மாத்தி யோசி - 8: நிம்மதி உங்கள் சாய்ஸ்!

By கா.கார்த்திகேயன்

"அப்பாடா! படிச்சு முடிச்சு நல்ல வேலையிலும் சேர்ந்தாச்சு. இனிமே ஜாலிதான்” என்று நிறைய இளைஞர்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். ஆனால், அவர்கள் வாழ்க்கையைச் சிறப்பாக்கிக்கொள்ள கொஞ்சம் மாத்தி யோசித்தால் இன்னும் நன்றாக இருக்கும். “ ஏன் இப்போதே நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு. இதுல என்ன மாத்த வேண்டியிருக்கு” என்ற கேள்வி எழலாம். வாங்க, அதில் சில விஷயங்களைப் பற்றி ஆராய்வோம்.

வீட்டில் மட்டுமல்ல பள்ளி, கல்லூரியிலும் ஏதேனும் சொல்லிவிடுவார்களோ என்கிற அச்சமே இல்லாத பிள்ளைகள் என்றால், அது இந்தக் காலத்து தலைமுறைதான். ஏனெனில் நம்மை திட்டவோ, அதட்டவோ ஆளில்லை என்ற நினைப்பு. மிஞ்சி போனால் சில ஆசிரியர்கள் மட்டும் நம்மை கடிந்துகொள்வார்கள். அதனால், “லூஸ்ல விடு” என்கிற மனப்பாங்கிலேயே கடந்து வந்துவிடுகிறார்கள்.


கல்லூரியிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று காட்சி மாறும்போது பல விஷயங்கள் இதனாலேயே ஆரம்பத்திலே அவர்களுக்கு கடுப்படிப்பது போலவே இருக்கும். ஆனால், டார்வினின் தகுதி உள்ளவை மட்டுமே தப்பி பிழைக்கும் என்ற மொழியை உணர மறுத்தால் சிக்கல்கள் நமக்குத்தான்.

நிறுவனத்தின் உயர் அதிகாரி, ‘டார்கெட் முடிக்கவே இல்ல, வேலையில இருக்கிறதே வேஸ்ட்’ என்று கடுப்படிக்கும்போது, ‘விஷயம் புரியாம பேசாதீங்க’ என்று உயரதிகாரிகளிடமே மேதாவித்தனமாக பேசுவது, அவர்களுடைய அறிவுரையை உதாசீனப்படுத்துவது ஒருவகை என்றால், “நான் யார் தெரியுமா? என்னுடைய பேக்கிரவுன்ட் தெரியுமா?” என்று இளமை வேகத்தில் பிரச்சினையைப் பெரிதாக்கி கொள்வது மற்றொரு வகை. இப்படி எல்லாம் நடந்துகொண்டால் சர்வ நிச்சயமாக அதுபோன்றவர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். இதற்கு பெயர்தான் ‘ரியாலிட்டி ஷாக்’.

நம் எதிர்பார்ப்புக்கேற்ப நிறுவனம் இருக்க வேண்டும் என்ற மனநிலையில் மற்றம் தேவை. குழு மனப்பான்மையும் பணியில் நெகிழ்வுத்தன்மையும் வேலையில் முழுகவனமும் மட்டுமல்ல நிறுவனம் எதிர்பார்க்கிற ஊழியனாக இருந்தால் மட்டுமே வளர்ச்சியைப் பார்க்க முடியும். அதைத் தவிர்த்து வீண்பெருமை பேசிக்கொண்டிருந்தால் முன்னேற்றம் என்பது கானல் நீர்தான்.

இன்று இல்லங்கள்தோறும் இளைஞர்களைப் பற்றி கவலை கொள்ளும் இன்னொரு அம்சம், அவர்களின் செலவு மேலாண்மை பற்றிய மனப்பாங்கு. இன்று சம்பளம் வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்தவுடனேயே இணைய வழி வர்த்தகக் காலத்தில் விரைவாக பணத்தை எப்படி விரயம் செய்யலாம் என்று சிலர் லிஸ்டே போட்டு வைத்திருக்கிறார்கள். உயர்ரக பைக், பந்தாவான மொபைல் ,கற்று கொள்ளும் முன்பே இஎம்ஐயில் ஆடம்பர கார், அவசியமா இல்லையா என்று யோசிக்காமலேயே ஆன்லைனில் வாங்கி குவிப்பது என்றிருந்தால் இப்போது மகிழ்வை அனுபவிக்கிற நாம்தான் பின்னாளில் சிரமத்தையும் அனுபவிக்க நேரிடும்.

‘வீக் எண்ட் பார்ட்டி’ என்பதெல்லாம் வழக்கமானால் நம்முடைய நிதி நிலைமைதான் ‘வீக்’காக மாறும் என்று உணராதவர்கள் பெருகி வருகிறார்கள். இதில் பல வீண்செலவுகள் சகநண்பர்களாலும் உடன் பணியாற்றுவோராலும் ஏற்படுபவை என்பதை அவர்களே ஒப்புக்கொள்வார்கள்

நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம் வீண் செலவாகாமல் முதலீடாக இருந்தால் நல்லது. பணத்தைப் பார்க்கிறபோது இனி நமக்கு அணைக்கட்டு நினைவில் வர வேண்டும். தேவையான அளவு தேக்கி வைத்துக்கொண்டு பயன்பாட்டுக்கென நீரை வெளியேற்றுகிறபோது பெறுகிற பலன்கள் பலமடங்குதானே!

கல்லூரிக் காலத்துக்குப் பிறகு தொடங்கும் வாழ்க்கையின் ஆரம்ப காலம் சவால் நிறைந்தாகவே இருக்கும். அந்தச் சூழ்நிலையில் ஆடம்பரச் செலவு செய்வதை புத்திசாலி இளைஞர்கள் விரும்பமாட்டார்கள். ஸ்மார்ட் சிந்தனையுடைய இளைஞர்கள்தான் புதிதாக எதையாவது வாங்கலாம் என்கிற தேவையற்ற சிந்தனையில் இருப்பார்கள். வீண் இஎம்ஐயில் மாட்டிக்கொள்வதைவிட அவசியமான வீட்டுக் கடனுக்கான இஎம்ஐயில் கவனம் செலுத்தலாம். மியூட்சுவல் பண்ட், பங்குச் சந்தை, தபால் துறையில் சேமிப்பு , சீட்டு மூலம் சேமிப்பு என பலவகையில் சேமிப்புகளை செயல்படுத்துவார்கள்.

செலவு மேலாண்மை செய்வதில் கவனம் சிதறி தட்டுப்பாடு என்று புலம்புவர்களுக்கு மத்தியில் ஸ்மார்ட்டாக காசு பணம் துட்டு என்று நிதி மேலாண்மையில் சிறந்தவர்களாக நாமும் மாறுவோம், பலன்களை பெறுவோம்.

(இன்னும் யோசிப்போம்)
கட்டுரையாளர்: தனியார் கல்லூரி மேலாண்மை துறைத் தலைவர்
தொடர்புக்கு: karthikk_77@yahoo.com


‘இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE