திரை விழா: அதிரடி அறிமுகம்!

By செய்திப்பிரிவு

பாலிவுட்டில் பல ‘கான்’ நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் சவால் கொடுப்பதற்காக பெங்களூருவிலிருந்து கிளம்பியிருக்கிறார் அங்கே பிறந்து, வளர்ந்த ஜையித் கான். ஜெய தீர்த்தா எழுதி இயக்கியிருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் மூலம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளோடு இந்தியிலும் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அறிமுகப் படமே பிரம்மாண்ட பட்ஜெட், ‘பான் இண்டியா’ ரிலீஸ் என அதிர வைக்கும் இந்த ஜையித் கான் வேறு யாருமல்ல; பெங்களூரு மாநகரின் முக்கியச் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகிய சாம்ராஜ்பேட்டையில் நின்று, நான்கு முறை கர்நாடகச் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ்காரரான ஷமீர் கானின் மகன். கடந்த காங்கிரஸ் அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்த ஷமீர் கான், தென்னிந்தியாவின் முக்கியத் தனியார் ஆம்னி பேருந்து போக்குவரத்து நிறுவனமாகிய நேஷனல் டிராவல்ஸின் பங்குதாரர்களில் ஒருவரும் கூட!

அப்பா அரசியல்வாதி, தொழிலதிபர் என்றபோதும் மகன் ஜையித் கானுக்குச் சிறு வயது முதலே சினிமா மீது ஆர்வம்! பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நடத்தி வரும் ‘ஆக்டர்ஸ் ப்ரிபேர்ஸ்’ நடிப்புப் பள்ளியில் இரண்டு வருடம் தங்கிப் படித்து முறைப்படி நடிப்பைக் கற்றுக்கொண்டு நடிக்க வந்திருக்கிறார்.

எடுத்த எடுப்பிலேயே கதாநாயகன் ஆவது என முடிவெடுத்து 150 கதைகள் வரைக் கேட்டுச் சலித்துப் போன ஜையித்துக்கு, கன்னட சினிமாவில் ‘ப்யூட்டிஃபுல் மனசுகுலு’, ‘பெல்பாட்டம்’ என இரண்டு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கும் ஜெய தீர்த்தா சொன்ன கதை பிடித்துப்போக, உடனே படத்துக்கு லொக்கேஷன் பார்க்க, வாராணசி, பனாரஸ் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் காசி மாநகரத்துக்குச் சென்றிருக்கிறார்கள். இதன் பிறகு நடந்தவற்றை பெங்களூருவில் சமீபத்தில் நடந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நம்முடன் பகிர்ந்துகொண்டார் ஜையித்: “இதுவொரு டைம் டிராவல் காதல் கதை. இந்தியாவில் உள்ள எல்லா மொழிப் பார்வையாளர்களுக்கும் பொதுவான கதை. பாலா இயக்கத்தில் தமிழில் வெளிவந்த ‘நான் கடவுள்’ படத்தில் பனாரஸின் ‘டார்க் சைட்’டைக் காட்டியிருப்பார். இதில் நாங்கள் அந்த நகரத்தின் வண்ணமயமான அழகையும் ஆன்மிகத்தையும் கதைக் களத்துக்குள் கொண்டு வந்திருக்கிறோம்.

முதல் படத்திலேயே பல மறக்க முடியாத அனுபவங்கள். 150 உடல்கள் ஒரே நேரத்தில் எரிந்துகொண்டிருந்த மயானக்கரையில் ஒரு காதல் காட்சியைப் படமாக்கினார் இயக்குநர். நூறு அடி தூரத்தில், எரியூட்டத் தயராக இருக்கும் சிதைகளுக்கு அருகில் நின்று இறந்தவரின் உறவினர்கள் அழுதுகொண்டிருக்க.. சற்று தூரத்தில் வந்துகொண்டிருக்கும் நாயகியைப் பார்த்து, ‘காதல் உணர்வை முகத்திலும் கண்களிலும் கொண்டு வரவேண்டும்’ என்றார் இயக்குநர். அந்தச் சூழ்நிலையில் அந்தக் காட்சியில் நடிக்க மிகவும் சிரமப்பட்டேன். ‘நீங்கள் பார்ப்பதற்கு இந்தி நடிகரைப் போல் இருக்கிறீர்கள்; பாலிவுட்டில் நுழையத்தான் இந்தப் படமா?’ என்று கேட்கிறார்கள். நான் ஒரு கன்னடிகா. கன்னட சினிமாவில் முதலில் ஜெயிக்க விரும்புகிறேன். மற்ற மொழிப் பார்வையாளர்களும் விரும்பும் கதைகளில் அதிகமாக நடிக்க விரும்புகிறேன்” என்றார். இந்தப் படத்தில் ஜையித் கானுக்கு ஜோடியாக முன்னணிக் கன்னடக் கதாநாயகியான சோனல் மாண்டீரோ நடித்திருக்கிறார்.

படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கு கன்னட சூப்பர் ஸ்டார் ரவிச்சந்திரன், சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் உட்படப் பல ‘சாண்டல்வுட்’ பிரபலங்கள் கலந்துகொண்டனர். ‘பனாரஸ்’ வரும் நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்