள், அதில் ஐந்து முக்கிய கதாபாத்திரங்கள்.
அதில் ஒன்று, அந்தக் கதைகளை இணைக்கும் மிக முக்கியமான காவல் அதிகாரி கதாபாத்திரம். அதில் நடியுங்கள்.” என்றார். கதையையும் என் கதாபாத்திரத்தையும் கேட்டபோது மறுக்கவே முடியவில்லை. நிறைய பயிற்சி, ஒத்திகைக்குப் பின் நடித்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது. தொடர்ந்து நடிப்பீர்களா என எல்லோரும் கேட்கிறார்கள். எனது களம் மக்கள் தொடர்பு. அதில்தான் என்னுடைய முழு கவனமும் இருக்கும். அதே நேரம், குணச்சித்திர நடிகர்களுக்கான ஆரோக்கியமான ஓர் இடமும் தேவையும் தமிழ் சினிமாவில் எப்போதும் உண்டு. எனது செய்தித் தொடர்புப் பணி தடை படாத வகையில் அந்தக் களத்திலும் பணிபுரிய நான் தயார்! - ஆர்.சி.ஜெயந்தன், jesudoss.c@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago