இந்தியாவில் தயாராகும் இணையத் தொடர்கள், பெரும்பாலும் வெகுஜன திரைப்பட பாணியைப் பின்பற்றி எடுக்கப்பட்டவை.
இவற்றில் இழிசொற்கள், வசவுகள் ஆகியவற்றை நேர்மையான கதாபாத்திரங்கள் கூடப் பேசுவதைக் காண முடியும், அதேபோல் துணுக்குறச் செய்யும் படுக்கையறை, பாலியல் காட்சிகளுடன், அதீத வன்முறையையும் காண முடியும்.
இந்தப் போக்கு தற்போதைக்கு தமிழ் இணையத் தொடர்களில் குறைவாக இருப்பது பெரும் ஆறுதல். சில தொடர்கள், ‘டிவி சீரியல்’ அளவுக்கு கனம் இன்றி இருப்பது படைப்பாற்றல் குறைபாடு.
இந்த இரண்டிலுமே சேர்ந்துவிடாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘பேப்பர் ராக்கெட்’.
சொந்தமாக மீன்பிடிப் படகு வைத்திருக்கும் குணசீலன் (நாகிநீடு), தனது மகன் ஜீவாவை (காளிதாஸ் ஜெயராம்) கடலுடன் மல்லுக்கட்ட விடாமல், நன்கு படிக்க வைத்து ஆளாக்குகிறார். கார்ப்பரேட் நிறுவனமொன்றில் நிதி மேலாண்மை அதிகாரியாக வேலை செய்யும் ஜீவா, பாசமே உருவான அப்பாவுடன் நேரத்தைச் செலவிட முடியாத பணி வாழ்க்கையில் உழல்கிறான்.
திடீரென அப்பா இறந்துவிட, அதிர்ந்துபோகிறான். இறப்பதற்கு சில தினங்களுக்கு முன், ‘என்னை ஒரு ‘ட்ரிப்’ கூட்டிக்கொண்டு போறியா?’ என்று கேட்ட அப்பாவின் ஆசையை நிறைவேற்றத் தவறிவிட்டோமே என்கிற உறுத்தல், ஜீவாவைக் குற்றவுணர்ச்சியில் தள்ளுகிறது.
அதிலிருந்து விடுபட மனநல வழிகாட்டுதல் சிகிச்சைக்குச் செல்கிறான். அங்கே, தன்னைப் போலவே சிகிச்சைக்கு வந்திருக்கும் ஐந்து பேரைச் சந்திக்கிறான். அதில் இருவர் தங்களுடைய மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்கள். ஒருவர் தற்கொலை எண்ணத்தை விட முடியாதவர்.
இவர்களுடன் பெருங்கோபமும் பேரன்பும் கொண்ட இரு பெண்கள் என ஐந்து பேருடைய சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்ற, அவர்கள் அனைவரையும் ஒரு ‘ட்ரிப்’ அழைத்துச் செல்கிறான். ஆனால், அவர்களுடைய சின்னச் சின்ன ஆசைகளில் பெரிய பெரிய சிக்கல்கள் இருப்பதை தங்கள் பயண வழியில் அனுபவிக்கிறார்கள்.
அதையெல்லாம் தாண்டி ஜீவாவுக்கும் அவனுடன் பயணித்தவர்களுக்கும் அந்தப் பயணம் எப்படிச் சிறந்த சிகிச்சையாக மாறுகிறது என்பதுதான் ஏழு எபிசோட்களில் விரியும் இந்த இணையத் தொடரின் சாராம்சம்.
வாழ்க்கை ஓர் இனிய பயணம் போன்றது. அதில் எதிர்பாராத திருப்பங்கள் ஒளிந்திருக்கலாம். ஒவ்வொரு திருப்பமும் ஒரு பாடம். அதை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம்; அதன் வழியாக நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதை உணர்ந்தும் பளிங்கு நீரோடை இத்தொடர்.
பாசக் கதையாகவும் பயணக் கதையாகவும் இரண்டுவித கோணங்களில் இத்தொடரை இயக்கியிருக்கும் கிருத்திகா உதயநிதி, தனது திரைப்படங்களைப் போலவே, இணையத் தொடரிலும் தானொரு ‘மென்கதை’களின் இயக்குநர் என்பதைக் காட்டிவிடுகிறார். வாழ்வின் வலியிலிருந்தும் எதிர்பாராத மகிழ்ச்சியிலிருந்தும் முகிழும் ‘ப்யூர்’ நகைச்சுவையை அளவாகத் தூவியிருக்கிறார்கள்.
காளிதாஸ் ஜெயராம் தொடங்கி கௌரி கிஷன் வரை தொடரில் பங்கேற்ற அத்தனை நடிகர்களும் கதாபாத்திரங்களாக உணர வைக்கிறார்கள். குறிப்பாக சின்னி ஜெயந்த் ஏற்றுள்ள கதாபாத்திரம் தொடரைச் சிறப்பாகத் தொடங்கி வைத்துவிடுகிறது. கே. ரேணுகாவின் கதாபாத்திரம் தொடரின் நடுப்பகுதியை தூக்கி நிறுத்துகிறது. தான்யாவின் கதாபாத்திரம் இறுதி எபிசோட்களில் கவனத்தை ஈர்க்கிறது.
குற்றவுலகம் சார்ந்த த்ரில்லர்களையே நம்மிடம் அதிகமும் திணிக்கும் ஓடிடி உலகில் ‘பேப்பர் ராக்கெட்’ நம் மனத்தை பேரன்பின் இறகுகளால் வருடிச் செல்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago