பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8 இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் செல்லாது என்று அறிவித்தவுடன் அன்று இரவு முதல் இந்தியப் பொருளாதாரம் வேகமாகச் சுழல ஆரம்பித்தது. உங்களில் பலர் இந்த ரூபாய் நோட்டுகளைச் சில்லறையாக மாற்ற அலைந்திருப்பீர்கள். பலர் வெளியூரில் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டிருப்பீர்கள். நெடுஞ்சாலை சுங்கம் வசூல் மையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.
பல தனியார் மருத்துவமனைகள் பழைய 500, 1000 செல்லாது என்று ரூபாய் நோட்டுகளை வாங்காமல் நோயாளிகளை அலைக்கழித்தன. பொதுவாக வியாபாரம் மந்தமாக இருந்தது. வங்கிகள், ATMகள் மூடப்பட்டன. இந்த இடருக்காக முன்னமே பிரதமர் மக்களிடம் வருத்தம் தெரிவித்தார். ஆனால், இந்தச் சுமையைத் தாங்கிக்கொண்டால்தான் நாட்டின் கறுப்புப் பணத்தையும் கள்ளப் பணத்தையும் ஒழிக்க முடியும் என்று அறிவித்தார்.
கறுப்புப் பணம்
கறுப்புப் பொருளாதாரத்தில் புழங்கும் பணம் கறுப்புப் பணம். கறுப்புப் பொருளாதாரம் என்றால் என்ன? அரசின் சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் எல்லாப் பொருளாதார நடவடிக்கைகளும் கறுப்புப் பொருளாதாரம்தான்.
வியாபாரம் செய்யும்போது விற்பனை வரி கட்ட வேண்டும் என்பது ஒரு சட்டம். ஒரு புத்தக விற்பனையாளர், புத்தகத்தை அதில் அச்சிடப்பட்டிருக்கும் விலையில் விற்று விற்பனை வரியும் கட்டவேண்டும். உதாரணமாக ஒரு புத்தகத்தின் விலை ரூ.100 என்றும் அதன் மீது உள்ள விற்பனை வரி ரூ.10 என்றும் வைத்துக்கொள்வோம். விற்பனையாளர், புத்தகத்தை ரூ.110-க்கு விற்று, ரூ.10 அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டும். இதற்காக உங்களிடம் அவர் ஒரு விற்பனை ரசீதும் கொடுப்பார், அதில் பொருளின் விலை, வரி எல்லாம் எழுதப்பட்டிருக்கும். விற்பனை ரசீது என்பது சட்டரீதியான வியாபாரத்தின் அத்தாட்சி.
ஒரு விற்பனையாளர் விற்பனை ரசீது கொடுக்காமல் உங்களிடம் ரூ.110 பெற்றுக்கொண்டு புத்தகத்தைக் கொடுத்தால், அது கறுப்புப் பொருளாதார நடவடிக்கை. அந்த வியாபாரம் மூலமாகப் பெறப்பட்ட வரி ரூ.10 அரசுக்குச் செலுத்தாமல் மறைத்துத் தானே எடுத்துக்கொள்வார். இந்த ரூ.10 கறுப்புப் பணமாக மாறுகிறது. இந்தக் கறுப்புப் பணம் ரூ.10-ஐ அவர் அரசுக்குத் தெரியாத கறுப்புப் பொருளாதாரத்தில்தான் செலவு செய்ய வேண்டும். எனவே, ஒரு இடத்தில் ஆரம்பமாகும் கறுப்புப் பணம் அடுத்தடுத்துக் கறுப்புப் பொருளாதாரத்தை மேலும் பெரியதாக்க உதவுகிறது.
வரி கட்டாமல் வியாபாரம் செய்வது கறுப்புப் பணத்தை உருவாக்குவது போல, ஒருவர் பெற்ற வருமானத்துக்கு வருமான வரி கட்டாமல் இருப்பதும் கறுப்புப் பணத்தை உருவாக்கும். எனவே வரி கட்டாமல் செய்யப்படும் எல்லா நடவடிக்கைகளும் கறுப்புப் பொருளாதாரம், அதனால் கறுப்புப் பணம் உருவாகுகிறது.
