வாட்ஸ் அப் உரையாடலில் Hey சொல்வது தவறா? இந்தியா முழுவதும் வைரலாகும் உரையாடல்

By நிஷா

கரோனா பெருந்தொற்றுக் காலம், நம் அன்றாட வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல் அலுவலகத்தின் பணிபுரியும் சூழலையும் ஒட்டுமொத்தமாக மாற்றி அமைத்துவிட்டது. தனிப்பட்ட வாழ்க்கை, அலுவலகப் பணி இரண்டுக்கும் இடையிலான நேரப் பாகுபாட்டையும் சூழல் வேறுபாட்டையும் பெருந்தொற்றுக் கால பொதுமுடக்கம் தகர்த்ததெறிந்து இருக்கிறது. இருப்பினும், அலுவலகங்களில் இறுக்கமாக, ஃபார்மலாக இருப்பதையே இன்றும் சில மேலாளர்கள் விரும்புகிறார்கள். அத்தகைய மேலாளர் ஒருவரின் வாட்ஸ் அப் உரையாடலே தற்போது இந்திய அளவில் படு வைரலாகப் பரவிவருகிறது.

என்ன நிகழ்ந்தது?

தனியார் நிறுவனம் ஒன்றின் மேலாளருக்கும் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும் நடந்த உரையாடல் அது. அந்த ஊழியரின் பெயர் ஸ்ரேயாஸ். தான் கொடுத்த வேலை முடிந்துவிட்டதா என்று அவரிடம் மேலாளர் கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலளிக்கும்போது, “Hey, அது இன்னும் முடியவில்லை” என்று ஸ்ரேயாஸ் கூறியிருக்கிறார். இங்கே ஸ்ரேயாஸ் கூறிய Hey என்கிற வார்த்தையே பெரும் பிரச்சினையாகி இருக்கிறது. அவர்களுக்கு இடையில் நிகழ்ந்த வாட்ஸ் அப் உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Hey வேண்டாம், Hi போதும்

Hey எனும் வார்த்தையைப் பார்த்தவுடன் அந்த மேலாளர் கோபமடைந்தார். காரணம், அவரைப் பொறுத்தவரை Hey என்பது மரியாதைக் குறைவான வார்த்தை. அந்த ஊழியரிடம் 'Hey' என்கிற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியவர், தேவைப்பட்டால் நீங்கள் என்னை சந்தீப் என்றே அழையுங்கள் என்று தெரிவித்துள்ளார். ஒருவேளை என்னுடைய பெயர் நினைவுக்கு வரவில்லை என்றால், வெறுமனே Hi என்று மட்டும் சொன்னால்போதும் என்றும் கூறியுள்ளார்.

வாட்ஸ் அப் உரையாடல்

மேலாளரின் கோரிக்கை, ஸ்ரேயாஸ் எனும் அந்த ஊழியருக்கு ஏற்புடையதாக இல்லை. அவர் அந்த உரையாடலை நிறுத்துவதாகவும் இல்லை. நான் பொது உரையாடலிலோ, லிங்க்டு இன் போன்ற தொழில்முறையிலான இணையதளத்திலோ உங்களை Hey என்று அழைக்கவில்லையே. நம் இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட வாட்ஸ் அப் உரையாடலில், அதுவும் என்னுடைய பர்சனல் எண்ணிலிருந்து பேசும் சாதாரண உரையாடலில்தானே Hey என்று கூறினேன். இதை எப்படி நீங்கள் அவமரியாதையாகக் கருத முடியும் என்று கேட்டுள்ளார்.

ஸ்ரேயாஸ் அளித்த விளக்கம், சந்தீப்புக்குக் கூடுதல் எரிச்சலை ஏற்படுத்தியது. 'வாட்ஸ் அப்’ உரையாடல் என்பது உரையாடல் அல்ல. இதுவும் ஒரு தொழில்முறை உரையாடலே. என்னுடன் உரையாடும்போது வார்த்தைகளைக் கவனத்துடன் பயன்படுத்துங்கள். இது உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். ஒருவேளை அது உங்களுக்குப் புரியவில்லை என்றால், நானே உங்களுக்கு விரைவில் புரியவைப்பேன் என்றும் எச்சரித்து இருக்கிறார்.

’சார்’ என்றால் பிரச்சினை வராது

இந்த உரையாடலின் முழு ஸ்கிரீன்ஷாட் தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. இணையவாசிகள் இதற்குப் பல்வேறு பின்னூட்டங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். Hey, Hi ஆகிய ஆங்கில வார்த்தைகளுக்கு இடையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லையே. இதை ஏன் இவ்வளவு பெரிய பிரச்சினையாக சந்தீப் பார்க்க வேண்டும் எனப் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், வாட்ஸ் அப் என்பது தனிப்பட்ட முறையிலான உரையாடல் அல்ல என்று எப்படி சந்தீப் கூற முடியும் என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சந்தீப்பின் இந்த அணுகுமுறை அவருடைய மேலாளர் எனும் ஆணவத்தையும் அவரிடம் இருக்கும் ஆதிக்க மனோபாவத்தையும் உணர்த்தும்விதமாக இருக்கிறது என்றும் பலர் பதிவிட்டுள்ளனர். இது மிகவும் சிறிய பிரச்சினையே. பொதுவாக அலுவலகத்தில், மேலதிகாரியிடமோ முதலாளியிடமோ உரையாடும்போது ‘சார்’ என்று அழைத்தால் இதுபோன்ற பிரச்சினை ஏற்படாது என்றும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இறுக்கச் சூழலை விரும்பும் மேலாளர்கள்

வீட்டிலிருந்து பணிபுரியும் சூழல் சிலருக்கு கரோனா பரவலுக்கு முன்னரே இருந்தது. இருப்பினும், கரோனா பரவல் காலத்தில் அது அனைவருக்கும் உரித்தானதாக மாறியது. இதன் விளைவாக, வீடும் அலுவலகமும் ஒன்றாகிவிட்ட நிலை ஏற்பட்டது. அலுவலக வேலைகளின் இடையிலும், இணையவழி குழு விவாதங்களிலும் குழந்தைகளின் சிணுங்கல்களும் விளையாட்டுகளும் சேர்ந்தே ஒலிக்கத் தொடங்கின.

இன்று சூழல் மாறிவிட்டது. கரோனாவின் பரவலும் கட்டுக்குள் வந்துவிட்டது. நாமும் அலுவலகத்துச் செல்லத் தொடங்கிவிட்டோம். இருப்பினும், அலுவலகத்தில் நிலவும் இயல்பான இறுக்கச் சூழலுக்கு நாம் இன்னும் முழுமையாகத் திரும்பவில்லை என்றே சொல்ல வேண்டும். இது ஒருவகையில் ஆரோக்கியமானது என்றாலும், சில நிறுவனங்களின் மேலாளர்களுக்கு அது ஏற்புடையதாக இல்லை. சந்தீப்பின் செயல் உணர்த்தும் சேதி இது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்