‘வின்னைத் தாண்டி வருவாயா’ ‘கோ’, ‘வெப்பம்’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ உட்பட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த நிறுவனம், எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடைன்மெண்ட். தற்போது இந்நிறுவனம், விஜய்சேதுபதி - சூரி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகிவரும் ‘விடுதலை’ படத்தைத் தயாரித்து வருகிறது. வெற்றிமாறனின் படைப்பாளுமையில் உருவாகும் படமொன்றை முதல் முறையாக தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ். இப்படம் குறித்த பிரத்யேகத் தகவல் திரட்டலின் தொகுப்பு இதோ:
'லாக்கப்', 'வெக்கை' போன்ற நாவல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றிலிருந்து திரைக்கதைக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொண்டு, ‘விசாரணை’, ‘அசுரன்’ ஆகிய படங்களைக் கொடுத்தவர் வெற்றிமாறன். தற்போது ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்கிற சிறுகதையை திரைக்கதையாக விரித்து, ‘விடுதலை’ படத்தை எடுத்துள்ளார். ‘ஒரு சிறுகதையிலிருந்து இரண்டு பாகங்களைக் கொண்ட சினிமாவா!’ என்று ரசிகர்களும் இலக்கிய உலகினரும் திரையுலகினரும் ஆர்வமாக இப்படம் குறித்துப் பேசி வருகிறார்கள்.
ஏற்கெனவே ரசீக் என்கிற உதவி இயக்குநர் இதே ‘துணைவன்’ கதையை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதை கைவிட்டுவிட்ட நிலையில் வெற்றிமாறன் இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பில் 90 சதவீதத்தை முடித்துவிட்டார்.
நக்சல்பாரி போராளிக்கும் ஒரு நியாமான போலீஸ் கான்டபிளுக்கும் இடையிலான உரையாடலும் நட்பும்தான் கதை. சிறுகதையில் கான்டபிளின் பெயர் மாணிக்கம். நக்சல்பாரி போராளியின் பெயர் கார்மேகக் கோனார். ‘விடுதலை’ படத்தில் கான்டபிள் ஆக சூரியும் நக்சல் போராளியாக விஜய்சேதுபதியும் நடிக்கிறார்கள். அவர் சார்ந்துள்ள பொதுவுடமைக் கட்சியின் வட்டாரத் தலைவராக பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்.
‘என்கவுண்டர் செய்து கொல்ல அழைத்துச் செல்லப்படும் ஒரு நக்சல் போராளியுடன் ‘எஸ்கார்ட்’ ஆகச் செல்லும் காவலர் (சூரி) எடுக்கும் முடிவுதான் கதை. இந்தக் கதை நடக்கும் காலகட்டம் 1992. இதில் சூரிதான் கதாநாயன் என்று சொல்லப்பட்டாலும் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் படம் முடியும்போது ரசிகர்களின் மனதில் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. ‘வட இந்தியாவில்தான் இடதுசாரி இயக்கத் தோழர்கள் சாதியின் பெயரை தங்களது பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், தமிழ்நாட்டில் கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு சாமானியன் கூட சாதியின் பெயரைச் சேர்ந்துகொள்ள மாட்டார்கள். அப்படி இருக்கும்போது, ஒரு தமிழ்நாட்டு பொதுவுடமைச் சிந்தனையாளர் தன்னை ‘கார்மேகக் கோனார்' என்று எப்படி அறிமுகம் செய்துகொள்வார்?’ என்று நெட்டிசன் ஒருவர் ஜெயமோகனின் பாத்திர வார்ப்பை ஏற்கெனவே கிண்டல் செய்திருந்தனர்
‘விடுதலை’ படத்தின் கதை, வனம் மற்றும் மலைப்பகுதி கிராமம் ஒன்றில் நடக்கிறது. வனப்பகுதியிலும் மலைப்பகுதியிலும் வசிக்கும் பழங்குடி மக்களை ‘நக்சல்’ ஆதரவாளர்கள் என்று கூறி அடிப்பது, துண்புறுத்துவது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, ஊரைச் சூரையாடுவது என எல்லை மீறும்போதுதான் நக்சல்கள் உருவாகிறார்கள். அப்படி உருவான நக்சல்களில் ஒருவர்தான் கார்மேகக் கோனார். அவர் இரண்டு மோசமான போலீஸ்காரர்களைக் கொன்றுவிடுகிறார். அதனால், போலீஸின் கோபத்துக்கு ஆளாகி போலீஸிடம் சிக்கிக்கொண்டு, போலி என்கவுண்டர் மூலம் அவரைக் கொல்ல அழைத்துச் செல்லும்போது என்ன நடக்கிறது என்று கதை நகர்கிறதாம்.
ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையின் கடைசியில் காண்ஸ்டபிள் மாணிக்கத்துக்கும் நக்சலான கார்மேகக் கோனாருக்கும் இடையிலான உரையாடலின் ஒரு துளி இது:
மாணிக்கம்: "அய்யா, நான் உங்க கை விலங்க தெறந்துவிட்றேன் ஓடிருங்க"
கோனார்: "வேணாம் தம்பி.. உங்களுக்கு எதுக்கு பிரச்சின?”
