டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 12

By செய்திப்பிரிவு

இந்திய வரலாறு - 4: கனிஷ்கர் மற்றும் ஹர்ஷர்

குஷானர்கள் யூச்சி என்கிற பழங்குடி மரபைச் சேர்ந்தவர்கள். இம்மரபைத் தோற்றுவித்தவர் முதலாம் காட்பிசஸ் என்கிற குஜூலா காட்பிசஸ். இவர் காபூல் பள்ளதாக்கைக் கைப்பற்றியதன் பொருட்டு அவர் பெயர் பொறித்த தங்க நாணயங்களை வெளியிட்டார். சிறந்த சிவ பக்தரான வீமா அல்லது இரண்டாம் காட்பிசஸ் வடமேற்கு இந்தியா முழுவதையும் மதுரா வரை கைப்பற்றினார். தான் வெளியிட்ட நாணயங்களில் 'முழு உலகையும் வென்றவன்' என்று பொறித்திருந்தார்.

கனிஷ்கர்

சாகா சகாப்தம் கனிஷ்கரால் தொடங்கப்பட்டது. இவர் ஆட்சி செய்த காலம் பொ.ஆ (கி.பி) 78-120 என்றும் பொ.ஆ.127-150 என்றும் வரலாற்றாய்வாளர்களிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. கல்கானா எழுதிய ‘ராஜதரங்கிணி’ என்கிற நூலின்படி கனிஷ்கர், காஷ்மீரை வென்றார் எனத் தெரிகிறது. முதல் சீனப் படையெடுப்பின் போது பாஞ்ஞோவிடம் தோல்வியடைந்தாலும் அடுத்த படையெடுப்பில் பான்யாங் என்பவரைத் தோற்கடித்து யார்க்கண்ட், கோடான் ஆகிய பகுதிகளைத் தனது அரசுடன் இணைத்தார். புருஷபுரம் (தற்போது பெஷாவர்) அவரது தலைநகரம்.

மதுரா சிறப்பு மிக்க நகரமாக திகழ்ந்தது. இவரது ஆட்சிக் காலத்தில் தான் மஹாயான புத்த சமய பிரிவு தோன்றியது. புத்தருக்குப் பூக்கள், வாசனைத்திரவியங்கள், ஆபரணங்கள் மற்றும் தீபங்கள் மூலம் வழிபாடு தோன்றியது. உருவ வழிபாடும் இருந்தது.

நான்காம் பெளத்த மாநாடு ஶ்ரீநகருக்கு அருகில் உள்ள குண்டலவனம் மடாலயத்தில் வசுமித்திரர் தலைமையில் நடைபெற்றது. புத்த சரிதத்தின் ஆசிரியர் அசுவகோஷர் (கவிஞர், தத்துவ ஞானி) இம்மாநாட்டில் பங்கேற்றார். திரிபீடகங்களுக்கு விளக்கவுரையும் மஹாயான கோட்பாடுகளுக்கு இறுதி வடிவமும் கொடுக்கப்பட்டது. தென்னிந்தியாவைச் சேர்ந்த நாகார்ஜுனர் கனிஷ்கரது அவையில் இருந்தார். புகழ்மிகு மருத்துவர் சராகாவை ஆதரித்தார். இந்திய சிற்பக்கலையும் கிரேக்க சிற்பக்கலையும் இணைந்து உருவாக்கப்பட்ட காந்தாரக்கலை சிறப்புற்றிருந்தது. பெஷாவர், தட்சசீலம் ஆகிய இடங்களில் இக்கலைச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன. மதுரா கலைப்பாணியின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு புத்தரின் முகம் மிகுந்த ஆன்மிக பொலிவுடன் காணப்படுவது. இரண்டாம் அசோகர் என புகழப்படுபவர் கனிஷ்கர்.

கனிஷ்கருக்குப்பின் குஷாண அரசு 150 வருடங்கள் ஆட்சி புரிந்தது. அவரது மகன் ஹிவிஷ்கர் பேரரசை கட்டிக் காத்தார். மதுரா இவரது காலத்தில் சிறப்பு பெற்றது. கடைசி முக்கிய மன்னர் வாசுதேவர்.

ஹர்ஷர்

ஹர்ஷர் குலமான புஷ்யபூதியின் முதல் முக்கிய மன்னர் பிரபாக வர்த்தன். அவருக்குப்பின் ராஜ்யவர்த்தன் பல இன்னல்களுடன் ஆட்சி செய்தபோது மாளவ அரசன் தேவகுப்தன் வங்க அரசன் சசாங்கன் துணைகொண்டு தங்கை ராஜ்யஶ்ரீயின் கணவர் கிரஹவர்மனைக் கொன்றுவிட்டான். மாளவப்படைகளுடன் போரிட்டு வென்று திரும்புகையில் சசாங்கனின் சதியால் ராஜய் வர்த்தன் கொல்லப்பட்டார். பின்னர் ஹர்ஷர் அரசரானார். வர்த்தன வம்சத்தின் தலை சிறந்த மன்னர் ஹர்ஷர்(பொ.ஆ. 606- 647). நேபாளம், வல்லாபி போன்ற பகுதிகளை ஆண்ட குறுநில மன்னர்கள் ஹர்ஷர் கட்டுப்பாட்டில் இருந்தனர். சசாங்கன் கொல்லப்பட்டபின் ஹர்ஷர் தலைநகரை தானேஸ்வரத்திலிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.

நர்மதைக்கு தெற்கே அரசை விரிவுபடுத்த எண்ணிய ஹர்ஷர் மேலைச் சாளுக்கியம் மீது போர்தொடுத்தார். ஆனால் அய்கோல் கல்வெட்டின்படி இரண்டாம் புலிகேசி ஹர்ஷரை நர்மதை நதிக்கரையில் தோற்கடித்ததாக அறியமுடிகிறது. ஹர்ஷரை சகோலதாரபதநாதா என்று இரண்டாம் புலிகேசி அழைத்தார். இதற்குபின் இரண்டாம் புலிகேசி தனக்கு பரமேஸ்வரன் எனப் பட்டம் சூட்டிக் கொண்டார். ஹர்ஷர் கலிங்கத்தின் மீது படையெடுத்து வெற்றி கண்டதே இறுதிப் போராகும்.

ஹர்ஷர் ஆரம்பகாலத்தில் சிவனை வழிபட்டாலும் தனது சகோதரி ராஜ்யஶ்ரீ மற்றும் சீனப்பயணி யுவான்சுவாங் தூண்டுதலின் பேரில் புத்த மத மஹாயணப் பிரிவை தழுவினார்.
யுவான்சுவாங் தனது பயணக்குறிப்புகள் அடங்கிய நூல் சியூக்கி எனப்படும். அவர் நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு சென்றபோது அங்கு 10000 மாணவர்கள் பயில்வதாக குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர்கள் பண்டிதர்கள் என அழைக்கப்பட்டனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தருமபாலர் நாலந்தாவின் தலைவராக பணியாற்றியுள்ளார். வடமொழி பயிற்று மொழியாக இருந்தது.
ஹர்ஷர் தனது பிராயகை எனும் அவை மூலம் பெளத்தத் துறவிகள், வேத விற்பன்னர்கள் மற்றும் ஏழை மக்களுக்கும் கொடையளித்தார்.

அனைத்து சமயப் பிரதிநிதிகளையும் அழைத்து கன்னோசியில் மாநாடு நடத்தினார். பிரயாகை எனப்படும் அலகாபாத்தில் நடைபெற்ற அனைத்து சமய மாநாடு பற்றி யுவான்சுவாங் தனது பயணக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஹர்ஷப் பேரரசு முழுவதும் சட்டம் ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டது. சட்டங்களை மீறுவோருக்கும் அரசுக்கு எதிராக சதி செய்வோருக்கும் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.
பாலி, பாகா, ஹிரண்யா போன்ற வரிகள் வசூலிக்கப்பட்டன. நில வருவாயில் ஆறில் ஒரு பங்கு வரியாக வசூலிக்கப்பட்டது.

ஒரு லட்சம் குதிரைகளும் அறுபதாயிரம் யானைகளும் போர்ப்படையில் இருந்தன. ஆவணக் காப்பகம் 'நிலோபிது' என்கிற பெயரில் இயங்கியது.

வரதட்சிணை முறை பரவலாக காணப்பட்டது. சதி முறையும் இருந்தது. சிர்பூர் லட்சுமணர் கோயில் ஹர்ஷர் காலத்தைச் சேர்ந்தது. தத்துவஞானி பார்த்ருஹரி ஒரு கவிஞரும் இலக்கண நிபுணராகவும் திகழ்ந்தார்.


ஹர்ஷரின் அரசவையில் இருந்த பாணர் எழுதிய நூல்கள் ஹர்ஷசரிதம், காதம்பரி.
ஹர்ஷர் எழுதிய நாடகநூல்கள் நாகானந்தம், ரத்னாவளி, பிரியதர்சிகா. பாணருடன் பயனர், ஹரிதத்தா, அரிசேனர் ஆகியோர் ஹர்ஷர் அரசவையில் இருந்தனர். கங்கை நதிக்கரையில் பல பெளத்த மடாலயங்கள், விகார்கள் மற்றும் ஸ்தூபிகளை நிறுவினார். பொதுவாக ஹர்ஷப் பேரரசு காலம் வரலாற்றில் தனி முத்திரை பதித்தது எனலாம்.

தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

முந்தைய பகுதி - https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/882777-tnpsc-group-1-simple-notes-for-preparation-part-11-6.html

அடுத்த பகுதி அக்டோபர் 19 புதன் அன்று வெளியாகும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்