வேறு எந்த வித நடவடிக்கைகள் கறுப்புப் பொருளாதாரத்தில் அடங்கும்? சட்டத்துக்கு விரோதமான எல்லா நடவடிக்கைகளும் கறுப்புப் பொருளாதாரமாக இருக்கும். கடத்தல் செய்வது, பதுக்கல் செய்வது, கந்து வட்டி வாங்குவது, லஞ்சம் வாங்குவது, சொத்தின் உண்மை மதிப்பைக் குறைத்து வாங்கி அதன் மீது குறைந்த வரி கட்டுவது, கள்ளச் சாராயம், போதைப் பொருள், கட்டப் பஞ்சாயத்து என பல நடவடிக்கைகள் கறுப்புப் பொருளாதாரத்தை வளர்க்கும்.
அயல்நாட்டுடன் வணிகம் செய்யும்போதும், அந்நியச் செலாவணி பரிவர்த்தனை செய்யும்போதும் சட்டத்தையும் வியாபார ஒழுங்கு முறைகளையும் ஏமாற்றிக் கறுப்புப் பணத்தை நாட்டை விட்டு வெளியே எடுத்துச் சென்று அங்கு செலவு செய்ய முடியும். அதேபோல் சொத்துகளின் மதிப்பைக் குறைத்துச் சொல்வது, தங்கம் போன்றவற்றைச் சொத்துக் கணக்கில் காட்டாமல் இருப்பது என்று பலவிதங்களில் கறுப்புப் பொருளாதாரத்தில் ஈட்டிய பொருளைப் பதுக்க முடியும். அவ்வாறு கறுப்புப் பொருளாதாரத்தில் ஈட்டிய செல்வத்தைப் பணமாக வைத்திருந்தால் அது கறுப்பு பணம் எனப்படும்.
கள்ளப் பணம்
இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி (RBI) மட்டுமே பணத்தை அச்சிட்டு வெளியிடும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது. எனவே, நாம் வைத்திருக்கும் அனைத்து ரூபாய் நோட்டுக்களிலும் RBI முத்திரையும் அதன் ஆளுநரின் கையெழுத்தும் இருக்கும். இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ரூபாய் நோட்டும் சில பாதுகாப்பு அம்சங்களுடன் வருகின்றன. ரூபாய் நோட்டுகளை அச்சிடும் தாள், மை, அச்சிடும் முறை என்று பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. பார்வையற்றோர் தடவிப் பார்த்து ரூபாய் நோட்டின் மதிப்பைத் தெரிந்துகொள்ள சில அம்சங்களும் இதில் உள்ளன.
RBI வெளியிடும் ரூபாய் நோட்டுகளைப் போன்று போலியான ரூபாய் நோட்டுகளை எளிதில் அச்சிட முடியாது. ஆனாலும், சிலர் இதனைத் திறமையாகச் செய்து போலி ரூபாய் நோட்டுகளை வெளியிடுகின்றனர். இதனைக் கள்ளப் பணம் என்கிறோம்.
ஏற்கெனவே உள்ள 5௦௦, 1௦௦௦ ரூபாய் நோட்டுகளைப் போன்று கள்ளப் பணம் புழக்கத்தில் இருந்ததை அவ்வப்போது அரசு கண்டுபிடித்து, அந்நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து விலக்கியது. ஆனால், இந்தப் போலிப் பணப் புழக்கத்தை முழுவதுமாகத் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தற்போது உள்ள 5௦௦, 1௦௦௦ ரூபாய் நோட்டுகளை நீக்கிவிட்டு அதற்குப் பதில் அதிகப் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 5௦௦, 2௦௦௦ ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய ரூபாய் நோட்டுகளைப் போன்று போலி ரூபாய் நோட்டுகளை, அதாவது கள்ளப் பணத்தை அச்சிட முடியாது என்று அரசு நினைக்கிறது. இதற்காகப் பழைய 5௦௦, 1௦௦௦ ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்றும் அவற்றை டிச.31-க்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.
பழைய 5௦௦, 1௦௦௦ ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்து அதற்குப் பதில் புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதால் கறுப்புப் பணம், கள்ளப் பணம் இரண்டையும் ஒரே நேரத்தில் ஒழிக்க அரசு முயற்சி செய்துள்ளது.
