தர்க்கரீதியாக யோசித்துச் சரியான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டியது சைக்கோமெட்ரிக் தேர்வுகளில் ஒருவகை. இதை ‘லாஜிகல் ரீசனிங்’ என்று குறிப்பிடுவார்கள். இதற்கு உங்களுக்கு உடனடியாகவும் விடை தெரிய வேண்டும். விதவிதமாகவும் யோசிக்க வேண்டி இருக்கும்.
கீழே உள்ளவற்றில் எது மற்றவற்றிலிருந்து வித்தியாசமாகப்படுகிறது?
ஏப்ரல், செப்டம்பர், தை, டிசம்பர்.
இந்தக் கேள்விக்கான விடை உங்களுக்குப் பார்த்தவுடனேயே தெரிந்துவிடும். தை என்பது தமிழ் மாதம். மற்றவையெல்லாம் ஆங்கில மாதங்கள். எனவே ‘தை’ என்பதுதான் விடை.
ஆனால் தர்க்கம் என்பது சில சமயம் பலவிதக் கிளைகளாகப் பிரியும். கேள்வி கீழ்க்கண்டதுபோல் இருந்தால், எதை மற்றவற்றிலிருந்து தனிமைப் படுத்துவீர்கள்?
யாஹூ, கூகோல், மில்லியன், கோடி
இந்தக் கேள்விக்கு எது போன்ற பதில் எதிர்பார்க்கப்படுகிறது என்பதில் தெளிவு தேவை.
முன்பு கேட்கப்பட்ட கேள்விகளை மனதில் கொண்டு ‘கோடி’ என்று விடையை எழுதக் கூடாது. அது மட்டும்தான் முழுமையான தமிழ் வார்த்தை என்றாலும்கூட, இதைவிடச் சிறந்த தர்க்கங்கள் உண்டு என்று யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே தெரியும். பிற மூன்று வார்த்தைகளும் தமிழில் தோன்றியவை அல்ல. என்றாலும் அவை அப்படியே தமிழிலும் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது அவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டில் இல்லை. ஆக அவையும் ஒரு விதத்தில் (பங்களா, காப்பி என்பது போல்) தமிழ்ச் சொற்களே).
அப்படியானால் விடை என்ன? யாஹூ, கூகுள் ஆகியவை கணினியில் தேடுபொறிகளாக (Search engines) பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மில்லியன், கோடி ஆகியவை எண்கள். ஒருவேளை மில்லியன் என்று புதிதாக ஏதாவது கணினி தேடுபொறி வந்துள்ளதோ? இப்படி யோசிப்பதற்குப் பதிலாக, எதிர்த்திசையில் யோசியுங்கள். (முக்கியமாக, கொடுத்திருப்பது கூகுள் அல்லது கூகோல் என்பதையும் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்).
மில்லியன் என்றால் 10 லட்சம். கோடி என்பது 100 லட்சம். அப்படியானால் யாஹூ அல்லது கூகோல் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்று எண்ணையும் குறிக்கிறதே. ஆம். கூகோல் என்பது 1 என்ற எழுத்துக்குப் பின்னால் 100 பூஜ்யங்களைச் சேர்த்தால் கிடைக்கும் எண் (2ஜி, நிலக்கரி நஷ்டத் தொகை கணக்கைக் கேட்பதைவிட இந்த எண் அதிகம் தலைசுற்ற வைக்கிற தில்லையா?). இப்போது உங்களுக்கு ‘யாஹூ’ என்பதுதான் சரியான விடை என்பது விளங்கியிருக்கும்.
இப்போது இதே போல பிறவற்றோடு சேராத ஒன்றைத் தேர்ந்தெடுங்கள் என்ற வகையில் மேலும் சில கேள்விகள்.
தாமரை, புலி, மயில், சிங்கம், மாம்பழம்
1) பிற நான்கு வார்த்தைகளுக்குள் ஓர் ஒற்றுமை இருந்தாக வேண்டும். அந்தப் பொதுவான அம்சம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வார்த்தையில் இருக்கக் கூடாது. அதுதான் கணக்கு.
அதாவது பிறவற்றில் இல்லாதது ஒன்றில் உண்டு என்கிற வகையில் கேள்விகள் அமைவது அரிது. பிற அனைத்திலும் உள்ள ஒரு பொதுவான அம்சம் ஒன்றில் மட்டும் இல்லை என்கிற வகையில்தான் கேள்விகள் பொதுவாக அமையும்.
