வருமானத்தை அதிகரிக்கும் எல்பிஜி இஸ்திரி பெட்டி

By நிஷா

இந்தியாவில் ஏராளமான மக்களுக்கு எளிதில் சம்பாதிக்கும் வாய்ப்பை இஸ்திரி தொழில் வழங்குகிறது. இந்தச் சூழலில், இஸ்திரி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் எல்பிஜி இஸ்திரி திட்டத்தை உதயம் வியாபார் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் வடிவமைத்து, செயல்படுத்திவருகிறது. இஸ்திரி தொழிலைப் பாரம்பரிய நிலக்கரி பெட்டியிலிருந்து மிகவும் திறமையான எல்பிஜி பெட்டிக்கு மாற்றுவதன் மூலம், இந்தத் திட்டம் இஸ்திரி தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவுகிறது.

உதயம் வியாபார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் குழுவினர் இஸ்திரி தொழிலாளர்களின் பிரச்சினையை நன்கு புரிந்துகொள்ளும் நோக்கில் அவர்களுடன் சில மாதங்கள் நெருங்கிப் பயணித்தனர். அதன் மூலம், பாரம்பரிய நிலக்கரி இரும்புப் பெட்டிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்களை அவர்கள் புரிந்துகொண்டனர். அந்தப் புரிதல், மாற்று எரிபொருளில் (எல்பிஜி) வேலை செய்யக்கூடிய ஒரு அயர்னிங் பெட்டியைக் கண்டறிவதற்கான தீர்வுக்கு வழிவகுத்தது. அந்தத் தீர்வு மலிவானதாகவும், எளிதில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருந்தது.

இன்று எல்பிஜி அயர்னிங் பெட்டி, நான்கு மாநிலங்களில் 2,500க்கும் அதிகமான இஸ்திரி தொழிலாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எரிபொருள் செலவு குறைவால், அவர்களின் வருமானம் சராசரியாக 12 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. உற்பத்தித் திறன் அதிகரிப்பால், ஒரு நாளைக்கு 2 மணிநேரம் அவர்களால் சேமிக்கப்படுகிறது. முக்கியமாக, இந்தப் புதிய தயாரிப்பு, சுற்றுச்சூழலிலும் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த உதவுகிறது.

நான்கு மாநிலங்களில் கிடைத்த வெற்றியின் காரணமாக, உதயம் வியாபார் தொண்டு நிறுவனம் அந்தத் திட்டத்தைத் தற்போது சென்னையில் நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்தத் திட்டத்தின் அங்கமாக, சென்னையில் இருக்கும் இஸ்திரி தொழிலாளர்களுக்கு அது மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கிறது. முக்கியமாக, இஸ்திரி தொழிலாளர்களுக்கு அது மானிய விலையில் எல்பிஜி பெட்டியை வழங்கவும் செய்கிறது.

கூடுதல் தகவல்களுக்கு: 9964231777

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE