டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 5

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப் 1 தேர்வுகள் நவம்பர் 19 அன்று நடத்தப்பட இருக்கின்றன. குரூப்-1 தேர்வுக்கு தயார்செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு பாடத்துக்குமான எளிய முறை குறிப்புகளை போட்டித் தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர் ஜி.கோபாலகிருஷ்ணன் தொகுத்தளிக்கிறார். கடந்த புதன்கிழமை (28.09.2022) அன்று இந்தத் தொடரின் நான்காம் பகுதியில் ‘வரலாறு’ பாடத்துக்கான எளிய முறைக் குறிப்புகள் தொடங்கின. இன்றைய ஐந்தாம் பகுதியில் ‘வரலாறு’ தொடகிறது.


இந்திய வரலாறு -2

மௌரியர்கள்

மௌரியப் பேரரசை நிறுவி இந்தியாவை முதன்முதலில் ஒன்றாக்கிய முதல் இந்தியப் பேரரசர் சந்திரகுப்த மௌரியர் (பொ.ஆ.மு.322-298) ஆவார். தந்தை மகாபத்ம நந்தன். தாயார் முரா. சாணக்கியர் என பெயர் கொண்ட கௌடில்யரை குருவாக ஏற்று நந்த வம்சத்தின் கடைசி மன்னரான தனநந்தரை தோற்கடித்து தனது இருபது வயதில் பொ.ஆ.மு. 321இல் மகத மன்னராக முடிசூடினார். கிரேக்க மன்னர் மகாஅலெக்சாண்டர் மறைவுக்குப்பின் அவரது தளபதி செலூகஸ் நிகோடர் இந்தியாவில் கிரேக்கக் காலனிகளை ஆட்சி செய்து கொண்டிருந்தபோது பொ.ஆ.மு305 இல் சந்திரகுப்தர் அவர் மீது படையெடுத்து போரில் வென்றார். இரு வருட போருக்குப்பின் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி ஆப்கானிஸ்தானும் பலுச்சிஸதானும் சந்திர குப்த மௌரியரின் பேரரசுடன் இணைந்தன. செலூகஸின் மகள் ஹெலனாவை மணந்தார்.


மௌரியர் ஆட்சிமுறையைப் பற்றி கௌடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்ற நூல் மூலமும் கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா என்ற நூல் மூலமும் விரிவாக அறியலாம். தன் இறுதிநாட்களில் சமண மதத்தை தழுவிய சந்திர குப்த மௌரியர் பொ.ஆ.மு.298இல் சிரவணபெலகோலாவில் (கர்நாடக மாநிலம்) சமணத்துறவி பத்திரபாகு உட்பட பல முனிவர்களுடன் முக்தியடைந்தார்.

பிந்துசாரர்
சந்திரகுப்த மௌரியர்- ஹெலனா தம்பதியரின் மகனும் பேரரசர் அசோகனின் தந்தையுமான பிந்துசாரர் ஆட்சிக்காலம் பொ.ஆ.மு.297 முதல் பொ.ஆ.மு. 273 வரை. தீப வம்சம், மஹாவம்சம் போன்ற இலங்கை புத்த நூல்கள் பிந்துசாரோ என அவரை குறிப்பிட்டுள்ளன. சமண மதத்தின் ஒரு பிரிவான அசீவகம் எனும் துறவறநெறியை பின்பற்றினார்.

அசோகர்
அசோகர் தாயார் பெயர் சுமத்திராங்கி. காலம் பொ.ஆ.மு. 273 முதல் பொ.ஆ.மு. 232 வரை. தனது இளம்வயதில் அவந்தியின் ஆளுநராக செயல்பட்டவர். இந்து மதத்தை பின்பற்றியவர். பொ.ஆ.மு. 261 இல் நடைபெற்ற கலிங்கப் போருக்குப்பின் புத்தமதத்தை உபகுப்தர் மூலம் தழுவிய அசோகர் அம்மதத்தை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் தரும மகாமாத்திரர்கள் என்ற அதிகாரிகளை நியமித்து பரப்பினார். மகன் மகேந்திரன் மற்றும் மகள் சங்கமித்திரை ஆகியோரை இலங்கைக்கு அனுப்பி புத்தமதத்தை பரப்ப செய்தார். மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் புத்த மதத்தை பரப்பினார். பொ.ஆ.மு. 240இல் பாடலிபுத்திரத்தில் மூன்றாம் புத்த மாநாட்டை மொக்காலிபுத்த தீசர் தலைமையில் நடத்தினார். இம்மாநாட்டில் திரிபீடகங்கள் இறுதி வடிவம் பெற்றது. கபிலவஸ்து மற்றும் லும்பினி ஆகிய இடங்களுக்கு பொ.ஆ.மு.241இல் புனிதப்பயணம் மேற்கொண்டார்.

சாஞ்சி ஸ்தூபி (மத்தியப்பிரதேசம்)
மிகவும் பழைமையானது. பொ.ஆ.1849-51இல் இந்த ஸ்தூபியை அகழாய்வு செய்து அறிக்கை சமர்பித்தவர்கள் பிரிட்டனைச்சேர்ந்த அலெக்சாண்டர் கன்னிங்காம் மற்றும் லெப்டினன்ட் மெய்சி ஆவர். ஆயிரக்கணக்கான சாலைகளை அமைத்து அதன் இருபுறமும் நிழல் தரும் மரங்களை நட்டு நாட்டை நன்முறைக்கு இட்டுச்சென்ற அசோகர் பொ.ஆ.மு. 232 இல் மறைந்தார்.

அசோகருக்குப் பின்

அசோகருக்குப்பின் பேரரசு இரண்டாகப் பிரிந்தது. மேற்குப் பகுதியை உஜ்ஜயினியை தலைநகராகக் கொண்டு அவரது மகன் குணாளனும் கிழக்குப் பகுதியை பாடலிபுத்திரத்தை தலைநகராகக் கொண்டு அவரது பேரன் தசரத மௌரியரும் (பொ.ஆ.மு.232-224) ஆட்சி புரிந்தனர். தசரத மன்னர் புத்த மதத்தை பின்பற்றியதால் தற்போது பிஹாரில் ஜகானாபாத் மாவட்டத்தில் முக்தம்பூர் மலைப்பகுதியில் உள்ள பராபர் குகைகளை அசீவகத் துறவிகளுக்கு அளித்தார். மௌரிய வம்சத்தின் கடைசி மன்னர் பிரகித்ரன்(பொ.ஆ.மு.185-180).

மௌரியர் ஆட்சி முறை

மைய ஆட்சி, மாகாண ஆட்சி என இரு பிரிவாக இருந்தது. மையம் , குஜராத், வடமேற்கு மற்றும் மேற்கு என நான்காக பேரரசு பிரிக்கப்பட்டது. கலிங்கம் ஐந்தாம் மாகாணமாக்கப்பட்டது. அரசின் செயல்பாடிற்காக உள்ள அமைச்சரவையில் சேனாதிபதி, புரோகிதர், அமைச்சர்கள் மற்றும் இளவரசர் ஆகியோர் இருந்தனர்.
சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் 15 அதிகாரங்களும்
180 துணைப்பிரிவுகளும் 6000 பாடல்களும் உள்ளன.
அனைத்தும் மூன்று காண்டங்களாக தொகுக்கப்பட்டுள்ளது.
அரசன், அமைச்சரவை-காண்டம் 1
அரசியல் சட்டம் மற்றும் பொருளாதாரம் - காண்டம் 2
ஆட்சிமுறை, அரச தந்திரங்கள் மற்றும் போர்முறை - காண்டம் 3.

இலக்கியவளம், நாணயம்

கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா எனும் நூல் பண்டைய இந்தியாவின் வரலாற்றை அறிய பயன்படுகிறது.
பாதபாதராயனரின் பிரம்ம சூத்திரம், ஜைமினியின் மீமாம்சக சூத்திரம், வசிஷ்ட, கௌதம, ஆபஸ்தம்ப மற்றும் போதாயண தர்மசாஸ்திரங்களும் மௌரியர் காலத்தில் தோன்றியவை. பெரும்பாலும் இந்து சமய இலக்கியங்கள் வடமொழியிலும், புத்த இலக்கியங்கள் பிராகிருத மொழியிலும் மேலும் சமண இலக்கியங்கள் பாலி மொழியிலும் தோன்றின.

மௌரியர்கள் பயன்படுத்திய நாணயம் பனா. மௌரியர்கள் தமிழக கலாச்சாரத்திற்கு ஆற்றிய தொண்டு பிராமி எழுத்துக்கள் ஆகும்.

ஜேம்ஸ் பிரின்செப் என்பவரால் பொ.ஆ.1837 இல் அசோகரது கல்வெட்டுகள் முதன்முதலாக படித்தறியப்பட்டன. மஸ்கி கல்வெட்டில் மட்டும் தான் அசோகர் என அவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மற்ற கல்வெட்டுகளில் தேவனாம்பிரியா பிரியதர்சனி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 14 பாறை கல்வெட்டுகளில் பதின்மூன்றாம் கல்வெட்டு கலிங்கப்போரையும் ஏழாவது கல்வெட்டு அவரது பேரரசின் தர்மத்தை பரப்ப மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. பெரும்பாலும் கல்வெட்டுகள் கரோஸ்தி வரி வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. மௌரியர்கள் ஆட்சியின் பல அம்சங்களை அவர்களுக்குப்பின் வந்த ஆட்சியாளர்கள் பின்பற்றி இந்தியாவில் ஆட்சி புரிந்ததாக வரலாறு பகர்கிறது.

(அடுத்த பகுதியிலும் ‘வரலாறு’ - எளியமுறைக் குறிப்புகள் தொடரும்)

தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

முந்தைய பகுதி - https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/875260-tnpsc-group-1-simple-notes-for-practice-part-4.html

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்