2) தாமரை பா.ஜ.க.வின் சின்னம். மாம்பழம் பா.ம.க.வின் சின்னம். இந்தக் கோணத்திலும் நீங்கள் யோசித்துப் பயலனில்லை. ஏனென்றால் எந்த மிருகம் அல்லது பறவையின் பெயரையும் தேர்தல் சின்னமாக வைத்திருக்க அனுமதியில்லை.
3) அப்படியே ஒரு பேச்சுக்குப் புலி, சிங்கம் ஆகிய சின்னங்களில் இரு சுயேச்சைகள் உங்கள் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டிருந்தால்கூட, நீங்கள் மயில் என்பதை விடையாகத் தேர்ந்தெடுக்கக் கூடாது. ஏனென்றால் கேள்விகள் தேர்வு எழுதும் அனைவருக்குமே பொதுவானவை. உங்கள் தொகுதியில் இருப்பதைத்தான் சரியாக விடையாக எழுத முடியும் என்கிற மாதிரி கேள்விகள் வடிவமைக்கப்பட மாட்டாது.
இப்போது புதிதாக யோசியுங்கள். சிங்கம்தான் பதில் என்பது தெரியும். மீதியெல்லாம் இந்தியாவின் தேசியச் சின்னங்கள். (தாமரை- தேசிய மலர், புலி – தேசிய விலங்கு, மயில் – தேசியப் பறவை, மாம்பழம் – தேசியக் கனி).
வார்த்தைகள்தான் என்றில்லை, எண்களைக் கொடுத்தும் கேள்வி கேட்கலாம்.
3, 9, 14, 21, 33
இதில் பொருந்தாத எண் என்பது 14. ஏனென்றால் பிற எண்களெல்லாம் ஒற்றைப்படை எண்களாக இருக்க, 14 மட்டும் இரட்டைப் படை எண்.
இப்போது கேள்வியில் ஒரு சிறு மாற்றம்.
3, 9, 12, 21, 32
இப்போது இரண்டு இரட்டைப்படை எண்கள் இருப்பதால், நாம் வேறு விதமாகத்தான் சிந்திக்க வேண்டும். 3, 9, 12, 21 ஆகிய எண்கள் 3 என்ற எண்ணினால் முழுமையாக வகுபடு கின்றன. எனவே அப்படி முழுமையாக மூன்றால் வகுபடாத 32 என்பதுதான் சரியான விடை. கேள்வியை மேலும் சிறிது மாற்றிப் பார்க்கலாம்.
3, 9, 12, 21, 35
இதில் இரண்டு விதமான விடைகள் கிடைக்கின்றன. ஒரே இரட்டைப்படை எண் 12 என்பதால் அதுவும் சரியான விடைதான். 3 என்ற எண்ணினால் முழுமையாக வகுபடாததால், 35 என்பதும் சரியான விடைதான். எதைத் தேர்ந்தெடுப்பது? இப்படி ஒரு குழப்பம் வந்தால், நீங்கள் எழுதும் தேர்வின் பொதுவான தரம் என்ன என்பதைக் கொஞ்சம் யோசியுங்கள். மிகப் பெரும்பாலானவை எளிமையான கேள்விகள்தான் என்றால், 12 உங்கள் பதிலாக இருக்கட்டும்.
கொஞ்சம் அதிகப்படியாக யோசித்து விடைகளை எழுதும்படியான தேர்வு என்றால், 35 என்பது உங்கள் பதிலாக இருக்கட்டும். (பள்ளித் தேர்வில் இப்படிக் கேட்டால், இரண்டு விடைகளில் எதை எழுதினாலும் மதிப்பெண் கொடுப்பார்கள். ஆனால், மிகப் பலரும் எழுதும் தேர்வுகளில் கணினிகள்தான் மதிப்பளிக்கின்றன என்பதால், ஒரு கேள்விக்கு ஒரு விடைதான் சரியானது எனும் அளவில் அது செட் செய்யப்பட்டிருக்கும்.
சில பொதுத் தேர்வுகளில், இப்படி இரண்டு விடைகள் வரும்படி கேள்வி அமைந்ததை உணர்ந்தால், அந்தக் கேள்வியே கேட்கப் படாததுபோல, கணினியின் நிகழ்ச்சியை மாற்றியமைப்பார்கள். அதாவது இந்தக் கேள்விக்கு என்ன விடை எழுதினாலும் மதிப்பெண் கிடையாது.
ஆனால் சில பொதுத் தேர்வுகளில் அவர்களின் தர்க்கத்துக்குதான் மதிப்பு என்பது போல் அணுகுமுறை இருக்கும். அதனால்தான் மேற்படி கேள்விக்கான விடையைத் தேர்ந்தெடுக்கும்போது கேள்வித்தாளின் தரத்தையும் – அதாவது எளிமையானதா கடினமானதா எனும் கோணத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago