இந்தியாவின் மோனலிசா - வைரலாகும் மீம்ஸ்

By ராகா

மீம்ஸ் இன்றி அமையாது உலகு’ என்று சொல்லும் அளவுக்கு நாள்தோறும் நடக்கும் முக்கிய நிகழ்வுகளையும் ஜாலி நிகழ்வுகளையும் மையமாக வைத்து எண்ணற்ற மீம்ஸ் உருவாகிவருகின்றன. மீம்ஸ்க்குச் சிக்காத ஆளே இல்லை எனச் சொல்லலாம். ஒபாமா முதல் ஜி.பி. முத்து வரை மீம் டெம்ப்ளேட்டாக மாறாத பிரபலங்கள் குறைவே.

அந்த வரிசையில், இந்த வாரம் சிக்கி இருப்பது உலகப்புகழ் பெற்ற ‘மோனலிசா’ ஓவியம். இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஓவியர் லியோனார்டோ டாவின்சிவின் கைவண்ணத்தில் உருவானது மோனலிசா ஓவியம். ஏற்கெனவே, மோனலிசா ஓவியத்தை வைத்து சில மீம்கள் வந்திருந்தாலும், இம்முறை சற்று வித்தியாசமாகவே வந்திருக்கிறது.

இந்தியாவைச் சேர்ந்த ட்விட்டர் பிரபலம் பூஜா சங்வானை ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். ஆன்லைனில் செம ஆக்டீவான அவர், அவ்வப்போது சில பதிவுகளைப் பதிவிட்டுவருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், மோனலிசா புடவை அணிந்திருப்பது போன்ற படங்களைப் பகிர்ந்திருந்தார். இந்திய மாநிலங்களை அடையாளப்படுத்தும் வகையில் விதவிதமான புடவைகளை மோனலிசா அணிந்திருப்பது போல அந்தப் படங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

மாநிலங்களுக்கு ஏற்ப மோனலிசாவுக்குப் பெயரும் மாற்றப்பட்டிருந்தது. பிஹார் - லிசா தேவி, தெலங்கானா - லிசா பொம்மா, கேரள - லிசா மோல் எனக் குறிப்பிடப்பட்டு வெளியான அந்தப் படங்கள் வைரலாகின. அவை ட்விட்டர்வாசிகளின் லைக்ஸ்களை அள்ளின. எனினும், இது ஒரு விளம்பர உத்திதான் என்பது அப்பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரேஷா வேவ்ஸ் என்கிற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் ஐடியாதான் இது எனவும், மீம்கள் மூலம் தங்களது துணிக் கடைக்கு விளம்பரம் தேடிக்கொண்டுள்ளனர் என்பதும் தெரியவந்தது. பொழுதுபோக்கிற்காக மீம்கள் பதிவிட்டுவந்த நிலை மாறி, விளம்பரங்களுக்காகவும் மீம்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE