டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 10

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப் 1 தேர்வுகள் நவம்பர் 19 அன்று நடத்தப்பட இருக்கின்றன. குரூப்-1 தேர்வுக்கு தயார்செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு பாடத்துக்குமான எளிய முறை குறிப்புகளை போட்டித் தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர் ஜி.கோபாலகிருஷ்ணன் தொகுத்தளிக்கிறார். கடந்த ஒன்பதாம் பகுதியில் ‘அறிவியல்’ பாடத்துக்கான எளிய முறைக் குறிப்புகள் தொடங்கின. இன்றைய பகுதியிலும் அறிவியல் குறிப்புகள் தொடர்கின்றன.

அறிவியல் - 2
இயற்பியல் - 1 - குறிப்புகள்

அலகு முறைகள் FPS(அடி, பவுண்ட், நொடி), CGS(சென்டிமீட்டர், கிராம், நொடி), MKS(மீட்டர், கிலோகிராம், நொடி), SI(ஏழு அலகுகள்) ஆகியவை. இவற்றில் SI முறை பன்னாட்டு அலகு முறையாக 1971இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

SI முதன்மை அலகுகள்
நீளம் - மீட்டர், எடை - கிலோகிராம்
நேரம் - நொடி, வெப்பநிலை - கெல்வின், ஒளிச்செறிவு - கேண்டிலா, மின்னோட்டம் - ஆம்பியர், பொருளின் அளவு - மோல்.

பிற அலகுகள்
பரப்பு - ச.மீ ,
கன அளவு - கனமீட்டர்,
அடர்த்தி - கிராம்/கனசெ.மீ. திசைவேகம் - மீ/நொடி முடுக்கம் - மீட்டர்/நொடி^2
விசை - நியூட்டன்
அழுத்தம் - பாஸ்கல்
ஆற்றல்,வெப்பம், வேலை - ஜுல்
பரப்பு இழுவிசை - நியூட்டன்/மீ
திருப்புத்திறன் - நியூட்டன் மீட்டர்
உந்தம் - கிலோகிராம் மீ/நொடி
தளக்கோணம் - ரேடியன்
திண்மக்கோணம் - ஸ்ட்ரேடியன்
கோண இடப்பெயர்வு - ரேடியன்
மின்னழுத்தம் - வோல்ட்
மின்னாற்றல் - கிலோ வாட்/மணி (யூனிட்)
மின்னூட்டம் - கூலூம்
மின்தடை - ஓம்
மின்தேக்கு திறன் - பாரட்
ஒலி - டெசிபல்
அலைநீளம் - ஆம்ஸ்டிராங்
அதிர்வெண் - ஹெர்ட்ஸ்
அணுநிறை - AMU (Atomic Mass unit)
கடல் ஆழம் - ஃபாத்தம்
கடல் தூரம் - நாட்டிகல் மைல்
பூமி அதிர்வு - ரிக்டர்

ஒரு மெட்ரிக் டன் - 1000 கி.கிராம்
மைக்ரோ - 10^(-6)
நேனோ - 10^(-9)
பிகோ - 10^(-12)
மெகா - 10^(6)
ஜிகா - 10^(9)
தேரா - 10^(12)

தூரம்

புவியின் மையத்திலிருந்து சூரியனின் மையம் வரை உள்ள சராசரித் தூரம் ஒரு வானியல் அலகாகும்(1.496 × 10^(11)மீ).
ஒரு ஒளி ஆண்டு9.467 × 10^(15)m ஆகும்.

புவியிலிருந்து ஒரு கோள் அல்லது சந்திரனின் தூரங்களைக் கணக்கிட ரேடியோ-எதிரொலிப்பு முறை, லேசர் துடிப்பு முறை, இடமாற்று தோற்ற முறை ஆகியவற்றைப் பின்பற்றுகிறோம்.

எடை

இடத்திற்கு இடம் மாறக்கூடிய எடை என்பது பொருளின் மீது செயற்படும் ஈர்ப்பியல் விசையின் மதிப்பை மட்டுமே குறிக்கும். சுருள்வில் தராசு மூலமும் எடை அளவிடப்படும். மீச்சிற்றளவை அளக்க வெர்னியர் அளவுகோலைப் பயன்படுத்தலாம். வெர்னியர் அளவுகோலின் சுழிப்பிரிவு முதன்மை அளவுகோலின் சுழிப்பிரிவுடன் சரியாக பொருந்தியிருந்தால் அக்கருவியில் சுழிப்பிழை இல்லை என பொருள்படும்.

எண்ணிலக்கத் (டிஜிட்டல்) தராசு, திரிபு அளவி தத்துவ அடிப்படையில் செயல்படுகிறது. லாரிகளின், டிரக்குகளின் எடை காண திரிபுமானி
தத்துவம் பயன்படுகிறது. 0.01மி.மீ பரிமாணமுள்ள பொருட்களின் பரிமாணங்களைத் துல்லியமாக அளக்க திருகு அளவி (திருகு தத்துவம்) பயன்படுகிறது. இயற்பியல் தராசு, ஆய்வகங்களில் பயன்பாட்டில் உள்ளது.

நேரம்

சூரியக்கடிகாரம், மணல்கடிகாரம்,அணுக்கடிகாரம், குவார்டஸ், எந்திரவியல் கடிகாரம் எனப் பல வகையான கடிகாரங்கள் இருந்தாலும் கடைசி இரண்டை மட்டுந்தான் அதிகம் பயன்படுத்துகிறோம்.

எந்திரவியல் கடிகாரத்தில் சுருள்வில்லின் மேல் பொருத்தப்பட்டுள்ள சமன்செய் சக்கரத்தின் உதவியால் சரியான நேரம் கணக்கிடப்படுகிறது.

குவார்ட்ஸ் கடிகாரங்கள் சிறந்த செயல்திறனும் துல்லியத் தன்மையும் கொண்டவை. அவற்றில் உள்ள குவார்ட்ஸ் படிகங்கள் உயர் அதிர்வெண்ணில் அதிரக்கூடியவை. மேலும் நேரமானது படிகக்காட்சி மூலம் காண்பிக்கப்படுகிறது. இந்தியாவின் திட்டநேரம் 82.5° கிழக்கு தீர்க்கரேகையை (அலகாபாத்) அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
ஜி.எம்.டி. - ஐ.எஸ்.டி = 5.5 மணி.
நாம் 5.5 மணி நேரம் பின்தங்கியிருப்போம்.

இயக்க நிலை, ஓய்வு நிலை

ஒரு பொருளின் ஓய்வு நிலையை மாற்ற முயற்சிக்கும் செயல் அல்லது இயக்க நிலையை மாற்றுகின்ற செயல், விசை எனப்படும். ஒரு பொருளின் இயக்க நிலை வேகம் மற்றும் திசையால் வரையறுக்கப்படுகிறது. புவி ஈர்ப்பு (gravitional)விசை, உராய்வு விசை, நிலை மின்விசை, காந்த விசை போன்ற பல விசைகள் உள்ளன. உராய்வு (friction)விசை தொடும் விசையாகும். உராய்வை குறைக்க எண்ணெய், உருண்டை தாங்கி, கிரிஸ் போன்றவை பயன்படுகின்றன. சாய்வு தளத்தில் பொருள்களின் இயக்கத்தை கலிலியோ ஆராய்ச்சி செய்தார். பின்னர் அவருடைய விசை மற்றும் இயக்க கருத்துக்களை ஆராய்ந்து ஐசாக் நியூட்டன் தன் விதிகளை வகுத்தார்.

நிலைமம்

நிலைமம் என்பது ஓய்வு நிலையில் உள்ள பொருட்கள் தொடர்ந்து ஓய்வு நிலையிலேயே இருக்க முயற்சிக்கும் அல்லது இயக்க நிலையில் உள்ள பொருட்கள் தொடர்ந்து இயக்க நிலையிலேயே இருக்க முயற்சிக்கும் நிலை. நியூட்டனின் முதல் விதி நிலைம விதியாகும். வெக்டர் அளவான உந்தத்திற்கு எண்மதிப்பும் திசையும் உண்டு. ஒரு பொருளின் நிறை, திசைவேகம் ஆகியவற்றுடன் இணைந்தது உந்தம் (momentum).

ஈர்ப்பு

ஈர்ப்பு காரணமாக தடையில்லாமல் தானே கீழே விழும் பொருளின் திசைவேகம் சீரான வேகத்தில் அதிகரிக்கிறது.
ஈர்ப்பு விசையால் ஏற்படும் முடுக்கம் ஈர்ப்பு முடுக்கம் எனப்படுகிறது.

இயக்கம்

தரையில் உருளும் பந்தின் இயக்கம் நேர்கோட்டு இயக்கமாகும். ஆனால் மிதிவண்டி சக்கரத்தின் இயக்கம் வட்ட இயக்கமாகும்.

ஆற்றல்

ஆற்றலை(energy) ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால் ஒரு வகை ஆற்றலை வேறொரு ஆற்றலாக மாற்ற முடியும். நிலை ஆற்றலும் இயக்க ஆற்றலும் சேர்ந்ததுதான் எந்திர ஆற்றல்.

வெப்பம் ஒருவகை ஆற்றல் என உலகிற்கு உணர்த்தியவர் ஜேம்ஸ் ஜுல். சூரிய ஆற்றலை பயன்படுத்தி ஆர்க்கிமிடிஸ் ரோமானிய கப்பல்களை எரித்ததாக கூறப்படுகிறது.

கவனம் செலுத்த வேண்டிய விதிகள்

கீழ்க்கண்ட இயற்பியல் விதிகளின் வரையறைகள் என்ன, அவை எப்படி பயன்படுகின்றன என்பதை தெளிவாக படித்துக் கொள்வது அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பயன்படும்.

நியூட்டனின் முதல், இரண்டாம், மூன்றாம் விதிகள்.
நியூட்டனின் பொது ஈர்ப்பு விதி, குளிர்வு விதி
மிதத்தல் விதி, ஆர்க்கிமிடிஸ் விதி, பாஸ்கல் விதி, பாயில் விதி, சார்லஸ் விதி, வெப்ப விளைவு பற்றிய சார்லஸ் விதி, கெப்ளர் விதிகள், ராமன் விளைவு, பெர்னோலி தேற்றம், ஓம் விதி, ஆம்பியர் விதி, பிளம்மிங் இடக்கை விதி, வலக்கை விதி, மின்காந்த தூண்டல் விதிகள், லென்ஸ் விதி , பாரடே முதல், இரண்டாம் விதிகள் ஆகியன.

தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

முந்தைய பகுதி - https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/880889-tnpsc-group-1-simple-notes-for-preparation-5.html

அடுத்த பகுதி அக்டோபர் 14 வெள்ளி அன்று வெளியாகும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்