முதல் செல்லாப் பணம்
1938-ல் முதன்முதலில் இந்திய ரிசர்வ் வங்கி ரூ. 10, ரூ. 1௦௦, ரூ.1,௦௦௦, ரூ.1௦,௦௦௦ நோட்டுகளை வெளியிட்டது. அதன் பிறகு ரூ. 5,௦௦௦ நோட்டுகளும் வெளியிடப்பட்டன. ஆரம்பம் முதலே கள்ள நோட்டுகள் அச்சிடுவதும், கறுப்புப் பணத்தைப் பதுக்குவதும் இருந்தது; அந்தச் செயல்பாடுகளில், அதிகத் தொகை கொண்ட ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்பட்டன. எனவே, 1946-லேயே பிரிட்டிஷ் அரசு ரூ.1,௦௦௦, ரூ.5,௦௦௦ ரூ.1௦,௦௦௦ நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தது.
புதுடெல்லியில் புதிய 2000 ரூபாயைப் பிடித்து நிற்கிறார் ஒரு வெளிநாட்டுப் பெண்.
மூன்று நாட்கள் அவகாசம்
இந்த வகை நோட்டுகளை மீண்டும் சுதந்திர இந்தியாவில் ரிசர்வ் வங்கி 1954-ல் வெளியிட்டது. மீண்டும் 1978-ல் இந்திய அரசு ரூ.1,௦௦௦, ரூ.5,௦௦௦, ரூ.1௦,௦௦௦ நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தது. இதற்கும் கள்ள நோட்டுகளின் புழக்கத்தை ஒழிப்பதும், கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதும் காரணங்களாகக் கூறப்பட்டன. இதில் பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது.
செல்லாது என அறிவிக்கும் அதிகாரம்
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, பிரிவு 26-ன் படி, இந்திய ரிசர்வ் வங்கி ஆலோசனை பெற்று அரசு சில குறிப்பிட்ட தொகை கொண்ட ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவிக்கலாம். இது ‘பண மதிப்பு நீக்கம்’ எனப்படுகிறது. குறிப்பிட்ட தொகை கொண்ட ரூபாய் நோட்டுகளை மதிப்பு நீக்கம் செய்வதால் அந்த நோட்டுகள் புழக்கத்திலிருந்து விலக்கப்படும்.
ரூபாய் நோட்டுகளை மதிப்பு நீக்கம் செய்வதற்குப் பல காரணங்கள் உண்டு. பெரும்பாலும் கள்ளப் பணத்தை, கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் பெரிய தொகை கொண்ட ரூபாய் நோட்டுகளை மதிப்பு நீக்கம் செய்து, அதற்கு இணையான புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடுவார்கள்.
ஒரு நாட்டில் ஆட்சி முறை மாறும்போதெல்லாம் ஒட்டுமொத்தப் பணத்தையும் மதிப்பு நீக்கம் செய்வது உண்டு. உதாரணமாக, இராக்கில் 2003 வரை சதாம் ஹுசைன் ஆட்சி புரிந்தார். 2௦௦3-ல் அவர் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது சதாம் ஹுசைனால் வெளியிடப்பட்ட அனைத்துப் பணமும் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டுப் புதிய நோட்டுக்கள் அளிக்கப்பட்டன. இது போன்ற மதிப்பு நீக்கம் பல நாடுகளில் நடந்துள்ளது.
வேறு நாட்டுப் பணம் இங்கே செல்லுமா?
ஒரு நாட்டின் பணத்தை அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய வங்கி அச்சிட்டு வெளியிடும். பல நாடுகளில் அரசின் கட்டுப்பாட்டுக்கு இணங்கி அதிகப் பணத்தை அச்சிட்டு வெளியிடும்போது அந்நாட்டில் பணவீக்கம் (விலைவாசி உயர்வு) அதிகமாக இருக்கும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாதபோது, புதிய பணத்தை அளித்து, பழைய பணத்தையெல்லாம் demonitize செய்வதும் உண்டு. இது தொடர்பாக அண்மையில் நடந்த ஒரு ஆச்சரியமான சம்பவம் இதோ:
1980-ல் ஜிம்பாப்வே அரசின் மத்திய வங்கி ஜிம்பாப்வே டாலர் என்ற பணத்தை வெளியிடத் தொடங்கியது. 1990-களில் ஜிம்பாப்வேவில் பணவீக்கம் அதிகரித்தது. இதனால் அந்நாட்டு மக்களுக்கு ஜிம்பாப்வே டாலர் மீது நம்பிக்கை இழந்து மற்ற நாடுகளின் பணத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதில் குறிப்பாக அமெரிக்க டாலர் அதிக அளவில் புழக்கத்தில் இருந்தது. இதனால் ஜிம்பாப்வே டாலர் அடிப்படையில் விலைவாசி பல்லாயிரம் மடங்கு அதிகரித்தது. எனவே, அந்த ஆண்டு முதல் அங்கு ஜிம்பாப்வே டாலர் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டு, அதற்குப் பதில் அமெரிக்க டாலர் பணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. என்ன அதிசயம் பாருங்கள், ஒரு நாட்டில் மற்றொரு நாட்டின் பணத்தைப் பயன்படுத்துவதை அந்நாட்டின் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்தியப் பணத்தின் வரலாறு
பழங்காலத்தில் பணம் என்பது தங்கம் அல்லது வெள்ளி காசு மட்டுமே. காகிதப் பணம் வர ஆரம்பித்தது கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்றிய பிறகுதான். 1773 முதல் 1775 வரை ‘ஜெனரல் பேங்க் ஆஃப் பெங்கால் அண்ட் பிகார்’ காகிதப் பணத்தை முதன்முதலில் வெளியிட்டது. இது ஒரு தனியார் நிறுவனமாக இருந்தாலும் அது வெளியிட்ட பணத்துக்கு அரசு உறுதி அளித்தது. அதன் பிறகு ‘பேங்க் ஆஃப் ஹிந்துஸ்தான்’ 1832 வரை பணத்தை வெளியிட்டது. இந்த வங்கிகள் வெளியிட்ட பணத்தை அரசுக்கு வரி செலுத்துவதற்குப் பயன்படுத்தலாம் என்று அரசு அறிவித்த பின்னர்தான், அவற்றைப் பணம் என்று மக்கள் நம்ப ஆரம்பித்தார்கள்.
> 1806 ல் ‘பேங்க் ஆஃப் பெங்கால்’ தொடங்கப்பட்டது. இதில் தனியார் முதலீட்டுடன் அரசின் முதலீடும் இருந்தது. இந்த வங்கிக்குப் பணம் அச்சிட்டு வெளியிடும் உரிமை வழங்கப்பட்டது.
> யூனிஃபேஸ்டு (Unifaced), காமர்ஸ் (Commerce), பிரிட்டானியா (Britannia) என்று மூன்று வரிசைகளில் பணத்தை வெளியிட்டது. அவை இப்போது உள்ளது போல இரண்டு பக்கங்களிலும் அச்சிடப்பட்டிருந்தன.
> 1840-ல் தொடங்கப்பட்ட ‘பேங்க் ஆஃப் பாம்பே’, 1843-ல் தொடங்கப்பட்ட ‘பேங்க் ஆஃப் மெட்ராஸ்’ ஆகிய வங்கிகள் அரசு முதலீட்டைப் பெற்றுப் பணத்தை அச்சிட்டு வெளியிட்டன. இவை மட்டுமல்லாமல் ‘பேங்க் ஆஃப் வெஸ்டர்ன் இந்தியா’ (1842), ‘கமர்ஷியல் பேங்க் ஆஃப் இந்தியா’ (1845) ஆகிய தனியார் வங்கிகளும் இதே காலத்தில் பணத்தை வெளியிட்டன.
> பிரிட்டிஷ் அரசு பேப்பர் கரன்ஸி சட்டத்தை 1861-ல் (Paper Currency Act) பிறப்பித்தது. இதன் பின்னர் பணத்தை அச்சடித்து வெளியிடும் உரிமை மூன்று அரசு முதலீடு பெற்ற வங்கிகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது.
> பணம் அச்சிடும் அச்சுக் கூடத்தை முதன்முதலில் ‘பேங்க் ஆஃப் இங்கிலாந்து’ 1923-ல் நாசிக் நகரில் தொடங்கியது.
> இந்திய ரிசர்வ் வங்கி 1935-ல் தொடங்கப்பட்டது. பிறகு இந்தியப் பணத்தை அச்சிட்டு வெளியிடும் அதிகாரம் அதற்கு மட்டுமே என்கிற சட்டம் வந்தது.
கட்டுரையாளர், இணைப் பேராசிரியர்,
சென்னை தொடர்புக்கு: seenu242@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago