வீடியோ கேமிங் பற்றி நீங்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? அது சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வமாக ஈடுபடும் பொழுதுபோக்குகளில் ஒன்று என்றா? சரிதான்.இதுவரையில் வீடியோ கேமிங் ஒரு பொழுதுபோக்கு விஷயமாகத்தான் இருந்தது. ஆனால், இனி அது பொழுதுபோக்காக மட்டுமில்லை சமூக ஊடகத்தின் புதிய முகமாகவும் இருக்கப்போகிறது.
கடந்த பத்தாண்டுகளில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள ஊடகங்கள் உலகின் போக்கில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதை புரிந்து கொள்வதன் மூலம் வீடியோ கேமிங் துறை உலகின் போக்கில் என்ன மாற்றங்களை நிகழ்த்த உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும். நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கான தளமாக மார்க் ஜூகர்பெர்க் அவரது கல்லூரி காலத்தில் பேஸ்புக்கை உருவாக்கினார். நண்பர்களிடையே குறுஞ்செய்திகளைப் பகிர்வதற்கான தளமாக ஜாக் டோர்ஸி ட்விட்டரை ஆரம்பித்தார். மக்கள் தங்கள் கொண்டாட்டத் தருணங்களை புகைப்படங்களாகப் பகிர்வதற்கான தளமாக இன்ஸ்டாகிராம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இன்று இந்த சமூக வலைதளங்கள் வெறும் அரட்டை அடிப்பதற்கான, பொழுதைப் போக்குவதற்கான தளமாக இல்லை. இன்று மக்கள் செய்திகளை அறிய சமூக வலைதளங்
களைத்தான் நம்பி இருக்கின்றனர்.
செய்தி நிறுவனங்கள் மக்களுக்கு செய்திகளைக் கொண்டு சேர்க்க சமூக வலைதளங்களைத்தான் சார்ந்து இருக்கின்றன. அரசியல் தலைவர்கள் மக்களுக்குத் தகவல் தெரிவிக்க சமூக வலைதளங்களைத்தான் பயன்படுத்துகின்றனர். ஒட்டுமொத்த அளவில் வர்த்தகம், தொழில், கல்வி, செய்தித்துறை, அரசியல், வேலை தொடர்பான கட்டமைப்புகளில் பெரும் மாற்றத்தை சமூக வலைதளங்கள் ஏற்படுத்தியுள்ளன.உலகையே இணைக்கும் பாலங்களாக அவை உள்ளன. சரி, இதில் வீடியோ கேமிங் என்ன செய்யப் போகிறது? நாம் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் சமூக வலைதளங்கள் இருபரி மாணத் தன்மை கொண்டவை. அதாவது, நாம் சமூக ஊடகங்களில் கருத்துகள், வீடியோக்கள், புகைப்படங்களைப் பகிர்கிறோம். இவை
யெல்லாம், இரு பரிமாண அனுபவத்தைத்தான் நமக்குத் தருகின்றன. கேமிங் நமக்கு முப்பரிமாண அனுபவத்தை தரவுள்ளன. ‘பப்ஜி’யும் ‘கால் ஆஃப் டூட்டி’யும் பத்து ஆண்டுகளுக்கு முன்புவரையில், வெளிவந்துகொண்டிருந்த வீடியோ கேம்களில் பெரும்பாலானவை இணையத் தொடர்பு இல்லாமல் விளையாடக் கூடியவை. 2010-க்குப்
பிறகு ஸ்மார்ட்போன்களின் பெருக்கம் நிகழ்ந்தது. இணைய வசதி உலகின் மூலை முடுக்குகள் வரை ஊடுவியது. இதனால், வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனங்கள் மொபைல் போன்களுக்கான கேம்களை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தத்
தொடங்கின. அவை ஆன்லைனில் விளையாடக் கூடியதாகவும் உருவாக்கப்பட்டன. இந்த மாற்றம் கேமிங் துறையில் மிகப் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. நாம் தனியொருவராக இல்லாமல், உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் நபர்களுடன் இணைந்து ஒரே கேமை விளையாடுவதற்கான சாத்தியம் உருவாகிவந்தது. அந்த வகையில் ஆன்லைன் கேமிங்கானது பொழுதுபோக்கு என்பதாக மட்டுமல்லாமல், இன்னொரு நபருடன் உறவாடும் அனுபவத்தை வழங்கக்கூடியதாக உருவெடுத்தது.இந்தப் புள்ளியில்தான் கேமிங் ஒரு பொழுதுப்போக்கு என்பதிலிருந்து சமூகமாக்கலுக்கான ஊடகம் என்பதாக மாறுகிறது.
மிகச் சிறந்த உதாரணங்கள் ‘பப்ஜி’ மற்றும் ‘கால் ஆஃப் டூட்டி’. 2017-ம் ஆண்டு ‘பப்ஜி: பேட்டில்கிரவுண்ட்ஸ்’(PUBG:Battelgrounds) வெளியானது. எதிராளிகளைச் சுட்டுவீழ்த்தி, நாம் உயிர் பிழைத்திருப்பதுதான் பப்ஜியின் கரு. இதில் நாம் தனிநபராக மட்டுமில்லை, பல நண்பர்களுடன் சேர்ந்துவிளையாட முடியும். அறிமுகமே இல்லாத, உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நபர்களுடனும் சேர்ந்து பப்ஜி விளையாடலாம். கேமின் உள்ளே நாம் நம் குழுவினருடன் ரியல்-டைமாக உரையாடலாம். ‘பப்ஜி’ போலவே, ‘கால் ஆஃப் டூட்டி: வார்ஸோன்’(Call of Duty: Warzone) கேமும், வெவ்வேறு இடத்தில் இருக்கும் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடக்கூடியதுதான்.
இந்த ரியல்-டைம் உரையாடல்வழியாக நாம் அடையும் அனுபவம் மிகவும் தனித்துவமானது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்
ஆகியவற்றைப் பொறுத்தவரையில் நாம் யதார்தத்தில் உணரும் விஷயங்களை இத்தளங்களில்
பகிர்கிறோம். ஆனால், வீடியோ கேமிங்கைப் பொறுத்தவரையில் நாம் புதிய உலகு ஒன்றுக்குள் நுழைகிறோம்.
அந்த உலகில் நாம் விரும்பும் நபர்களுடன் பயணிக்கிறோம். இதை நாம் முப்பரிமாண அனுபவம் என்று வரையறுக்க முடியும். இந்த முப்பரிமாண அனுபவம்தான் சமூக வலைதளங்களின் அடுத்தகட்டமாக இருக்கப்போகிறது. இத்தகைய ஒரு கட்டமைப்பைத்தான் மெட்டாவர்ஸ் என்று அழைக்கிறார்கள். மெட்டாவர்ஸும் கேமிங்கும் மெட்டாவர்ஸுக்கான அடிப்படையே கேமிங்தான். கிரிப்டோகரன்சி, என்எஃப்டி உள்ளிட்ட மெய் நிகர் சொத்துகள் உருவாக்கத்துக்கும் கேமிங்தான் அடிப்படை. மெட்டாவர்ஸ் மூலமாக நாம் என்னவெல்லாம் உருவாக்க இருக்கிறோமோ அவை கேமிங் துறை வழியாகத்தான் உருவாகப்
போகிறது. கேமிங் உலகத்தின் சாத்தியத்தை உணர்ந்ததால்தான், சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம் தன்னுடைய பெயரை மெட்டா என்று மாற்றியுள்ளது.
» அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்: பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்
» விளையாட்டு வீரர்களுக்கான திருத்தப்பட்ட திட்டங்கள்: அனுராக் தாக்கூர் அறிமுகம்
பேஸ்புக், மைக்ரோசாஃப்ட், டென்சன்ட், பைடுடான்ஸ், அலிபாபா உள்ளிட்ட நிறுவனங்கள் கேமிங் துறையில் முன்னெப்போதிருந்ததை விடவும் தீவிரமாக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. இவ்வாண்டு தொடக்கத்தில், உலகின் முன்னணி கேம் தயாரிப்பு நிறுவனமான அக்டிவிசன் பிலிசார்ட் (Activision Blizzard) நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 69 பில்லியன் டாலருக்கு வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. இது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதன் 47 ஆண்டுகால வரலாற்றில் ஒரு
நிறுவனத்தை வாங்க செலவிடும் அதிகபட்ச தொகையாகும். கணினிக்கான இயங்குதளமான விண்டோஸ்தான் மைக்ரோ சாஃப்ட்டின் பிரதான தயாரிப்பு.
இதுதவிர்த்து, எக்ஸ்பாக்ஸ் போன்ற கேமிங் சாதனங்கள் தயாரிப்பிலும் மைக்ரோசாஃப்ட் ஈடுபடுகிறது. ஆனால், பெரும்தொகைக் கொடுத்து கேமிங் நிறுவனம் ஒன்றை வாங்குகிறது என்றால், மைக்ரோசாஃப்ட்டின் நோக்கம் வெறும் பொழுது போக்குக்காக கேம்
களை உருவாக்குவதாக மட்டும் இருக்க போவ தில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். நாடுகளிடையிலான போட்டி தனித் தனி நிறுவனங்கள் மட்டுமில்லை, இன்று உலக நாடுகள் கேமிங் துறையில் தங்களை வலுவாக்கிக் கொள்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன. இன்று இணைய உலகில் மிக முக்கியமான நிறுவனங்களாக விளங்கும் கூகுளும் பேஸ்புக்கும் பெரும் திட்டத்துடன் உருவாக்கப்பட்டவை அல்ல.
கல்லூரி அளவிலானதாகத்தான் முதலில் அவை இரண்டும் உருவாக்கப்பட்டன. பிற்பாடுதான் அவை பெரும் புரட்சியை நிகழ்த்தின. அதனால், அந்த சமயத்தில் பிற நாடுகளிடையே பெரிய போட்டிகள் உருவாகவில்லை. ஆனால், இப்போது சூழல் அப்படி இல்லை. எதிர்கால தொழில்நுட்பக் கட்டமைப்பு எப்படி இருக்கப்போகிறது (மெட்டாவர்ஸ்) என்பதை எல்லா நாடுகளும் உணர்ந்துவிட்டன. இதனால், தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடுகளிடையே, பெரும் போட்டிச் சூழல் உருவாகி இருக்கிறது.
தற்போது கேமிங் துறையில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. உலகின் தலைசிறந்த கேமிங் நிறுவனங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் அமெரிக்க நிறுவனங்கள் ஐந்தும், ஐப்பான் நிறுவனங்கள் மூன்றும், சீன நிறுவனம் ஒன்றும் இடம்பெற்றுள்ளன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கேமிங் துறையில் பூஜ்ய நிலையில் இருந்த சீனா, கேமிங் துறையில் உச்சமாக திகழும் அமெரிக்காவுக்கு சவால் விடும் அளவுக்கு இன்று தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது.
இந்தியாவும் கேமிங் துறையும் வீடியோ கேம்களுக்கான சந்தையில் உலகின் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் கரோனா காலகட்டத்தில் வீடியோ கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. அதுவரையில் வீடியோ கேமிங்கில் ஆர்வமற்று இருந்தவர்கள்கூட கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வீடியோ கேமிங் நோக்கி நகர்ந்தனர். இந்தியாவில் வீடியோ கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை 2010-ல் 2 கோடியாக இருந்தது. இப்போது அது 40 கோடியாக உயர்ந்துள்ளது. 2019-ல் இந்திய ஆன்லைன் கேமிங் சந்தை மதிப்பு 900 மில்லியன் டாலராக இருந்தது. 2023-ல் அது 3 பில்லியன் டாலராக உயரும் என்று கணக் கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கேமிங் துறை மிகப் பெரும் சந்தை வாய்ப்பாக உருவெடுத்துள்ள நிலையில்,முன்னணி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய வீடியோ கேம் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன.
2015-ல் இந்தியாவில் வீடியோ கேமிங் துறை சார்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 40 என்ற அளவிலே இருந்தது. 2019-ல் அது 275 ஆக உயர்ந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 400-ஐ தாண்டியுள்ளது. 2 கேமிங் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் யுனிகார்ன் பட்டியலில் இணைந்துள்ளன. கேமிங் துறையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.
ஆனால், இந்தியா வீடியோ கேம்களுக்கான சந்தையில்தான் முன்னணியில் இருக்கிறதே தவிர, வீடியோ கேம்களை உருவாக்குவதற்கான கட்டமைப்பில் இந்தியா மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. கேமிங் துறை அதீத திறனைக் கோரக் கூடியது.
இந்தியாவில் கேமிங் துறையில் பணியாற்றுவதற்கான திறமைமிக்க நபர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. கேமிங் துறைதான் இணைய உலகின் போக்கைத் தீர்மானிக்கப் போகிறது என்ற சூழலில், வீடியோ கேம்கள் உருவாக்கத்தில் தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய தருணத்தில் இந்தியா உள்ளது. எப்படி பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உலகின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தினவோ, அதுபோலவே கேமிங் துறை வரும் ஆண்டுகளில் உலகின் போக்கில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. நீங்கள் வீடியோ கேம் விளையாடாத நபராக இருக்கலாம். ஆனால், இனி உலகம் வீடியோ கேம்களை மையப்படுத்திதான் சுழலப்போகிறது.
தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago