தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப் 1 தேர்வுகள் நவம்பர் 19 அன்று நடத்தப்பட இருக்கின்றன. குரூப்-1 தேர்வுக்கு தயார்செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு பாடத்துக்குமான எளிய முறை குறிப்புகளை போட்டித் தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர் ஜி.கோபாலகிருஷ்ணன் தொகுத்தளிக்கிறார். கடந்த திங்கள்கிழமை (23.09.2022) அன்று இந்தத் தொடரின் மூன்றாம் பகுதியில் ‘கணிதம் 3’ என்னும் தலைப்பில் எளிய முறை குறிப்புகள் வெளியாகியிருந்தன. இன்றைய நான்காம் பகுதியில் ‘வரலாறு’ பாடத்துக்கான எளிய முறைக் குறிப்புகள் தொடங்குகின்றன.
இந்தியவரலாறு - 1
சோழப் பேரரசு
சங்க காலத்திற்கு பின் உறையூரில் சிற்றரசர்களாக சோழர்கள் வாழ்ந்து வந்தனர். பொ.ஆ.(கி.பி.) 880 ஆம் ஆண்டு காந்த மனோகரச் சோழனின் மகன் கோப்பரகேசரி வர்மன் விஜயாலய சோழன் (பொ.ஆ.847 -884) திருப்பிறம்பியம் போரில் முத்தரையர்களிடமிருந்து தஞ்சாவூரை கைப்பற்றி அங்கு ஒரு துர்க்கை கோயிலை கட்டினார். அவரது மகன் ஆதித்ய சோழன் அபராஜித பல்லவனைத் தோற்கடித்துத் தொண்டை மண்டலத்தைத் தனது அரசுடன் இணைத்துக்கொண்டார்.
» டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 3
» டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 2
முற்கால சோழ அரசர்களில் முதலாம் பராந்தகன் (907-955) பாண்டியர்களையும் இலங்கை மன்னர்களையும் தோற்கடித்தாலும் ராஷ்டகூடர்களிடம் தோல்வியைத்
தழுவினார். ‘மதுரை கொண்டான்’ எனும் சிறப்புப் பெயர் இவருக்குண்டு. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குக் கூரை வேய்ந்த பெருமை இவருக்குண்டு. சோழர்காலத்து கிராம ஆட்சிமுறை பற்றி கூறும் புகழ்பெற்ற உத்திரமேரூர் கல்வெட்டு இவர் காலத்தவை.
ஏறக்குறைய 30 வருடங்களுக்கு பிறகு முதலாம் ராஜராஜன் மூலம் சோழர்கள் புகழ் ஓங்கியது.
தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தனர்.
முதலாம் ராஜராஜன் (ஆட்சிக் காலம் - பொ.ஆ. 985-1014)
இரண்டாம் பராந்தகனின் மகனான முதலாம் ராஜராஜனின் போர் வெற்றிகளின் மூலம் சோழப்பேரரசு விரிவடைந்தது. சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மனின் கடற்படைகளை காந்தளூர் சாலை என்ற இடத்தில் முறியடித்து வெற்றி பெற்றார். பாண்டியன் அமரபுஜங்கனை வீழ்த்தி அப்பகுதியையும் தனது பேரரசுடன் இணைத்தார். ராஜராஜனின் மகன் முதலாம் ராஜேந்திரன் இலங்கை படையெடுப்பை மேற்கொண்டு வடக்கு இலங்கையை இணைத்தார். இலங்கையை ஆண்டுவந்த ஐந்தாம் மகிந்தன் நாட்டைவிட்டே ஓடினார். தலைநகரம் அணுராதபுரத்திலிருந்து பொலநரூவாவிற்கு மாற்றினார். அங்கு ஒரு சிவாலயம் கட்டப்பட்டது. கல்யாணி சாளுக்கிய மன்னன் சத்யஶ்ரீயன், ராஜேந்திரனால் தோற்கடிக்கப்பட்டு ரெய்ச்சூர், பனவாசி போன்ற இடங்களும் பேரரசுடன் இணைக்கப்பட்டு துங்கபத்திரை நதிக்கரை வரை அரசு விரிவடைந்தது. தெலுங்கு சோடர்களை வெற்றிகொண்டு வெங்கி சிம்மாசனத்தை சக்தி வர்மனுக்கும் விமலாதித்தனுக்கும் மீட்டு கொடுத்து தனது மகள் குந்தவையை விமலாதித்தனுக்கு மணமுடித்து வைத்தார் ராஜராஜ சோழன்.
இவரின் இறுதி படையெடுப்பு மாலத்தீவிற்கு எதிரான கடற்படையெடுப்பு ஆகும். சிறந்த சிவபக்தரான முதலாம் ராஜராஜனின் பட்டப்பெயர்கள் மும்முடிச்சோழன், ஜெயங்கொண்டான் , ராஜசேகர், அருண்மொழி மற்றும் சிவபாத சேகரன். உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் எனப்படும் பிரகதீஸ்வர் சிவாலயம் பொ.ஆ. 1010 இல் இவரால் கட்டி முடிக்கப்பட்டது. இவரது ஆதரவில் நாகப்பட்டினத்தில் புத்த மடலாயம் கட்டப்பட்டது.
முதலாம் ராஜேந்திர சோழன் (பொ.ஆ 1012- 1044)
தந்தையைத் தொடர்ந்து தானும் பேரரசை பல வழிகளில் விரிவுபடுத்தினார். வடக்கு இலங்கையை கைப்பற்ற எண்ணிய ஐந்தாம் மகிந்தனின் தெற்கு பகுதியையும் கைப்பற்றி இலங்கை முழவதுமே தன் பேரரசின் கீழ் கொணர்ந்தார். சேர, பாண்டிய பகுதிகளை உறுதிபடுத்தி மேலை சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மனை மீண்டும் முறியடித்து துங்கபத்திரை வரை தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார். கங்கை நதியைக் கடந்து சென்று வங்க அரசன் முதலாம் மகிபாலனை வென்றதன் பொருட்டு கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய நகரை நிர்மாணித்து தஞ்சை பெரியகோயிலைப் போன்று புகழ்பெற்ற ராஜேஸ்வரர் ஆலயத்தை அங்கு கட்டினார். அதனருகில் சோழகங்கம் எனும் ஏரியை நீர்ப்பாசனத்திற்காக நிர்மாணித்தார்.
ஶ்ரீவிஜயம் என கூறப்படும் அவரது கடார படையெடுப்பின் காரணமாக கடாரம் கொண்டான் என்ற பெயரை சூட்டிக்கொண்டார். அவரும் ஒரு சிறந்த சிவபக்தர். முடி கொண்டான், பண்டித சோழன் மற்றும் கங்கை கொண்டான் என்ற பட்டப்பெயர்களும் இவருக்கு உண்டு. புதிய தலைநகராக கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கினார்.
குலோத்துங்க சோழர்கள்
ராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கதேவியின் வாரிசான முதலாம் குலோத்துங்கன் பின்னர் பொறுப்பேற்ற மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை சோழப்பேரரசு புகழுடன் திகழ்ந்தது. முதலாம் குலோத்துங்கன் 72 வணிகர்கள் அடங்கிய குழு ஒன்றை சீனாவுக்கு அனுப்பி அயல் வாணிபத்தை பெருக்கினார். குலோத்துங்கன் தன் மகளை இலங்கை மன்னன் விஜயபாகுவிற்கு மணம் முடித்தார். குலோத்துங்கனின் கலிங்கப்படையெடுப்பை பற்றி ஜெயகொண்டார் கலிங்கத்துப் பரணி எனும் இலக்கியத்தை படைத்தார்.
மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பாண்டியர்கள் மற்றும் காடவராயர்களின் வளர்ச்சி சோழ அரசின் வலிமை குன்ற காரணமாயிற்று. கடைசி சோழ அரசன் மூன்றாம் ராஜேந்திரனை வென்ற ஜடவர்ம பாண்டியன் சோழ அரசை பாண்டிய நாட்டுடன் இணைத்துக் கொண்டார்.
பெருந்தனம், சிறுதனம்
சோழர்கள் ஆட்சிக்கு பொறுப்பு வகித்த அதிகார வர்க்கம் பெருந்தனம் மற்றும் சிறுதனம் என அழைக்கப்பட்டது.
நிலங்கள் முறையாக அளந்து வகைப்படுத்தி நிலவரி புரவுவரிதிணைக்களம் எனும் நிலவருவாய்த்துறை மூலம் வசூலிக்கப்பட்டது. கிராமப்புறப் பகுதிகள் ஊர் நத்தம் என அழைக்கப்பட்டு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. மேலும் கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்களுக்கும் வரி கிடையாது. ஒரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு பொருள்களை கொண்டு செல்ல சுங்கவரி வசூலிக்கப்பட்டது. துயர்மிகு காலங்களில் வரிவிலக்கும் அளிக்கப்பட்டதால் முதலாம் குலோத்துங்கன் தனக்குச் ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ எனும் பட்டப்பெயரைச் சூட்டிக்கொண்டார். சோழர் கல்வெட்டுகளில் ஏறக்குறைய எண்பது படைப்பிரிவுகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. மன்னரின் தனிப்டை கைக்கோளப் பெரும்படை எனப்பட்டது. சோழர்கள் காலத்தில் சிறந்து விளங்கிய கப்பற்படை தலைவர்கள் நாயகர், சேனாதிபதி மற்றும் மகாதண்ட நாயகர் என அழைக்கப்பட்டனர். ராணுவ முகாம்கள் கடகங்கள் என அழைக்கப்பட்டன. வங்காள விரிகுடா, சோழ ஏரி எனப்பட்டது.
ஆட்சிப் பிரிவுகள்
பேரரசு பல மண்டலங்களாகவும், மண்டலங்கள் பல வளநாடுகளாகவும், வளநாடுகள் பல நாடுகளாகவும், நாடுகள் பல நகரங்கள் மற்றும் கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன.
இந்தப் பிரிவுகளுக்குத் தலைமை வகித்தவர்களின் பதவிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மண்டலங்கள் - ஆளுநர்கள் (அரச குலம்)
வள நாடுகள் - பெரிய நாட்டார்
நாடுகள் - நாட்டார்
நகரங்கள் - நகரத்தார் அவை
கிராமங்கள் - கிராம சபைகள்
குடவோலை முறை
கிராம சபைகள் பற்றி முதலாம் பராந்தக சோழன் காலத்து உத்திரமேரூர் கல்வெட்டு பகர்கிறது.
ஒவ்வொரு கிராமமும் முப்பது குடும்பு (இன்றைய வார்டைப் போன்றது) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு உறுப்பினரும் தேர்வு செய்யப்பட்டனர்.
உறுப்பினர் தகுதிகள் : சொந்த வீடு, சொந்த கால்வேலி நிலம் மற்றும் 30முதல் 70வயதிற்குள் இருக்கவேண்டும்.
மேலும் வேதங்கள் பற்றிய அறிவும் தேவை.
ஒரு உறுப்பினர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் அப்பதவியில் இருக்கமுடியாது.
பெருங்குற்றங்கள் புரிந்தவர்கள், பிறர் பொருட்களை களவாடியவர்கள், இதற்குமுன் சரிவர கணக்கு காட்டாதவர்கள் உறுப்பினர்களாக தகுதியற்றவர்கள்.
தகுதி பெற்ற போட்டியிடும் நபர்களின் பெயர்களை பனை ஓலைகளில் ஒரு குடத்தில் இட்டு ஒரு சிறுவன் அல்லது சிறுமியை விட்டு எடுக்க வைப்பர். இம்முறைக்கு குடவோலை முறை எனப் பெயராகும்.
கிராம சபையின் முப்பது உறுப்பினர்களும் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் ஒரு வாரியத்தை கவனித்துக் கொள்ளும். ஆறு வாரியங்கள் : சம்வத்சரம், ஏரி, தோட்டம், பஞ்சவாரம், பொன் மற்றும் புரவுவரி. இதன் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள் என அழைக்கப்பட்டனர்.
கிராமத்திற்கு கிராமம் உறுப்பினர்கள் மற்றும் குழுக்களின் எண்ணிக்கையும்
வேறுபட்டிருந்தது.
கூட்டங்கள் மரநிழலிலோ கோயில்களிலோ நடைபெற்றன.
வணிகம், சமூகம், சான்றோர்
சோழர்களது முக்கிய இறக்குமதி பொருள் குதிரைகள்.
சோழர்கால கல்வெட்டுகளில் வலங்கை, இடங்கை என சாதிப்பிரிவுகள் பற்றி குறிப்புகள் இருந்ததால் சாதிமுறையைத் பின்பற்றியது தெரிகிறது. பிராமணர்கள் மற்றும் சத்திரியர்கள் பல சலுகைகளை அடைந்தனர். இருப்பினும் சாதி ஒற்றுமை காணப்பட்டது. சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம் புழக்கத்தில் இருந்தது. நாட்டிய மகளிர் அடங்கிய தேவதாசி முறை சோழர்கள் காலத்தில்தான் தோன்றியது. காடுகளும் விளைநிலங்களாக மாற்றப்பட்டு வேளாண்மை செழித்தது. நெசவுத் தொழில் சிறப்புற்றதால் காஞ்சிபுரம் பட்டு நெசவுக்கு பெயர் போனது. உலோகத் தேவை காரணமாக அத்தொழிலும் சிறந்து விளங்கியது.
கம்பர், ஒட்டகூத்தர் மற்றும் புகழேந்தி ஆகிய புலவர்கள் இரண்டாம் குலோத்துங்கன் அவையில் இருந்தனர். திருத்தொண்டர் புராணம் எனப்படும் நாயன்மார்கள் வரலாற்றைக் கூறும் பெரியபுராணத்தை இயற்றியவர் சேக்கிழார். இவர் இரண்டாம் குலோத்துங்கனின் அவைப் புலவர். உத்தம சோழ பல்லவன், தொண்டர்சீர் பரவுவார் எனப் பட்ட பெயர்களும் இவருக்கு உண்டு. உமாபதி சிவச்சாரியார் எழுதிய சேக்கிழார் புராணமும் மீனாட்சி சுந்தரம்பிள்ளை எழுதிய சேக்கிழார் பிள்ளைத்தமிழும் இவரது புகழை பறை சாற்றுகின்றன என்றால் மிகையாகாது.
பொதுவாக சோழர்கள் காலம் தமிழக வரலாற்றில் முக்கியமானமான பங்கு வகித்தது என்பதில் ஐயமில்லை.
(செப்டம்பர் 30 வெள்ளிக்கிழமை வெளியாகும் அடுத்த பகுதியில் வரலாறு குறிப்புகள் தொடரும்)
தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்
முந்தைய பகுதி - https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/874115-tnpsc-group-1-simple-methods-for-preparation-part-2-mathematics.html
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago