இந்தியா 75: சுதந்திர இந்தியா

By ஸ்நேகா

1. முதல் பிரதமர்: இந்தியா சுதந்திரம் அடைந்ததும் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் ஜவாஹர்லால் நேரு. 1952ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் தேர்தலில் வெற்றி பெற்று, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்கிற சிறப்பையும் பெற்றார். குழந்தைகளின் அடிப்படைக் கல்வி, பெண்கள் முன்னேற்றம், விவசாயம், தொழிற்சாலை ஆகிய துறைகளை முன்னேற்றினார்.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT), இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIM) உட்படப் பல உயர் கல்வி நிறுவனங்களை நிறுவினார். உலக நாடுகளை ஒன்றுசேர்த்து அணிசேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர். 17 ஆண்டுகள் பிரதமராக இருந்து இந்தியாவை வழிநடத்தினார்.

2. இந்திய அரசமைப்புச் சட்டம்: உலகிலேயே மிக நீளமான அரசமைப்பையும் கூட்டாட்சியும் பன்முகத்தன்மையும் கொண்டது இந்தியா. அரசியல் கொள்கைகள், அரசு நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், அடிப்படை உரிமைகள், கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று அரசமைப்புப் பணி உருவாக்கம் தொடங்கப்பட்டது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு இயங்கியது.

3. குடியரசு: இந்திய அரசமைப்புச் சட்டம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று அமல்படுத்தப்பட்டது. அந்த நாள் இந்தியக் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

4. ஐந்தாண்டு திட்டங்கள்: இந்தியப் பொருளாதாரம் திட்டமிடுதலை அடிப்படையாகக் கொண்டே செயல்படுத்தப்பட்டுவருகிறது. இது ஐந்தாண்டு திட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, திட்டக்குழு மூலம் வடிவமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வந்தது. 2015ஆம் ஆண்டு மத்தியத் திட்டக்குழு கலைக்கப்பட்டு, ‘நிதி ஆயோக்’ என்கிற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

5. மாநிலங்கள்: 1956ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி மொழியை அடிப்படையாகக் கொண்டு 14 மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது இந்தியாவில் 28 மாநிலங்களும் 8 ஒன்றியப் பகுதிகளும் இருக்கின்றன.

6. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ): விஞ்ஞானி விக்ரம் சாராபாய் இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாகக் காரணமாக இருந்தார்.

1969ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்திய விண்வெளி ஆய்வு மையம், உலகின் மிகப் பெரிய ஆய்வு மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. 1975ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா விண்ணில் செலுத்தப்பட்டது.

1980ஆம் ஆண்டு இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஏவுகலன் மூலமாக முதல் செயற்கைக்கோள் ரோகிணி செலுத்தப்பட்டது. 2008ஆம் ஆண்டு நிலவுக்குச் சந்திரயான் - 1 விண்கலம் அனுப்பப்பட்டது. அது நிலவின் பரப்பில் நீர் இருப்பதைக் கண்டறிந்தது.

இதைத் தொடர்ந்து இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட சந்திரயான் - 2 நிலவுக்குச் செலுத்தப்பட்டது. 2013ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய்க் கோளுக்கு மங்கள்யான் என்கிற விண்கலத்தை முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாகச் செலுத்தியது.

7. கல்வி: இந்திய அரசால் நடத்தப்படும் அங்கன்வாடியில் குழந்தைகளுக்குத் தேவையான உணவும் ஊட்டச்சத்தும் வழங்கப்படுகின்றன. 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவச, கட்டாயக் கல்வி அடிப்படை உரிமையாக வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இலவசமாக மதிய உணவு, புத்தகங்கள், சீருடைகள், சைக்கிள், கணினி போன்றவை வழங்கப்படுகின்றன. தற்போது காலை உணவும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிராமப்புற மாணவர்களும் ஏழை மாணவர்களும் தடையின்றிக் கல்வி பெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். அதனால், கல்வியில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது.

8. தேர்தல்: 18 வயதிலிருந்து வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டு, அதிகப் பெரும்பான்மை பெறும் கட்சியிலிருந்து பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 1951இல் நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் 489 இடங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில் 543 இடங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. மாநிலங் களுக்குத் தனியாகத் தேர்தல் நடத்தப்பட்டு, முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது. 1999ஆம் ஆண்டு வரை வாக்குச் சீட்டு மூலம் வாக்குப் பதிவு நடைபெற்றது. தற்போது மின்னணு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

9. இந்திய ரயில்வே: 1853ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் ரயில் அறிமுகமாகிவிட்டது. 1951ஆம் ஆண்டு ரயில்வே தேசியமயமாக்கப்பட்டது. உலக அளவில் மிகப் பெரிய ரயில் வலையமைப்புகளில் (நெட்ஒர்க்) நான்காவதாகத் திகழ்கிறது.

ஆண்டுக்குச் சுமார் 808 கோடி பேர் பயணம் செய்கின்றனர். பயணிகள் ரயில், சரக்கு ரயில், புறநகர் ரயில், மலை ரயில் போன்றவை இயக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையம் - ஊட்டி செல்லும் மலை ரயில் மிக மெதுவாகச் செல்லக்கூடியது. ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் மிக வேகமாகச் செல்லக்கூடியது.

10. பெண் பிரதமர்: இந்தியாவின் முதல் மற்றும் இன்று வரை ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தி. 1966ஆம் ஆண்டு மூன்றாவது பிரதமராகப் பொறுப்பேற்றார். நீண்ட காலம் பதவியில் இருந்த இரண்டாவது பிரதமர். சுமார் 15 ஆண்டுகள் பிரதமர் பொறுப்பை வகித்தார்.

11. முதல் பெண் குடியரசுத் தலைவர்: இந்தியாவின் 12 ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப் பேற்றவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல். இதன் மூலம் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்கிற சிறப்பைப் பெற்றார்.

12. பொக்ரான்: இந்தியா தன்னுடைய அணு ஆயுத பலத்தை மற்ற நாடுகளுக்குக் காட்டும் விதமாக 1972ஆம் ஆண்டு, ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் அணுகுண்டு சோதனையை நடத்தியது.

இந்தச் ‘சிரிக்கும் புத்தர்’ அணுகுண்டு சோதனை நடத்தி 25 ஆண்டுகளுக்குப் பிறகு, 1998ஆம் ஆண்டு ‘சக்தி’ அணுகுண்டு சோதனையை நடத்தியது.

13. பசுமைப் புரட்சி: உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைவதற்காக வேளாண் உற்பத்தியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. 1963ஆம் ஆண்டு அமெரிக்க வேளாண் விஞ்ஞானி நார்மன் போர்லாக், வீரிய கோதுமை விதைகளை அறிமுகப்படுத்தினார்.

எம்.எஸ். சுவாமிநாதன், சி. சுப்பிர மணியம் ஆகியோரின் முயற்சியில் பசுமைப்புரட்சி வெற்றியடைந்தது.

14. வெண்மைப் புரட்சி: இந்தியாவின் தேசியப் பால்பண்ணை மேம்பாட்டுக் கழகம் 1970ஆம் ஆண்டு ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டுத் திட்டமே வெண்மைப் புரட்சி. மேம்படுத்தப்பட்ட கால்நடைகள் மூலம் பால் உற்பத்தியை அதிகப்படுத்துவதே இதன் நோக்கம்.

தேசியப் பால்பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த டாக்டர் வர்கீஸ் குரியன் குஜராத் மாநிலத்தின் ஆனந்த் நகரில் இதைச் செயல்படுத்திக் காட்டினார்.

15. ஆஸ்கர் விருதுகள்: இதுவரை 5 இந்தியர்கள் ஆஸ்கர் விருதை வென்றிருக் கிறார்கள். 1982ஆம் ஆண்டு பானு அத்தய்யா ‘காந்தி’ திரைப்படத்தின் ஆடை வடிவமைப்புக்காக விருதைப் பெற்றார். 1992இல் திரைப்படப் பணிக்காகச் சிறப்பு ஆஸ்கர் விருதைப் பெற்றார் இயக்குநர் சத்யஜித் ராய்.

2009இல் ‘ஸ்லம் டாக் மில்லினியர்’ என்கிற ஆங்கிலத் திரைப்படத்துக்கு இசை அமைத்ததற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றார்.

இதே திரைப்படத்துக்காகப் பாடலாசிரியர் குல்சார், ஒலிக்கலவைக் கலைஞர் ரசூல் பூக்குட்டி ஆகியோர் ஆஸ்கர் விருதுகளைப் பெற்றனர்.

16. ஹாக்கி: இந்தியாவின் முதன்மையான விளையாட்டு அணிகளில் ஹாக்கியும் ஒன்று. ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்கள் வென்று, உலகிலேயே அதிகம் தங்கம் வென்ற அணியாகத் திகழ்ந்தது.

1975இல் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தியான் சந்த் மிகச் சிறந்த ஹாக்கி வீரராகக் கொண்டாடப்படுகிறார்.

17. கிரிக்கெட்: கிரிக்கெட்டில் இந்திய அணி மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்று, சாதனை படைத்தது.

2011ஆம் ஆண்டு மகேந்திரசிங் தோனி தலைமையிலான அணி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது. சச்சின் டெண்டுல்கர் உலக அளவில் மிகச் சிறந்த வீரராகத் திகழ்கிறார்.

18. ஒலிம்பிக் போட்டிகள்: 95 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுவரும் இந்தியா, 10 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இவற்றுள் 8 தங்கம் ஹாக்கி அணி பெற்றுள்ளது.

2008இல் துப்பாக்கிச் சுடுதலில் அபினவ் பிந்திராவும் 2020இல் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவும் தனிநபர் தங்கப் பதக்கத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

19. நோபல் பரிசுகள்: உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசுகளை இந்தியாவில் பிறந்த அல்லது குடியுரிமை உள்ளவர்களில் 13 பேர் பெற்றிருக்கிறார்கள்.

இயற்பியலுக்கு சி.வி. ராமன், சுப்பிரமணியன் சந்திரசேகர், மருந்தியலுக்கு ரொனால்டு ராஸ், ஹர் கோவிந்த் கொரானா, வேதியியலுக்கு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இலக்கியத்துக்கு ருட்யார்ட் கிப்ளிங், ரவீந்திரநாத் தாகூர், வி.எஸ். நைபால், பொருளாதாரத்துக்கு அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி, அமைதிக்கு அன்னை தெரசா, தலாய் லாமா, கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் நோபல் பரிசுகளை வென்றுள்ளார்கள்.

20. போபால் பேரழிவு: 1984, டிசம்பர் 3. போபாலில் ‘யூனியன் கார்பைடு’ எனும் பூச்சிக்கொல்லி தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவினால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். உலக அளவில் தொழிற்சாலைகளால் ஏற்பட்ட பாதிப்புகளில், மிகப் பெரிய பேரழிவாக இது கருதப்படுகிறது.

21. புக்கர் பரிசு: நாவல்களுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த பரிசு புக்கர். வி.எஸ். நைபால், சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய், கிரண் தேசாய், அரவிந்த் அடிகா ஆகிய ஐவர் ஆங்கிலத்தில் எழுதி புக்கர் பரிசுகளை வென்றிருக்கிறார்கள்.

இந்தியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூலுக்காக சர்வதேச புக்கர் பரிசை கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றிருக்கிறார்.

22. ஆழிப் பேரலை: 2004ஆம் ஆண்டு 9.3 ரிக்டர் அளவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள் ஆழிப் பேரலையால் பாதிப்படைந்தன.

இந்தியாவில் சுமார் 6,400 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் சுமார் 2,760 பேர் உயிரிழந்தனர். மிக மோசமான பொருளாதார இழப்பும் ஏற்பட்டது.

23. அணைகள்: 2012ஆம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் சுமார் 3,200 பெரிய, நடுத்தர அணைகளும் தடுப்பணைகளும் இருக்கின்றன.

24. தேசியப் பூங்காக்கள்: சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்க விதிகள்படி இந்தியாவின் தேசியப் பூங்காக்கள் பாது காக்கப்பட்டு வருகின்றன. 1970இல் ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா உட்பட 5 தேசியப் பூங்காக்கள் இருந்தன.

வனவிலங்குகளையும் அதன் வாழிடங்களையும் பாதுகாக்கும் விதமாக 106 தேசியப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 75 தேசியப் பூங்காக்கள் அமைக்கும் திட்டமும் அரசிடம் இருக்கிறது.

25. பல்கலைக்கழகங்கள்: இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, தனியார் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டுவருகின்றன. தெற்காசியாவில் மிக முக்கியமான பல்கலைக் கழகங்களின் பட்டியலில் ஏராளமான இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்