திரைப் பார்வை| முகுந்த உன்னி அசோசியேட்ஸ் (மலையாளம்) மரணத்தின் அதிபதியாக ஓர் ஆண் தேவதை!

By ஆர்.சி.ஜெயந்தன்

தற்கால மலையாள சினிமா, மாஸ் மசாலா படங்களையும், வாழ்க்கைக்கு நெருக்கமான நிகழ்வுகளை அங்கதமாகச் சித்தரிக்கும் சமூக, அரசியல் நையாண்டிப் படங்களையும் கொடுத்து வருகிறது. அதேநேரம், தமிழ் சினிமாவைப் போல் எந்த வகைக் கதைக் களம் என்றாலும் அதையொரு த்ரில்லராக சித்தரிக்கும் எத்தனத்தையும் பின்பற்றி வருகிறது. ஆனால், திரைக்கதையை ஒரு நட்சத்திர நடிகருக்கு இணையாக நம்பி, அதில் கவனம் செலுத்துவதில் தனது ஆழமான நம்பிக்கையை இந்த நிமிடம் வரை அது கைவிடவில்லை. அதற்கு எடுத்துக்காட்டாக அட்டகாசமான திரைக்கதையுடன் வந்திருக்கும் மற்றொரு அறிமுக இயக்குநரின் படம் தான் ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’.

முகுந்தன் உன்னி, ஒரு மூத்த வழக்கறிஞரிடம் உதவியாளராக பல ஆண்டுகளைக் கழித்துவிட்ட 36 வயது வழக்கறிஞர். சீனியர் தனக்கொரு வழக்கைப் பிடித்துக் கொடுப்பார்; தானும் ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆகிவிடலாம், பெரிய பணக்காரன் ஆகிவிடலாம் என்கிற அவனுடையக் காத்திருப்பும் கனவும் பொய்த்துப்போகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் சீனியராலேயே துரத்தியடிக்கப்படுகிறான். சொந்தக் காலில் நின்று நேர்மையான முறையில் முன்னேற நினைப்பவனுக்கு வழங்குகள் எதுவும் கிடைக்காத நிலையில், அவனுடைய அம்மாவுக்கு வீட்டில் ஏற்படும் ஒரு விபத்து, முகுந்தனை ஒரு கண்டுபிடிப்பாளனாக மாற்றுகிறது. அம்மாவின் உடைந்த காலுக்கு அறுவை சிகிச்சை செய்யத் தேவைப்படும் பணம் அவனிடம் இல்லாவிட்டாலும் அது வந்துசேர்ந்த வழியை, தனது தொழில் வாழ்க்கைக்கான தீப்பொறியாக மாற்றிக் கொள்கிறான். அதையே தீப்பந்தமாக மாற்றும் அவனது தடாலடி முயற்சிகளில் அவன் எதிர்கொள்ளும் தடைகளும் சிக்கல்களும் பெற்றுக்கொள்ளும் பாடமும் என்ன என்பதுதான் கதை.

முகுந்தன் உன்னி: மின்னுவதெல்லாம் பொன்னல்ல..

தமிழில் கடந்த 2014இல் பி.ரமேஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘தெகிடி’ திரைப்படம், ‘இன்சூரன்ஸ்’ தொழிலின் பின்னால் நடக்கச் சாத்தியமுள்ள கொலைக் குற்றங்களை கற்பனையாக ஆனால், நிஜம்போல் முன்வைத்தது. ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’, வாகன விபத்துக் காப்பீட்டு உலகில் இயங்கும் மாஃபியா கும்பலைப் பெரும் பகடியுடன் முன்வைத்துள்ளது. வழக்கறிஞர்கள், போலீஸ்காரர்கள், மருத்துவர்கள், காப்பீட்டு நிறுவனங்களின் உயர் பதவிகளில் இருப்பவர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அடங்கிய ஒரு பெரும் மாஃபியா கூட்டத்தின் எச்சையான ரகசியங்களைப் பச்சையாக அவிழ்த்துவிடுகிறது படம்.

வாகன ஓட்டிகளின் பொறுப்பின்மை, சாலைகளைப் பராமரிக்கத் துப்பில்லாத அரசு இயந்திரம் ஆகியன சாலை விபத்துகள் அதிகரிக்க அடிப்படையான காரணங்கள். ஊடகச் செய்திகளில் தினசரி நாம் வாசித்தும், கண்டும் கேட்டும் கடந்து செல்லும் சாலை விபத்துக்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அதிர்ச்சியூட்டும் சாத்தியக்கூறுகள், அவற்றை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள், அந்தக் கூட்டத்தில் நட்சத்திரமாக உயரத் துடிக்கும் முகுந்தன் உன்னியின் உலகம் ஆகியவற்றை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கதாபாத்திரங்களின் மூலம் முன்வைக்கிறது இப்படம்.

தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமான சுராஜ் வெஞ்சாரமூடுக்கும் வினீத்துக்குமான முரண்கள், திரைக்கதையில் ஒரு கட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை பூச்சுடன் வெளிப்படுகிறது. இது, வில்லன் தன்மையுடன் இருக்கும் நாயகனுக்கும் நாயகத் தன்மையையும் கொண்டிருக்கும் வில்லனுக்கும் இடையில் சிரித்து ரசிக்கத் தக்க பனிப் போரைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. அர்ஷா, தன்வி ராம் என இரண்டு முதன்மைப் பெண் கதாபாத்திரங்களில் வருபவர்கள், துணைக் கதாபாத்திரங்களில் வரும் சுதி கொப்பா, பிஜு சோபானம், ஜெகதீஷ், மணிகண்டன் பட்டாம்பி, நோபல் பாபு, சுதீஷ், ஜார்ஜ் ஆகியோரும் கச்சிதமாகப் பொருந்திக் கொள்கிறார்கள்.

இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ள அபினவ் சுந்தர் ஒரு படத்தொகுப்பாளராக இருந்தவர் என்பது படத்தின் கால அளவு மற்றும் படத்தொகுப்பின் நேர்த்தி ஆகியவற்றில் தெரிகிறது. அவருடன் இணைந்து விமல் கோபாலகிருஷ்ணன் வலிமையான திரைக்கதையை எழுதியிருக்கிறார்.

நல்ல, தூய்மையான, சலவை செய்யப்பட்ட, ஒழுங்குடன் தலைமுடி வெட்டி, முகச்சவரம் செய்து, பார்வைக்கு ‘ஜெண்டில் மேன்’ தோற்றத்துடன் இருக்கும் ஒருவர், அதிர்ந்து கூடப் பேசாதவர், கிட்டத்தட்ட ஒரு ஆண் தேவதைப் போன்றவர், ஒரு கிரிமினல் சைக்கோவாகவும் இருக்கமுடியும் என்றால் அதுதான் முகுந்தன் உன்னி கதாபாத்திரம். ஒரு வகையில் மரணத்தின் அதிபதி. ரத்தத்தில் புழங்கும் பணத்துக்கான ‘குபேரன்’ என்று கூட முகுந்தனை வருணிக்கலாம். பணத்தை சம்பாதிக்கவும் வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை வாழவும் எத்தகையை விபரீத விளையாட்டையும் ஆடத் தயங்காத முகுந்தன் உன்னியை மறக்க முடியாத கதாபாத்திரமாக தன்னுடைய தோற்றம் மற்றும் நடிப்பின் மூலம் மாற்றிக் காட்டியிருக்கிறார் வினீத் சீனிவாசன். தனது தந்தையின் வழியில் திரைப்பட இயக்கம், நடிப்பு என இரண்டிலும் களமாடும் வினீத்துக்கு இப்படம் மேலும் ஒரு ஜாக்பாட்!

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE