சிறப்புக் கட்டுரை: குழந்தைகள் எதைக் கொண்டு செல்கிறார்கள்..?

By நாசர்

பள்ளியில் பயிலும் காலத்திலேயே மாணவர்களுக்கு ‘சினிமா ரசனை’ (Film Appreciation) வகுப்பு நடத்தப்பட வேண்டும். இதை நீண்ட காலமாக விவாதித்து வந்தோமே தவிர செயல்படுத்தவில்லை.

இப்போதுதான் அது நடைமுறைக்கு வந்திருக்கிறது. அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரம் சிறார் திரைப்படம் ஒன்றைத் திரையிடுதல், திரையிடலுக்குப் பின்னர் அப்படம் குறித்த மாணவர்களின் எதிர்வினைகளைப் பெற்று அவர்களை ஊக்குவித்தல் என்கிற தமிழ்நாடு அரசின் இத்திட்டம் பெரும் மகிழ்வுடன் வரவேற்கத்தக்கது.

பெரும்பாலான மேலை நாடுகளில், மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ‘ஃபிலிம் அப்ரிசியேசன்’ என்கிற ‘சினிமா ரசனை’யை வளர்க்கும் பாடவேளை உண்டு. அதில் திரைமொழி குறித்தும் அக்கலையை எப்படி அணுகுவது என்பதையும் கற்றுக்கொடுக்கிறார்கள்.

பிறகு அதே மாணவர்கள் கல்லூரிக்கு செல்லும்போது, அங்கே செயல்படும் ‘பிலிம் சொசைட்டி’கள் திரையிடும் தரமான திரைப்படங்களைப் பார்த்து தங்களது சினிமா ரசனையை மென்மேலும் வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. ஆனால், கடந்த நூறாண்டுகளில் சினிமாவை நாம் பொழுதுபோக்கு என்பதாகவே புரிந்து வைத்திருக்கிறோம்.

மக்களை பெரிதும் பாதிக்கும் ஓர் ஊடகம் என்று சினிமாவை மேம்போக்காக சொல்லி வந்திருக்கிறோமே தவிர, அது பற்றிய ஒரு தீவிரமான விவாதத்தை நாம் முன்னெடுத்ததே இல்லை என்பதுதான் உண்மை. அதற்கான காரணமும் வெளிப்படையானது. சினிமாவை உருவாக்குபவர்கள், அதைக் காணும் பார்வையாளர்கள் ஆகிய இரண்டு தரப்பினருமே ‘சினிமா ரசனை’ என்பது பற்றி அறிந்துகொள்ளாமலே சினிமாவை படைப்பவர்களாகவும் பார்ப்பவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

குற்றவுணர்ச்சி எழுந்தது

சிறார் திரைப்பட விழா எனும் இத்திட்டத்தின் முதல் திரையிடல் நிகழ்வில் பங்கேற்று, மாணவர்களுடன் கலந்துரையாட வரும்படி பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ் அழைத்திருந்தார். அதை மகிழ்வுடன் ஏற்று, சென்னை, சாலிகிராமத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றிருந்தேன். திரையிடலுக்குப் பின் அங்கே குழுமியிருந்த மாணவிகளுடன் உரையாடியபோது எனக்கு ஏற்பட்டக் குற்றவுணர்ச்சியைப் பற்றி கூற விரும்புகிறேன்.

உலக அளவில் சினிமாவுக்கு 120 ஆண்டுகள் வரலாறு இருக்கிறதென்றால், அது தமிழ் சினிமாவுக்கும் பொருந்தும். தமிழ்த் திரையுலகைப் பிரதிநிதித்துவப்படுத்துபவன் என்கிற முறையில் இந்த 120 ஆண்டுகளில் ‘சிறார் சினிமா’ எடுக்காதது நாங்கள் செய்த பெருங்குற்றம். எனது மொழியில் அல்லது எங்களது பிராந்திய மொழிகளில் சிறார்களுக்காகவே எடுக்கப்பட்ட படங்கள் என்று எவற்றையெல்லாம் இன்றைய பள்ளிப் பிள்ளைகளுக்குக் காட்ட முடியும் என்று தேடினால் பெரும் ஏமாற்றமே முகத்தில் அறையும்.

நான் கலந்துகொண்ட திரையிடல் நிகழ்ச்சியில் ஒரு மாணவி எழுந்து “ நீங்கள் எப்போது சார்.. குழந்தைகளுக்கான படம் எடுப்பீர்கள்?” என்று என்னிடம் கேட்டார். அப்போது கொல்லென்று அந்த அரங்கமே சிரித்தது. அவருக்கு நான் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திக்குமுக்காடிப்போனேன். அந்த மாணவி என்னைப் பார்த்து அந்தக் கேள்வியை கேட்டார் என்பதைவிட, நான் சார்ந்திருக்கும் தமிழ்த் திரையுலகைப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்டார் என்பதே சரி.

நமக்கு வசதிப்படும்போது ‘சினிமா ஒரு பொழுதுபோக்கு’ என்று பேசுகிறோம். அப்படிப் பேசிகொண்டே ‘சினிமா மாற்றத்தைக் கொண்டுவரும் சக்தி வாய்ந்த கலை’ என்றும் பேசுகிறோம். இந்தக் குழப்பம் நம் சுயநலம் சார்ந்ததாக இருக்கிறது. பால் என்பது பாலாகவும் தண்ணீர் என்பது தண்ணீராகவும்தான் இருக்கமுடியும்.

ஆனால், இந்த இரண்டுக்குமே நாம் இடமளித்திருப்பதைப் போலவேதான் சினிமாவுக்கும் இடம் தந்திருக்கிறோம். சீனிமாவைப் பொழுதுபோக்கு என்றே வைத்துகொண்டால், குழந்தைகளுக்குத்தான் பொழுதுபோக்கும் கேளிக்கையும் அதிகமாகத் தேவைப்படுகிறது. இந்த உண்மையை படைப்பவர்களும் உணரவில்லை, அதற்குப் பணம் போடுகிறவர்களும் உணரவில்லை என்பதுதான் நூறாண்டு தமிழ் சினிமா வரலாற்றில் கசப்பான உண்மை.

நாசர்

புரிதலும் பாதையும்

சினிமா ஒரு வியாபாரம், இதில் முதலீடு செய்தால் நிறைய லாபம் சம்பாதிக்க முடியும் என்பதே சினிமாவின் மீது இதுவரை நாம் வைத்துள்ள ஒற்றை கோணம். ஆனால், மேலை நாடுகளில், ஹாலிவுட்டில் என்ன செய்திருக்கிறார்கள் என்றால், பொழுதுபோக்கு என்பது குழந்தைகளுக்கான விஷயம் என்பதில் சிறந்த புரிதலைக் கொண்டிருக்கிறார்கள்.

நூறு வயதானாலும் எல்லாருக்குள்ளும் ஒரு குழந்தை மனம் இயங்கிக்கொண்டேதான் இருக்கும். எனவே குழந்தைகளுக்காகப் படமெடுத்தால் அது பெரியவர்களுக்கான படமும்தான் என்பதை தெளிவாக விளங்கிக்கொண்டு, ‘சிறார் சினிமா’க்களை தொடக்கம் முதலே அதிக எண்ணிக்கையில் கொடுத்து வருகிறார்கள்.

இந்தப் புரிதலும் சிறார் சினிமாவில் அவர்களது பாதையும் அங்கே சார்லி சாப்ளின் காலத்திலேயே தொடங்கிவிட்டது. மிக்கி மவுஸ் தொடங்கி டின் டின் வரை எண்ணற்ற கதாபாத்திரங்களால் அவர்கள் சிறார்களின் உலகை செழுமைபடுத்தியிருக்கிறார்கள். 2டி, 3டி அனிமேஷன் தொழில்நுட்பம் வளரவளர சிறார் சினிமாவை அறிவியல் புனைவாகவும் ஃபேண்டஸி புனைவாகவும் இன்னும் வேறு வேறு வகைமைகளில் வெகுவாக அங்கே வளர்த்தெடுத்துவிட்டார்கள்.

ஹாரிபாட்டர், ஜுராசிக் பார்க் போன்ற சிறார் படங்களைக் கொடுக்க அங்கே வளர்தெடுக்கப்பட்ட ‘சிறார் இலக்கிய’மும் கைகொடுத்தது. நம்மிடம் சிறார் இலக்கியமும் இல்லை என்பது இன்னும் துயரமான யதார்த்தம். அங்கே “சிண்டலர்ஸ் லிஸ்ட்' எடுத்த அதே ஸ்டீவன் ஸ்பீல்பர்க் தான் சிறார்களுக்காக ‘ஜுராசிக் பார்க்’கும் ‘டின் டின்’னும் எடுத்தார். அதுவும் புகழ்பெற்ற சிறார் காமிக்ஸ் சாகசக் கதையிலிருந்து ‘டின் டின்’னை எடுத்தார். இவை அனைத்துமே பொழுதுபோக்கு சினிமாக்கள்தான்.

எங்கே தவறினோம்..

அதுவே, நாம் பொழுதுபோக்கு சினிமா எடுக்கும்போது குழந்தைகளை கணக்கில் வைத்துக்கொண்டதே கிடையாது. ஆனால், இன்றைக்கும் தமிழ்நாட்டில் குழந்தைகள் மிகவும் விரும்பிப் பார்ப்பது மாஸ் கதாநாயகர்களின் படங்களைதான். அந்தப் படங்களில் வரும் நகைச்சுவை தருணங்கள், குடும்பத் தருணங்கள், நடனம், பாடல் ஆகியவற்றைக் கண்டு களிக்கும் சிறார்கள், அதே படத்தில் வரும் வன்முறைக் காட்சிகள், காதல் காட்சிகள் உட்பட அவர்களுடைய வயதுக்கு தேவையில்லாத, தேவைப்படாத பல விஷயங்களை உள்வாங்கிகொண்டு, தேவையற்ற சுமைகளை திரையரங்கிலிருந்து கொண்டுசெல்கிறார்கள்.

இப்படி தங்களையறியாமல் உள்வாங்கிக்கொண்ட அனைத்தும் அவர்கள் பதின்ம வயதைக் கடந்ததும் அவர்களுடைய குணாதிசய மாற்றங்களில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகின்றன. அப்போது போய் அவர்களிடம் ‘காதல் பற்றிய உனது புரிதல் தவறானது’ என்றோ, ‘வன்முறை வாழ்க்கையையே அழித்துவிடும்’ என்றோ வகுப்பெடுத்தால்’ அது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்குச் சமம். நாம் நமது சினிமாக்கள் வழியாக நமது சிறார்களுக்கு இதைத்தான் தந்துகொண்டிருக்கிறோம்.

மாணவர்கள் - பெற்றோர் - ஆசிரியர்கள்

குழந்தைகளை நடிக்க வைத்து படமெடுத்தால் மட்டுமே அது குழந்தைகள் படமாக ஒருபோதும் ஆகிவிடாது. வளர்ந்த மனிதர்களைப் போல் பேசும் சிறார் கதாபாத்திரங்களை பொழுதுபோக்கு சினிமாவில் புகுத்திச் சாதனை படைத்திருக்கிறோம். இது வேண்டுமென்றே செய்த தவறு அல்ல; புரிதல் இல்லாததினால் செய்த தவறு. சில வருடங்களுக்கு முன் எனக்கு ஒரு நேரடி அனுபவம் உண்டு.

நான் நடித்த படமொன்றின் தொலைக்காட்சி விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அதில் இடைச்செருகலாக இரண்டு சிறுவர்களை ‘கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடிப் போலாமா?’ என்கிற சினிமாப் பாடலுக்கு ஆட வைத்தார்கள். அவர்களை அழைத்து வந்திருந்த தாயார் புளகாங்கிதமும் அடைந்தார். ஆனால், அந்தப் பாடலும் அதில் பொதிந்திருக்கும் உணர்ச்சியும் உள்ளர்த்தங்களும் அதற்கு நடனமாடிய குழந்தைகளுக்கானது அல்ல.

ஆனால், அதற்கு அவர்களைப் பழக்கப்படுத்தியவர்களை என்னவென்று சொல்வது? மனம் பொறுக்கமுடியாமல் அந்தச் சிறுவர்களின் தாயாரிடம் சென்று ‘ஒரு குழந்தை ஒரு செயலைச் செய்கிறபோது அதைப் புரிந்துகொண்டு மனதாரச் செய்ய வேண்டும்.

அதுதான் அவர்களுடைய மனவளர்ச்சிக்கு நல்லது’ என்று சொன்னேன். அவரோ.. அதை மனதில் ஏந்தாமல் ‘நிலா நிலா ஓடி வா..’ பாட்டுக்கு ஆடச் சொல்றீங்களா? என்று என்னிடம் கேட்டார். சினிமா பாடல்களுக்கு ஆடும் இதே நிலைதான் பள்ளி ஆண்டு விழா, கலை விழாக்களில் இன்றளவும் நீடிக்கிறது. இது குறித்து சிறார்கள், அவரது பெற்றோர்கள், ஏன் ஆசிரியர்களும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். இதை யார் சரிசெய்வது?

சிறார்களுக்கு நற்குணங்களை போதிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நற்குணங்களோடுதான் பிறக்கிறார்கள். நாம்தான் ‘சரிப்படுத்துதல்’ என்கிற பெயரில் அவர்களை ‘இன்கரெக்ட்’ செய்ய முயல்கிறோம். ஆக, சிறார் சினிமா என்பது குழந்தைகளுக்கான நற்குணங்களைப் போதிப்பதாக இருக்கவே கூடாது.

மாறாக, சிறார் சினிமா என்பது அவர்களின் கற்பனைத் திறனைப் பெருக்குவதாகவும் வளர்ப்பதாகவும் அதை விரிவாக்குவதாகவும் இருக்க வேண்டும். கற்பனைத் திறனை பெருக்கும் சினிமாக்கள் வழியே, கணிதம், அறிவியல், இலக்கியம், இசை, ஓவியம் உள்ளிட்ட மற்ற பாடங்களில் மாணவர்கள் சிறந்து விளங்க ஊக்கம் கிடைக்கும். இந்த ஊக்கம் பொழுதுபோக்கு சினிமாக்கள் வழியே கிடைக்காது.

குழந்தை பருவத்தில் சிறார்கள் நாம் கவனிக்க முடியாத சில விஷயங்களுக்குக்கூட சிரிப்பதைப் பார்க்க முடியும். இதற்குக் கூட அவர்கள் சிரிப்பார்களா என்பதைப் பெரியவர்களால் கண்டறிய முடியாது. அதே குழந்தைகளுக்கு, ‘பனங்கொட்டைத் தலையா..! தேங்காய் துருவிப் பல்லா?’ என்று உருவக்கேலி செய்யவும் சக மனிதனை அடித்து துன்புறுத்துவதைப் பார்த்து சிரிக்கவும் நமது சினிமாக்கள் வழியே சொல்லிக்கொடுத்திருக்கிறோம்.

இப்போது தொடங்கினால்கூட, இந்தப் பாதையை இன்னும் இரு பத்தாண்டுகளில் பள்ளிகளும் படைப்பாளிகளும் பெற்றோரும் புணரமைக்க முடியும். அதற்கு அரசின் ‘சிறார் திரைப்பட விழா’ தொடக்கப் புள்ளியாக அமையட்டும்.

கட்டுரையாளர், திரைக் கலைஞர்.

தொடர்புக்கு: KameelaNasser@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்