டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 11

By செய்திப்பிரிவு

இந்திய அரசமைப்புச் சட்டம் - 1
எளிய குறிப்புகள்

இந்திய அரசியல் நிர்ணய அவை
பிரிட்டிஷ் பிரதமர் கிளமெண்ட் அட்லி ஒப்புதலுடன் (மார்ச் 15,1946) கேபினெட் தூதுக்குழு திட்டத்தின்படி 09-12-1946 அன்று தற்காலிக தலைவர் சச்சினாந்த சின்கா தலைமையில் டெல்லியில் முதல் கூட்டம் கூடியது. இந்திய அரசமைப்பு பேரவைத்(Costituent Assembly) தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத்11-12-1946 முதல்) வரைவுக் கமிட்டியின் தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்(இந்திய அரசமைப்பின் தந்தை) பொறுப்பேற்றனர். நிர்ணய அவையில் கலந்துகொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 211.

இந்திய அரசமைப்பின் திறவுகோல் எனக் கருதப்படும் முகப்புரையை நிர்ணய அவையில் அறிமுகம் செய்தவர் ஜவாஹர்லால் நேரு. அது அரசமைப்பின் ஒரு பகுதியாக இல்லாமல் நீதிமன்றங்களின் நீதிப் புனராய்விற்கு அப்பாற்பட்டது.
கொள்கைகள் தீர்மானம் அரசியல் நிர்ணய அவையில் நிர்ணயிக்கப்பட்ட நாள் 22-01-1947. அரசியல் சட்ட வரைவுக் குழு ஏழு உறுப்பினர்களைக்கொண்டு 29-08-1947 அன்று நியமிக்கப்பட்டது.
அரசமைப்பு சட்டத் திருத்தம் (42),1976 இன்படி முகப்புரையில் சேர்க்கப்பட்ட சொற்கள் சோஷலிச, மதச்சார்பற்ற, ஒருமைப்பாடு ஆகியவை.
இந்திய அரசமைப்பை எழுதி முடிக்க 2 வருடங்கள் 11 மாதங்கள் 18 நாட்கள் ஆயின. இந்திய அரசமைப்புச் சட்ட நாள் என அழைக்கப்படும் 26-11-1949 அன்று இந்திய அரசமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு சனவரி 26, 1950 குடியரசு தினத்தன்று நடைமுறைக்கு வந்தது. உலக அளவில் எழுதப்பட்ட மிக நீளமான அரசமைப்பு நம் இந்தியாவுடையதே.
அரசமைப்பின்படி நம் நாட்டின் பெயர் பாரத்.

பிறநாட்டு அடிப்படைகள்

இந்திய அரசமைப்பின் வெவ்வேறு பகுதிகள் முன்னேறிய நாடுகளின் அரசமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. அது குறித்த விவரம் கீழே:-

முகப்புரை,
அடிப்படை
உரிமைகள் -அமெரிக்கா
அடிப்படை
கடமைகள் -ரஷ்யா
சட்டத்தின்படி
ஆட்சி -இங்கிலாந்து
கூட்டாட்சி -கனடா
திருத்தங்கள் -தென்னாப்பிரிக்கா
ஒற்றை
குடியுரிமை -இங்கிலாந்து
அமைச்சரவை
கூட்டுப்பொறுப்பு -இங்கிலாந்து
நெருக்கடிநிலை
பிரகடனம் -ஜெர்மனி
நாடாளுமன்ற
கூட்டுத்தொடர்
பொதுப்பட்டியல் - ஆஸ்திரேலியா
அரசு வழிகாட்டு
நெறிமுறைகள்,
குடியரசு தேர்தல் முறை, ராஜ்யஅவை நியமன
உறுப்பினர் - அயர்லாந்து
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் - பிரான்ஸ்


இந்திய அரசமைப்பு உருவாக்கத்தில் கலந்து கொள்ளாத முக்கிய தலைவர்கள் காந்தியும் முகமது அலி ஜின்னாவும்.

பகுதிகள், அட்டவணைகள், விதிகள்

இந்தியா அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டபோது அது 22 பகுதிகள், 8 அட்டவணைகள், 395 விதிகளைக் கொண்டிருந்தது. தற்போது 25 பகுதிகளும் 12 அட்டவணைகளும் 450 விதிகளும் உள்ளன.

பகுதி 1 இல் விதி 1 முதல் 4 வரை இந்தியா மற்றும் அதன் எல்லைகளும் பகுதி 2 இல் குடியுரிமைபற்றி விதிகள் 5 முதல் 11 வரையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பகுதி மூன்றில் அடிப்படை உரிமைகளைப்பற்றி விதிகள் 12 முதல் 35 வரையிலும்
பகுதி நான்கில் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளைப் பற்றி விதிகள் 36 முதல் 51 வரையிலும் கூறப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டு 44ஆ வது சட்டதிருத்தத்தின் வாயிலாக ஏழு அடிப்படை உரிமைகளில் ஒன்றான சொத்துரிமை (விதி 31) நீக்கப்பட்டு விதி 300 இன் கீழ் சாதாரண உரிமையாக கொண்டுவரப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமை விதிகள்
சமத்துவம் - 14இலிருந்து 18
சுதந்திரம் - 19இலிருந்து 22
சுரண்டல் தடுப்பு - 23, 24
மத சுதந்திரம் - 25இலிருந்து 28
கல்வி & பண்பாடு - 29இலிருந்து 31
அரசமைப்பு தீர்வு – 32லிருந்து 35

குற்றங்களுக்கு தண்டனை அளிப்பதை குறித்த பாதுகாப்பு உரிமை விதி 20 ஐ 42 ஆவது சட்டத் திருத்தம் மூலம் அவசரநிலையின்போதும் கூட நிறுத்தி வைக்க முடியாது.

உயிரையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் பாதுகாக்கும் உரிமை விதி 21ஐ, விதி 359இன்படி ஓர் ஆணை மூலம் அவசரநிலையின்போதும் கூட நிறுத்தி வைக்க முடியாது.

14 வயதிற்குட்பட்டவர்களை சுரங்கம் மற்றும் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்துவதை தடை செய்வது விதி 24.

நீதிப் பேராணைகள்

அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது உச்ச நீதிமன்றம் ஐந்து வகையான நீதிப்பேராணைகளை வெளியிட அதிகாரம் கொண்டுள்ளது.

ஆட்கொணர் நீதிப் பேராணை(Habeas Corpus) : சட்டத்திற்கு புறம்பான வழியில் சிறைபிடித்து வைக்கப்பட்டவரை விடுவிக்க பிறப்பிக்கப்படுவது.

கட்டளை நீதிப் பேராணை(Mandamus) : பொதுக்கடமைச் செயலை ஓர் அதிகாரி அல்லது கீழ் நீதிமன்றம் செய்ய தவறினால் இவ்வாணை பிறப்பிக்கப்படும்.

தடையுறுத்தும் நீதிப் பேராணை(Prohibition) : சட்டத்தை மீறி அல்லது முரணாக நீதிமன்றமோ அல்லது ஆட்சியில் உள்ள அதிகாரியோ ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அதை மேற்கொண்டு நடத்தாமல் செய்ய இவ்வாணை பயன்படும்.

உரிமை வினா நீதிப் பேராணை(Quo-Warranto) :பொது அதிகார பதவியில் உள்ள ஒருவர் மீது பாதிக்கப்பட்டவர் மட்டுமின்றி வேறு எவரேனும் முறையிட்டால் அவர் எந்த தகுதியில் அப்பதவியை வகிக்கிறார் என கேட்டு பிறப்பிக்கும் ஆணை.

தடைமாற்று நீதிப் பேராணை(Certiorari) : கீழ் நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் அதிகார வரம்பை மீறி செயல்பட்டாலும் இயற்கை நீதிக்கு முரணான நடவடிக்கை எடுத்தாலும் அவற்றை மறு ஆய்வு செய்து நீக்கும் ஆணை.

குடிமகன் எனப்படும் 'citizen' என்ற வார்த்தை நகரத்தில் வசிப்பவர் என பொருள்படும் 'சிவிஸ்' எனும் லத்தீன் சொல்லாகும்.

பொதுவான குறிப்புகள்


இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து குடியரசுத்தலைவர்கள், துணைக்
குடியரசுத்தலைவர்கள், பிரதமர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள்,அட்டர்னி ஜெனரல், ஆடிட்டர் ஜெனரல் போன்றவர்களின் பெயர்கள், பதவி வகித்த காலங்கள் மற்றும் அவர்கள் பதவியில் இருக்கும்போது நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றை அனைத்து பட்டியலிட்டு படிப்பது நல்லது. அவ்வப்போது மாறிவரும் மேற்குறிப்பிட்ட பதவியில் உள்ளவர்களின் பெயர்களையும் பட்டியலில் சேர்த்து கொள்வது அப்போதைய தேர்வுகளை சந்திக்க ஏதுவாகும்.

தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்
முந்தைய பகுதி
- https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/881882-tnpsc-group-1-simple-notes-for-preparation-part-10-8.html

அடுத்த பகுதி அக்டோபர் 17 (திங்கள்கிழமை) அன்று வெளியிடப்படும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE