டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 6

By செய்திப்பிரிவு


டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 6

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப் 1 தேர்வுகள் நவம்பர் 19 அன்று நடத்தப்பட இருக்கின்றன. குரூப்-1 தேர்வுக்கு தயார்செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு பாடத்துக்குமான எளிய முறை குறிப்புகளை போட்டித் தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர் ஜி.கோபாலகிருஷ்ணன் தொகுத்தளிக்கிறார். இன்றைய ஆறாம் பகுதியில் கடந்த இரண்டு பகுதிகளைப் போலவே ‘வரலாறு’ பாடத்துக்கான எளிய முறைக் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.


இந்திய வரலாறு - 3
குப்தர்கள்

குப்த வம்சத்தை தோற்றுவித்தவர் ஶ்ரீகுப்தர். குப்த மன்னர்களில் மிக முக்கியமானவர்கள் என கருதப்படுபவர்கள் விக்கிரமாதித்தன் என அழைக்கப்படும் இரண்டாம் சந்திரகுப்தற், இந்திய நெப்போலியன் எனப் போற்றப்படும் சமுத்திர குப்தர்.

முதலாம் சந்திர குப்தர்
(பொ.ஆ319-335 )
வலிமைமிக்க லிச்சாவி வம்சத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணந்தார். இவரது காலத்தில் முதன்முதலில் வெளியிடப்பட்ட தங்க நாணயங்களில் இவர்கள் இருவரது உருவங்களும் லிச்சாவையா என்ற வாசகமும் பொறிக்கப்பட்டிருந்தன.

சமுத்திர குப்தர்
(பொ.ஆ 335-380)
முதலாம் சந்திரகுப்தரின் மகன்.
இலங்கை அரசர் மேகவர்மன் சமுத்திரகுப்தரின் சம காலத்தவர். அவரது அவைப் புலவர் ஹரிசேனரின் அலகாபாத் தூண் கல்வெட்டில் அவர் இயற்றிய பிரயாகை மெய்கீர்த்தி பொறிக்கப்பட்டுள்ளது. மெய்கீர்த்தி என்பதன் பொருள் ஒருவரை பாராட்டிப் புகழ்வதாகும். பிரசஸ்தி என்ற மற்றொரு பெயரும் மெய்கீர்த்திக்கு உண்டு. இத்தூண் சமுத்திர குப்தர் ஆட்சிக்காலத்தை குறிக்கும் மிக முக்கியச் சான்றாகும்.
வட இந்தியாவில் 9 அரசுகளைக் கைப்பற்றிய சமுத்திர குப்தர் தென்னிந்தியாவில் பன்னிரண்டு அரசுகளைத் தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து கப்பம் கட்டச் செய்தார். பல்லவ மன்னன் விஷ்ணு கோபனைத் தோற்கடித்தார்.
விஷ்ணு பக்தரான சமுத்திர குப்தர் அரச மேலாதிக்கத்திற்காக குதிரைகளை தீயில் பலியிடும் அசுவமேத யாகம் நடத்தினார்.
கவிதைப்பிரியரான சமுத்திர குப்தர் வெளியிட்ட தங்க நாணயங்களில் அவர் வீணை வாசிப்பது போலிருக்கும். கவிராஜா என அழைக்கப்பட்டவர்.
அனைத்து போர்களிலும் வென்ற சமுத்திரகுப்தர் 'இந்திய நெப்போலியன்' என அழைக்கப்படுகிறார்.

இரண்டாம் சந்திரகுப்தர்
(பொ.ஆ380- 415)
வட இந்தியா முழுவதையும் தன் ஆட்சிக் குடையின் கீழ் கொண்டு வந்த பெருமை இவருக்கு உண்டு. சாகர்களை வென்றதால் சாகாரி என்ற பட்டத்தையும் இவர் பெற்றார். வரலாற்றில் இவரது காலம் பொற்காலம் என போற்றப்படுகிறது. கலை, இலக்கியம் ஆகியவை மிக்க சிறப்புடன் வளர்ச்சி பெற்றது.
இவரது அவையில் நவரத்தினங்கள் எனும் பல்துறை வல்லுநர்கள் இருந்தனர். கவிஞர் காளிதாசர், கணிதம் மற்றும் வானியல் வல்லுநர் வராகிமிரர், வடமொழியில் புலமை பெற்ற அமரசிம்மர் போன்றோர் மிக முக்கியமானவர்கள். பொ.ஆ 402 இல் டெல்லிக்கு அருகில் மெகரூலியில் இவர் நிர்மாணித்த துருப்பிடிக்காத இரும்புத் தூண் 1600 வருடங்கள் பழைமையானது. 6000 கிலோ எடையும் 23 அடி உயரமும் கொண்டது. விஷ்ணுவைப் போற்றும் வகையில் இத்தூண் அமைக்கப்பட்டுள்ளதாக பிராமி எழுத்துக்களில் சுலோகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இரும்பு மட்டுமில்லாது தங்கம், செம்பு, ஈயம், பித்தளை மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்களும் குப்தர்கள் காலத்தில் புழக்கத்தில் இருந்தன.

குப்தர் காலம்

சீன புத்த துறவி பாஹியான் இவரது காலத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்தார். தனது பயணக்குறிப்புகளில் மகத மக்கள்
செல்வ செழிப்போடு வாழ்ந்ததாகவும் மரண தண்டனை போன்ற கடுந்தண்டனை வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இவரது காலத்தில் வடமொழியில் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாச இலக்கியங்கள் ஓலைச்சுவடியில் எழுத்து வடிவம் பெற்றது.

தன்வந்திரி குப்தர்கள் காலத்தில் தலைசிறந்த ஆயுர்வேத மருத்துவராகத் திகழ்ந்தார்.
பாறை குடவரைக் கோயில்களின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியான கட்டுமான கோயில்களை எழுப்பியவர்கள் குப்தர்களே. அவை திராவிட பாணி கூறுகளை ஒத்துள்ளதாக கருதப்படுகிறது. சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது.

பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை முதலில் அறிவித்த ஆரியபட்டர் தனது நூலான சூரிய சித்தாந்தத்தில் சூரிய சந்திர கிரகணங்கள் தோன்றுவதற்கான காரணங்களை விளக்கியுள்ளார்.

மகாராஷ்ட்ரத்தின் பர்தாபூரில் அமைந்துள்ள அஜந்தா குகைகளில் வரையப்பட்ட இயற்கை ஓவியங்கள், குவாலியரில் உள்ள 'பாக்' குப்தர்களின் ஓவியக்கலைக்கு சான்றுகளாகும்.
இந்த ஓவியங்கள் 'டெம்போரா' எனும் பற்றோவிய முறைப்படி பாறைகளில் வரையப்பட்டதாகும்.

பதின்ம எண்முறை, இந்திய எண்முறை மற்றும் பூஜ்ஜியம் ஆகியவை குப்தர்கள் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. பொ.ஆ1983 இல் அஜந்தா ஓவியங்கள் யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டது. குப்தர்கள் கால வெள்ளி நாணயங்கள் 'ரூபிகா' எனப்பட்டன. முத்திரராட்ஷசம் எனும் நாடக நூலை விசாகதத்தர் எழுதினார்.
பஞ்சதந்திர நூலை தொகுத்து எழுதியவர் விஷ்ணுகுப்தர்.
இந்தியாவின் 'அறுவை சிகிச்சையின் தந்தை' என போற்றப்படுபவர் சுஸ்ருதா. சராக்கா சிறந்த மருத்துவ அறிவியல் வல்லுநராவார். பாணினி எழுதிய 'அஷ்டதியாயி' மற்றும் பதஞ்சலி எழுதிய 'மகாபாஷ்யம்' வடமொழி இலக்கணத்தை அடிப்டையாகக் கொண்டது.
காளிதாசர் எழுதிய நாடக நூல்கள் சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம் மற்றும் விக்கிரம ஊர்வசியம்.
மேலும் சிறப்பு மிக்க நூல்கள் மேகதூதம், ரகுவம்சம், ரிதுசம்காரம் மற்றும் குமாரசம்பவம்.

நாலந்தா பல்கலைக்கழகம் இரண்டாம் சந்திரகுப்தரின் மகனான குமார குப்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தில் எட்டு மிகப் பெரிய பாடசாலைகளும் மூன்று மகா நூலகங்களும் இருந்தன. புத்த தத்துவமே முக்கிய பாடமாக பயிற்றுவிக்கப்பட்டாலும் வேத இலக்கியங்கள் மற்றும் மருத்துவப் பாடங்களும் கற்றுத் தரப்பட்டன. தற்போது யுனெஸ்கோவால் உலக புராதன சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
குப்தர்கள் கால பொருளாதார வளர்ச்சிக்கு சார்த்தவாகா எனும் இடம் விட்டு இடம் செல்லும் வணிகர்கள் பெரிதும் உதவினர்.

ஆட்சி முறை : குப்தப் பேரரசு 'தேசம்' அல்லது ' புக்தி’ என்ற பெயரில் பல மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. அவற்றை 'உபாரிகா' எனும் ஆளுநர்கள் நிர்வகித்தனர். மேலும் மாகாணங்கள் 'விஷ்யா' எனும் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு அவற்றை விஷ்யாபதிகள் நிர்வகித்தனர். கிராம அளவில் கிராமிகா, கிராமியாகஷா எனும் அதிகாரிகள் செயல்பட்டனர். தூதகா எனும் ஒற்றர் அமைப்பு இருந்தது. காலாட்படையின் தளபதி பாலாதிகிரிதா என்றும் குதிரைப்படையின் தளபதி மஹாபாலாதிகிரிதா என்றும் அழைக்கப்பட்டனர். முக்கிய வருவாய் நிலவரியாகும். காமந்தகார் எழுதிய நிதிசாரம் எனும் நூல் கருவூலத்தின் இன்றியமையாயைப் பற்றியும் வருவாய்க்கான பல வழிகளைப்பற்றியும் விளக்குகிறது. பிராகிருதம் மக்கள் பேசப்படும் மொழியாகவும் வடமொழி ஆட்சி மொழியாகவும் இருந்தன.

நாடோடிப் பழங்குடியினரான ஹூனர்கள் ரோமாபுரியையும் கான்ஸ்டான்டிநோபிளையும் அதிக அளவு அச்சத்திற்கு உள்ளாக்கியவர்கள்.
ஹூனர்கள் படையெடுப்பு குப்தர்கள் வீழ்ச்சிக்கு காரணமானது. கடைசி மன்னர் ஸ்கந்த குப்தர் வீழ்ச்சிக்குப்பின் தோரமானர் அரசராக முடிசூட்டிக்கொண்டார். பின் அவரது மகன் மிகிரகுலர் ஆட்சி செய்தார்.

தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

முந்தைய பகுதி - https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/876432-tnpsc-group-1-simple-notes-for-preparation-part-5.html

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE