படுக்கையை விலைகொடுத்து வாங்கலாம். தூக்கத்தை வாங்க முடியுமா? ஆனால், தூங்கும் இடமும் படுக்கையும் வசதியாக இருந்தால் நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்கலாம். படுக்கையறை என்பது ஒரு வீட்டின் முக்கியமான பகுதி. ஒரு நாளின் மூன்றில் ஒரு பகுதி நேரத்தை நாம் செலவிடுவதும் அங்கேதான். அப்படிப்பட்ட படுக்கையறை நம் விருப்பத்துக்குரியதாகவும் வசதியானதாகவும் இருக்க வேண்டியது அவசியம். பொதுவாக நாம் அறிந்து வைத்திருப்பது செவ்வக வடிவ கட்டில் மெத்தைகளைத்தான். ஆனால், இதுவரை பார்த்திராத வித்தியாசமான பல கட்டிலுடன்கூடிய மெத்தைகள் ஏராளம் உள்ளன. அவற்றை இங்கே பார்க்கலாம்.
சினிமா பெட்
உலகில் மேம்பட்ட படுக்கை வசதி கொண்டதாக அறியப்படுகிறது, சினிமா பெட். இதில் ஹோம் தியேட்டர், புரொஜக்டர், 5 முனை சவுண்ட் சிஸ்டம், எல்இடி திரை, இரவு நேர ஒளி அமைப்பு என 18 வகையான அம்சங்கள் உள்ளன. ஒரு கூடாரத்தில் படுத்துக்கொண்டே புரொஜக்டர் திரையில் சினிமாவைப் பார்க்கும் அனுபவத்தை இதில் உணரலாம். அதற்கேற்ற ஒலி/ஒளி அமைப்பும் இந்தப் படுக்கையில் உள்ளதாக ஆன்லைன் அறிமுகத்தில் சொல்கிறார்கள். இது இந்திய மதிப்பில் 3,20,221 ரூபாய் என்கிற விலையில் ஆன்லைனில் விற்பனையாகிறது.
பறவைக் கூடு படுக்கை
பார்ப்பதற்குப் பறவையின் கூடு போலவே காட்சி தருகிறது இந்தப் படுக்கை. படுக்கையைச் சுற்றி உள்ள கூடுகள் பைன் மரப் பலகைகளால் அமைக்கப்பட்டிருக்கின்றன. கூட்டின் உட்புறம் லிக்ரா காட்டன் எனும் துணியால் செய்யப்பட்டிருக்கின்றன. நம் விருப்பத்திற்கேற்பவும் அளவுகளுக்கேற்பவும் பல்வேறு வண்ணங்களில் இது கிடைக்கிறது. முட்டை வடிவிலான தலையணைகள் கூட்டைச் சுற்றிலும் உள்ளன. இதில் படுத்து எழுந்தால் உடல் வலி போகுமா அல்லது ஏற்படுமா என்பது உபயோகப்படுத்தியவர்கள் சொன்னால்தான் தெரியும். படுக்கையின் உள்ளே செல்லவும் வெளியேறவும் பயிற்சியையும் தெரிந்து வைத்திருத்தல் நலம்.
யிங் அண்ட் யங் பெட்
பெயரைப் பார்த்தவுடனே இது நம்ம ஊர் பெட் இல்லை என்று ஊகித்திருப்பீர்கள். ஆமாம், இது சீனத் தத்துவ முறையில் முத்திரையைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட படுக்கை. ஒரே அறையில் படுக்க வேண்டும்; அதே நேரம் தனிநபர் இடைவெளியும் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களின் சாய்ஸ் இந்தப் படுக்கை. படுக்கையைப் பகிர்ந்துகொள்ள விரும்பாதவர்களுக்கும் இது பயன்படும்! இந்தப் படுக்கையை வடிவமைத்தவர் இத்தாலிய டிசைனர் அலெஸ்ஸியோ பப்பா. இப்படுக்கை பார்க்க அழகாகத் தெரிந்தாலும் இதில் காலை நீட்டிப் படுக்க முடியாது. படுத்தால் தூக்கம் வருமா? அதுவும் சந்தேகம்தான்.
ஹேம்பர்கர் பெட்
சிலருக்கு சாப்பிட்டு முடித்ததும் ஒரு குட்டித் தூக்கம் போட வேண்டும் என்று நினைப்பார்கள். இன்னும் சிலருக்கு தூங்கி எழுந்ததும் பசி வயிற்றைக் கிள்ளும். நாம் தூங்கும் படுக்கையே உணவை ஞாபகப்படுத்தும் வடிவத்தில் இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் ‘ஹாம்பர்கர் பெட்’. சாதாரண வட்ட வடிவ படுக்கையை கைலா க்ரோமர் என்கிற பெண்மணி பர்கர் வடிவில் மாற்றியமைத்தார். 2009இல் ஓர் அறக்கட்டளைக்காக ஏலம் விடப்பட்ட இந்த படுக்கை, இதுவரை பலபேர் கைமாறி, இப்போது பர்கர்களுக்கான அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
பெட் பங்கர்
வீட்டிலிருக்கும் பணத்தையும் நகையையும் பாதுகாக்க பீரோ லாக்கரில் வைத்து பூட்டி வைப்பார்கள். அதையும் உடைத்து திருடும் கில்லாடிகள் இருக்கிறார்கள். ஆனால், இந்த பங்கர் பெட்டில் ஒரு லாக்கர் இருப்பதே தெரியாதபடி இருக்கும். இது தகர்க்க முடியாத அளவுக்கு உறுதியான படுக்கை ஆகும். 10 கேஜ் ஸ்டீலினால் செய்யப்பட்ட இந்தப் படுக்கை பொருட்களுக்கும் பாதுகாப்பு தருகிறது. நீங்கள் கட்டிலில் படுத்திருக்கும்போது யாராலும் உங்கள் விலை மதிப்பற்ற பொருட்களைத் திருடிச் செல்ல முடியாது. இதன் விலை ரூ. 4,07,000.
புத்தகப் படுக்கை
ஒரு புத்தகத்தை விரித்தால் எப்படியிருக்குமோ, அப்படியிருக்கிறது இந்தப் படுக்கை. யுசுகே சுசுகி என்ற ஜப்பானிய ஒளிப்பதிவாளர் வடிவமைத்த படுக்கை இது. புத்தகப் பக்கங்களைப் போலவே மெத்தைகள் லேயர் லேயராக இருக்கிறது. ஒன்றை விரிப்பாகவும் மற்றொன்றை போர்த்திக் கொண்டும் படுக்க வசதியாகத் தோற்றம் தருகிறது. இடம் இருந்து வசதியும் இருந்தால் இந்தப் படுக்கையை வாங்க முடியும்.
கொசுவலை ஊஞ்சல் பெட்
பலருக்கும் வராண்டாவிலோ, தோட்டத்திலோ காற்றோட்டமாகப் படுக்க வேண்டும் என்கிற ஆசையிருக்கும். ஆனால், கொசுத் தொல்லை, பாதுகாப்புக் காரணங்களுக்காக அது முடியாமல் போயிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்டதே இந்த ஹேம்மாக் பெட். ஊஞ்சல் வடிவில் முழுவதும் நைலான் இழைகளால் செய்யப்பட்ட இதன் அமைப்பு கொசு, பூச்சிகளின் தொந்தரவுகள் இல்லாத நிம்மதியான தூக்கத்தைத் தருகிறது. இதன் விலை ரூ.15,980.32.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago