நோபல் பரிசு 2016: நோபல் வீரர்கள்

By ஆசை, ஆதி, ஷங்கர்

மனித இனத்தின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்புகளை இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 2016-ல் நோபல் பரிசு பெற்றவர்கள் இதோ:

பொருளாதாரம்: ஒப்பந்தத்துக்கு அங்கீகாரம்

ஆலிவர் ஹார்ட் - பெங்ட் ஹோம்

இங்கிலாந்தில் பிறந்த ஆலிவர் ஹார்ட்டுக்கும் (68) பின்லாந்தைச் சேர்ந்த பெங்ட் ஹோம்ஸ்ட்ரோமுக்கும் (67) ஒப்பந்தக் கோட்பாட்டுக்குப் பங்களித்த வகையில் பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசு இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

நவீன வாழ்க்கையில் வாடகை ஒப்பந்தம், வேலை ஒப்பந்தம், காப்பீட்டு ஒப்பந்தம் என்று தீராத ஒப்பந்தங்களைச் சுற்றி வாழ்கிறோம். இவை பல நுணுக்கங்களைக் கொண்டவை. அந்தந்த நாடு மற்றும் சமூகத்தில் நிலவும் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை.

சில ஒப்பந்தங்களைப் பொறுத்தவரை ஒப்பந்தம் இடும் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தனிநபரைவிட அதிகத் தகவல்கள் தெரிந்திருக்க சாத்தியமுண்டு. ஆரோக்கியக் காப்பீட்டு நிறுவனங்கள் அதற்கு உதாரணம். ஆரோக்கியமான நபர்களை உள்ளடக்குவதை விட, ஆரோக்கியப் பிரச்சினைகள் அதிகமுள்ள நபர்களை உள்ளடக்குவதாக ஆகிவிடுகிறது.

நிறுவனங்களைப் பொறுத்தவரை, ஒப்பந்தத்தில் உள்ள மேலாளர்கள், நிறுவனத்தின் பங்குதாரர்களின் வருவாய்க்கு உதவுவதை விட தங்கள் வருவாயை அதிகப்படுத்துவதில் நாட்டம் செலுத்துவது தற்கால யதார்த்தமாகி வருகிறது. முதலீட்டு வங்கியாளர்கள், தங்கள் ஆண்டு ஊக்கத்தொகையைச் சம்பாதிப்பதற்காக அதிகபட்சமான துணிகரத்தில்(ரிஸ்க்) ஈடுபட்டதே 2008-ல் அமெரிக்கா சந்தித்த பெரும் பொருளாதாரப் பின்னடைவுக்குக் காரணம்.

இதுபோன்ற பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு ஒப்பந்தக் கோட்பாடு உதவுகிறது. ஒப்பந்தத்தில் ஈடுபடும் சகல தரப்பினரின் நலன்களையும் உள்ளடக்கிய ஒப்பந்தத்தை வடிவமைப்பதை இது சாத்தியப்படுத்துகிறது.

நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களுக்கான ஊக்கத்தொகை அடிப்படையிலான குறுகிய கால நலன்களை முன்னிட்டு நிறுவனத்தின் நீண்டகால ஆரோக்கியத்துக்குக் குந்தகம் ஏற்படுத்தாத வகையில் உருவாக்க வேண்டிய ஒப்பந்தங்களுக்கான கோட்பாட்டை ஹோல்ம்ஸ்ட்ரோம் தனது ஆய்வுக்கட்டுரைகள் வழியாக வெளியிட்டார்.

பிற நிறுவனங்களைக் கையகப்படுத்தல், இணைத்துக்கொள்ளுதல், பெரு நிறுவன உரிமைத்துவம் தொடர்பான கட்டுரைகளை ஹார்ட் எழுதியுள்ளார்.

பொதுக் கொள்கைகளும் தனியார் சந்தையில் ஒப்பந்தங்களும் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்பதற்கான புதிய சிந்தனைகளை சாத்தியப் படுத்தியதுதான் இவர்களின் பங்களிப்பு என்று நோபல் நினைவுப் பரிசுக் குறிப்பு கூறுகிறது.



அமைதி: அமைதியை நோக்கிய பயணம்

2016-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது, கொலம்பிய அதிபர் யுவான் மேனுவல் சண்டோஸ் (வயது 65) உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் அவரது விசுவாசம்மிக்க பணியாளர்கள் அவரை எழுப்பித் தகவல் சொல்வதற்கு மறுத்துவிட்டனர்.

உலகின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்த எஃப்.ஏ.ஆர்.சி. கொரில்லா குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்காக இந்த பரிசு அதிபர் யுவான் மேனுவல் சண்டோஸூக்கு வழங்கப்பட்டது. ஆனால் பொதுவாக்கெடுப்பில் அந்த அமைதி ஒப்பந்தம் கொலம்பிய மக்களால் தோற்கடிக்கப்பட்டதையடுத்து சில நாட்களில் இந்த அமைதி விருது வழங்கப்பட்டது முரண்நகை.

கொலம்பியாவில் அமைதியை இதுவரை கொண்டுவர முடியாவிட்டா லும், அதிபர் சண்டோஸ், அமைதிக்காக நடத்தும் போராட்டத்தில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையை நோபல் குழு முன்வைத்துள்ளது.

ஸ்பானிஷ் காலனியாதிக்க காலத்தி லிருந்து சில நிலவுடைமையாளர்களிடம் சிக்கியிருந்த விவசாயத் தொழில் ஏகபோகத்தை விடுவித்து எளிய குடியானவர்களுக்கு வழங்குவதற்காக 1964-ல் எஃப்.ஏ.ஆர்.சி. கொரில்லா யுத்தக்குழு தொடங்கப்பட்டது.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் தொடரும் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் அமைதி ஒப்பந்தத்தை, போப் பிரான்சிஸ், அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் பன்னாட்டுத் தலைவர்கள் ஆதரித்திருந்தனர்.

அதிபர் சண்டோஸ், தற்போது மீண்டும் அமைதிக்கான பேச்சுவார்த்தைக்காக தனது அதிகாரிகளை ஹவானாவுக்கு அனுப்பியுள்ளார். அவர் தான் நடத்தும் அமைதிப் பேச்சுவார்த்தையில் வெற்றிபெற்றால், யாசர் அராஃபத், நெல்சன் மண்டேலா, மிகையில் கோர்பச்சேவ், மார்டின் லூதர் கிங் வரிசையில் வரலாற்று நாயகராக ஆவார்.



இலக்கியம்: வெகு மக்கள் கவிஞருக்கு விருது!

இலக்கியத்துக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு மக்கள் பாடகரும், பாடலாசிரியருமான பாப் டிலனுக்கு வழங்கப்பட்டிருப்பது பலரது புருவங்களையும் உயர்த்தியிருக்கிறது. அவர் நாவலாசிரியரோ சிறுகதையாசிரியரோ நாடகாசிரியரோ இலக்கியக் கவிஞரோ கிடையாது. பாப் பாடல்கள் எனப்படும் வெகு மக்கள் இசை வடிவத்துக்குப் பாடல்கள் எழுதி பிரபலமானவர்.

“அமெரிக்கப் பாடல் மரபுக்குள் புதுவிதமான கவிதை வெளிப்பாடுகளை உருவாக்கியதற்காக” என்று கூறி நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 1993-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசை டோனி மாரிஸன் பெற்று 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அமெரிக்கருக்கு இப்போதுதான் இந்தப் பரிசு கிடைக்கிறது.

மின்னசோட்டா மாகாணத்தின் டுலுத் நகரில் 1941-ல் பிறந்தவர் பாப் டிலன். பதின்பருவத்தில் பல்வேறு இசைக் குழுக்களில் பங்கேற்றார். அமெரிக்க நாட்டுப்புற இசையின் மீதும் புளூஸ் இசையின் மீதும் அவருக்கு அதிக நாட்டம். நவீன கவிஞர்கள், பீட் தலைமுறையின் கவிஞர்கள் போன்றோர் டிலன் மீது ஆதிக்கம் செலுத்தினார்கள்.

1961-ல் நியூயார்க்குக்கு இடம்பெயர்ந்தவர் கிரீன்விச் கிராமத்தில் உள்ள கிளப்களில் நிகழ்ச்சிகள் நடத்தினார். இசைப்பேழைத் தயாரிப்பாளர் ஜான் ஹாமண்டுடனான சந்திப்பால் ‘பாப் டிலன்’ என்ற பெயரில் தனது முதல் ஆல்பத்தை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட ‘பிரிங்கிங் இட் ஆல் பேக் ஹோம்’, ‘ஹைவே 61 ரீவிஸிட்டட்’, ‘ப்ளட் ஆன் த ட்ராக்ஸ்’, ‘ஓ மெர்ஸி’, ‘டைம் அவுட் ஆஃப் மைண்ட்’ ஆல்பங்கள் விற்பனையிலும் சக்கைப்போடு போட்டதுடன் அவற்றின் இசையும் பாடல்களும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தன.

மக்களின் வாழ்க்கையிலிருந்து எளிய சொற்கள், தனது சமகாலப் பிரச்சினை குறித்த அவரது கோபம் போன்ற பண்புகள் அவரைத் தனித்துவம் கொண்ட பாடலாசிரியராக நிலைநிறுத்துகின்றன.



வேதியியல்: நானோ இயந்திரம்

ஒரு வேதிவினையில் பங்கெடுக்கும் வேதிப்பொருளின் மிகச் சிறிய அடிப்படை அலகை மூலக்கூறு என்கிறோம். அதாவது பிணைந்த அணுக்களின் குழு. இந்த மூலக்கூறே ஒரு தனி இயந்திரம் போலச் செயல்பட ஆரம்பித்தால், அதாவது ஓர் அடிப்படை அலகே, ஓர் இயந்திரம் போல இயங்கினால்? அதைக் கண்டுபிடித்ததற்காகத்தான் வேதியியலுக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் கண்டறிந்ததுதான் உலகிலேயே மிகச் சிறிய இயந்திரம். அதாவது, இந்தக் கால மொழியில் சொல்ல வேண்டுமானால், நானோ இயந்திரம்.

வேதியியலுக்கான நோபல் 2016 பரிசை ஃபிரான்ஸ் நாட்டின் ஸ்த்ராஸ்போ பல்கலைக்கழகத்தின் ஜான் பியர் சொவாஜ், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாண வடமேற்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர் ஜே. ஃப்ரேஸர் ஸ்டாடர்ட், நெதர்லாந்து க்ரோனின்ஜென் பல்கலைக்கழகத்தின் பெர்னார் எல். ஃபெரிங்கா ஆகியோர் பெறுகிறார்கள். மூலக்கூறு இயந்திரங்களை வடிவமைத்ததற்காகவும், அவற்றில் கூட்டுவினைகளை சாத்தியப்படுத்தியதற்காகவும் இந்த விருது அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன் மூலம் மூலக்கூறுகளின் நகர்வுகளை இனிமேல் கட்டுப்படுத்த முடியும். தேவையான சக்தியைக் கொடுத்து, நாம் நினைக்கும் செயல்பாட்டை இவற்றைக் கொண்டு செய்ய முடியும். சுருக்கமாக இந்த மூலக்கூறு இயந்திரங்கள், நுண் மின்தூக்கியைப் போலவும், செயற்கைத் தசைகளாகவும், நுண் மோட்டார்களாகவும் செயல்படும்.

1830-களில் மின் மோட்டார் கண்டுபிடிக்கப்பட்ட நிலையுடன் ஒப்பிட்டால், இந்தக் கண்டறிதலின் முக்கியத்துவத்தை உணர முடியும். அப்போது மின் மோட்டார்களுடன் பல்வேறு சுழலும் நெம்புகோல்களையும் சக்கரங்களையும் விஞ்ஞானிகள் காட்சிப்படுத்தியபோது, எதிர்காலத்தில் மின்விசிறிகள், சலவை இயந்திரங்கள், உணவு இயந்திரங்களுக்கு அவை அடிப்படை அம்சமாக இருக்கப்போகின்றன என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அதேபோலவே, இன்றைக்கு மூலக்கூறுகளின் நகர்வுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்ற இந்தக் கண்டறிதல் மிகப் பெரிய வேதியியல் புரட்சி என்றே சொல்ல வேண்டும். புதிய பொருட்கள், உணர்கருவிகள் (sensors), ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை (energy storage systems) உருவாக்குவதில் மூலக்கூறு இயந்திரங்கள் மிகப் பெரிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிற்றுருவத்தில் பெரும் தொழில்நுட்பத்தைப் புகுத்தியிருக்கும் இந்தக் கண்டறிதல், வேதியியலுக்குப் புதிய பரிமாணத்தை அளித்து, பல்வேறு புதிய மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.



இயற்பியல்: பருப்பொருளின் விசித்திரங்கள்!

இயற்பியலுக்கான நோபல் பரிசு டேவிட் ஜே. தவ்லெஸ், எஃப். டங்கன் எம். ஹால்டேன், ஜே. மைக்கேல் காஸ்டர்லிட்ஸ் ஆகிய மூன்று இயற்பியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் பிறந்து தற்போது அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் இம்மூவரும் என்பது ஒரு விசித்திர ஒற்றுமை!

அதீதமான இயற்பியல் நிலைகளின்போது பருப்பொருளிடம் (matter) தென்படும் விசித்திர இயல்புகளைப் பற்றி ஆராய்ந்து கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியதற்காக இவ்வாண்டில் நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படுகிறது. பரிசுத் தொகையான 80 லட்சம் குரோனர்களில் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 8 கோடி) பாதித் தொகையை டேவிட் ஜே. தவ்லெஸும் மீதிப் பாதியை எஃப். டங்கன் எம். ஹால்டேன், ஜே. மைக்கேல் காஸ்டர்லிட்ஸ் ஆகிய இருவரும் பகிர்ந்துகொள்வார்கள்.

அதி-கடத்திகள் (Superconductors), அதி-திரவங்கள் (Superfluids), நுண்காந்த ஏடுகள் (Thin magnetic films) போன்ற அதீத நிலைகளில், மிகவும் அதீதமான குளிர்நிலையில் பருப்பொருள் (matter) மிகவும் விசித்திரமாக நடந்துகொள்கிறது. எடுத்துக்காட்டாக, அதி-திரவங்களுக்குச் சற்றும் பாகுத்தன்மை இருப்பதில்லை; தொடர்ந்து பாய்ந்தாலும் அவை தம் ஆற்றலை இழப்பதே இல்லை; சுழல்போல சுழல ஆரம்பித்தால் நிற்காமல் சுழன்றுகொண்டே இருக்கும். இவை எல்லாமே குவாண்டம் உலகம் எனப்படும் பருப்பொருளின் மிக மிக நுண்ணிய உலகத்தில் நடைபெறும் நிகழ்வுகள். சாத்தியமற்றவை என்று தோன்றும் இந்த நிகழ்வுகள் குவாண்டம் உலகத்துக்குள் நுழைந்து பார்க்கும்போது மேலும் மேலும் துலக்கமாகின்றன. இதுபோன்ற பண்புகளைப் பற்றித்தான் மேற்கண்ட மூவரும் ஆய்வுகள் நிகழ்த்தினார்கள். இந்தத் துறையில் இவர்கள் நிகழ்த்திய கண்டுபிடிப்புகளால் ஏற்படக்கூடும் நன்மைகள், சாத்தியங்கள் ஏராளம். குறிப்பாக, குவாண்டம் கணினித் துறையில் இவர்களின் கண்டுபிடிப்புகள் மூலமாகப் பெரும் பாய்ச்சல் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்காட்லாந்தின் பேர்ஸ்டென் நகரில் பிறந்த தவ்லஸ் (82) கார்னல் பல்கலைக்கழகத்தில் 1958-ல் முனைவர் பட்டம் பெற்றார். 1965-லிருந்து 1978-வரை பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் கணிதம்சார் இயற்பியலைப் பயிற்றுவித்தார். அந்தக் காலகட்டத்தில் காஸ்டர்லிட்ஸும் இவரும் சேர்ந்து ஆய்வில் ஈடுபட்டார்கள்.

லண்டனில் பிறந்த ஹால்டேன் (65), கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1978-ல் முனைவர் பட்டம் பெற்றார். பிரான்ஸில் உள்ள ‘ஆன்ஸ்டிட்யூட் லொ-லாங்கவன்’ என்ற நிறுவனம், தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், பெல் ஆய்வகம் போன்றவற்றில் பணிபுரிந்துவிட்டு இறுதியாக பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் 1990-ல் சேர்ந்தார்.

ஸ்காட்லாந்தின் ஆபர்தீன் நகரில் பிறந்த காஸ்டர்லிட்ஸ் (73) உயர்-ஆற்றல் இயற்பியலில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் 1969-ல் முனைவர் பட்டம் பெற்றார். பர்மிங்கான் பல்கலைக்கழகம், இத்தாலியின் டூரினில் உள்ள கோட்பாட்டு இயற்பியலுக்கான மையம், பெல் ஆய்வகம், ஹார்வர்டு பல்கலைக்கழகம் போன்றவற்றில் பணியாற்றியிருக்கிறார்.



மருத்துவம்: ‘செல்’லிடச் சிறப்பு!

மருத்துவத்துக்கான நோபல் விருது ஜப்பானைச் சேர்ந்த செல் உயிரியலாளர் யோஷினோரி ஒஷுமிக்குக் (71) கிடைத்திருக்கிறது. விருது அறிவிக்கப்பட்ட பிறகு செய்தி யாளர்களிடம் அவர் இப்படிச் சொன்னார்:

‘சிறுவனாக இருந்தபோது நோபல் பரிசு என் கனவாக இருந்தது. மருத்துவ ஆராய்ச்சியில் நான் ஈடுபட ஆரம்பித்த பிறகு நோபல் பரிசு பற்றிய எந்தச் சிந்தனையும் துளிகூட என் மனதில் இல்லை.’

‘உடலில் செல்கள் பிளவுறுவதைப் பற்றியும் அவை எப்படித் தங்கள் உட்கூறு களை மறுசுழற்சி செய்துகொள்கின்றன என்பதைப் பற்றியும் நிகழ்த்திய கண்டுபிடிப்பு’களுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கழிவு நீர், குப்பை போன்றவற்றை மறுசுழற்சி செய்து அவற்றைப் பல்வேறு விதங்களில் நாம் பயன்படுத்திக்கொள்வதுபோலவே உடலின் செல்கள் பழுதுபட்ட, இறந்துபோன தங்கள் உட்கூறுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்திக்கொள்கின்றன. இப்படி மறுசுழற்சி செய்ய முடியாமல் போவது பார்க்கின்ஸன் நோய் முதல் சில வகைப் புற்றுநோய்கள் வரை பல நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாகிறது.

ஜப்பானின் ஃபுகோகா நகரில் 1945-ல் பிறந்த ஒஷுமி இளநிலை படிப்பை முடித்த பிறகு 1974-ல் நியூயார்க் சென்று அங்குள்ள ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தில் முதுகலை மருத்துவப் படிப்பை முடித்தார். 1977-ல் நாடு திரும்பிய அவர் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் இணை ஆராய்ச்சியாளராகத் தன் பணிவாழ்க்கையைத் தொடங்கினார். இப்போது ‘புத்தாக்க ஆய்வுகளுக்கான டோக்கியோ தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்.

அவரது ஆராய்ச்சி யீஸ்ட் செல்களில்தான் தொடங்கியது. அந்த செல்களின் சுய மறுசுழற்சிக்குக் காரணமான ஜீன்களை அவர் கண்டறிந்தார். மனித செல்களிலும் அப்படிப்பட்ட செயல்பாடு நடைபெறுகிறது என்பதையும் அவர் நிரூபித்தார். இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிவருகிறது. இந்தத் துறையில் எதிர்கால சாத்தியங்களும் நிறைய தென்படுகின்றன.

ஏற்கெனவே, அடிப்படை அறிவியலுக்கான க்யோட்டோ விருதை 2012-ல் பெற்றிருக்கும் ஒஷுமிக்கு மற்றுமொரு கவுரவமாக இப்போது நோபலும் சேர்ந்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 mins ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்