மாணிக்கம்: "ஒண்ணுமில்லைங்க.. ஒரு சஸ்பென்ஷன் வரும் அவ்வளவுதான், அதும் நல்லதுதான். ஊருக்கே போயிடுவேன்..நீங்க ஓடிருங்க"
கோனார்: "ஓடிடலாம், ஆனா எப்படியும் இந்த வருஷத்துகுள்ள எங்க எதிரணிக்காரங்க என்னை கொன்னிருவாங்க. அது எனக்குக் கேவலம். போலிஸ் சுட்டு நான் செத்தால்தான் எனக்கு மதிப்பு. நான் சாகவேண்டிய விதம் அதுதான். எங்கியாச்சும் எனக்கு ஒரு நினைவுச் சின்னம் வெப்பாங்க. ஆண்டுதோறும் ஒன்னு ரெண்டு அஞ்சலிக் கட்டுரை எழுதுவாங்க. அதுக்காக தான் இவ்வளவு பாடுபட்டேன், அதான் சரியான முடிவு".
‘விடுதலை’ திரைப்படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது பதிவொன்றில் கூறும்போது “ ‘விடுதலை’ திரைப்படம் என்னுடைய சிறுகதை ஒன்றிலிருந்து விரித்தெடுக்கப்பட்ட கதை. பொதுவாகச் சிறுகதைகளே சினிமாவுக்கு உகந்தவை. நாவலை சினிமாவாக ஆக்குவது கடினம். அதை பல மடங்கு சுருக்கவேண்டும். உண்மையில் சினிமா என்பது ஒரு சிறுகதை அல்லது குறுநாவல். ‘விடுதலை’ நம் சூழலில் கண்ணெதிரே நிகழ்ந்த ஒரு கதை. இங்கே மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் காவலர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? அவர்களும் அந்த மக்களிடமிருந்தே எழுபவர்கள். அவர்களும் வறுமையை, ஒடுக்குமுறையை, சுரண்டலை அறிந்தவர்கள். அவர்களுக்கு என்ன ஆகிறது?
நான் திருப்பத்தூரில் இருக்கையில் அறிந்த இடதுசாரிக்குழுத் தலைவர் ஒருவரின் நையாண்டியும் அப்பாவித்தனமும் கலந்த பேச்சு என் நினைவில் இன்றுமுள்ளது. மிக அடிப்படைக் களத்தில் இருந்து வந்தவர். கற்றவரல்ல, ஆகவே கற்றவரிடம் இல்லாத நம்பிக்கையும் தீவிரமும் அவரிடமிருந்தது. அவரையும் நான் தர்மபுரியில் பணியாற்றியபோது நேரில் சென்று அறிந்த வாச்சாத்தி தாக்குதலின் சித்திரங்களும் கலந்து உருவானதுதான் ‘விடுதலை’யின் கதை” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘விடுதலை' பாகம் 1இன் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தற்போது பின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இரண்டாம் பாகத்துக்கான 20 சதவீத காட்சிகள் மட்டுமே இன்னும் படமாக்கப்படவேண்டியுள்ளது என இயக்குநர் வட்டாரம் கூறுகிறது. தற்போது அந்தக் காட்சிகளை சிறுமலை,கொடைக்கானல் ஆகிய மலைப் பகுதிகளில் விஜய்சேதுபதி, பிரகாஷ் ராஜ். சூரி மற்றும் கிராம மக்களை வைத்து படமாக்கி வருகிறார் வெற்றிமாறன்.
இந்தப் படத்துக்காக ரூபாய் 10 கோடி மதிப்பில் ரயில், ரயில்வே பாலம் ஆகியவை செட் போடப்பட்டு காட்சிகள் படமாக்கபட்டன. ரயில் பெட்டிகள், பாலம் ஆகியவை அச்சு அசலாக 90களின் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் விதமாக ரயில்வே துறையிடமிருந்தே பொருட்கள் வாங்கப்பட்டு இந்த செட்டினை உருவாக்கியிருக்கிறார்கள். கொடைக்காணலை அடுத்த சிறுமலையில் இப்படத்தின் கலை இயக்குநர் ஜாக்கி தலைமையிலான குழுவினர் ஒரு மலை கிராமத்தையே உருவாக்கிக் கொடுத்திருகிறார்கள்.
தற்போது கொடைக்கானலில் முக்கிய ஆக்ஷன் காட்சி ஒன்றைப் படமாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரபல ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இந்த ஆக்ஷன் காட்சியை வெற்றிமாறனின் வழிகாட்டுதலின்படி வடிவமைக்கிறார். இதற்காக பல்கேரியாவில் இருந்து சண்டைக் கலைஞர்கள் குழு ஒன்றை இந்தியாவுக்கு அழைத்து வந்திருக்கிறார் பீட்டர் ஹெய்ன்.
‘விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். விடுதலை படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துவருகிறார்.
படங்கள் உதவி: Done
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago