ஓர் அண்ணன், ஆறு அக்காக்கள் கொண்ட பெரிய குடும்பம் என்னுடையது. அப்போது பொருளாதாரத்தில் முன்னேறிய குடும்பம் அல்ல. மின்விசிறிகூடக் கிடையாது என்றாலும் அதெல்லாம் ஒரு குறையாகவே யாருக்கும் இருக்காது. பெரிய பாசப்பிணைப்பு, சின்னச் சின்ன உரசல்கள் என்று சுவாரசியமாகவே நாட்கள் நகர்ந்தன. நான்கு வீடுகள் தள்ளி ஒரு மருத்துவமனை. அங்கே வாரம் ஒருமுறையாவது வீட்டில் உள்ளவர்கள் செல்ல வேண்டிய சூழல் உருவாகிவிடும். என்னை முன்னதாகவே அனுப்பி டோக்கன் வாங்கி, காத்திருக்கச் சொல்வார்கள். பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மெதுவாக வந்து சேர்வார்கள்.
நான் கடைக்குட்டி என்பதால் ஓரளவு செல்லம் உண்டு. சில நேரம் அதுவே எனக்கு அசெளகரியமாக இருப்பதும் உண்டு. வீட்டில் அனைவருக்கும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டு. சாப்பிடும்போதுகூட ஒரு கையில் விரித்த வார இதழ், மறு கையால் சாப்பாடு என்றுதான் எல்லாரும் காட்சி தருவோம். சுதேசமித்திரன், விகடன், குமுதம் போன்ற இதழ்களை வாங்கி வரச் சொல்வார்கள். ஆனால், வீட்டில் எல்லாரும் படித்தபிறகு அல்லது புரட்டிய பிறகு என் கைக்கு மெதுவாகத்தான் அவை வந்துசேரும். கேட்டுப் பார்த்தால் ‘அஞ்சு நிமிஷம் இரு’ என்று பல ஐந்து நிமிடங்களை எடுத்துக்கொள்வார்கள். ஒரு கட்டத்தில் தந்திரமாக ஒரு மாற்றுவழியைக் கண்டுபிடித்தேன். கடையில் வார இதழ்களை வாங்கியவுடன் தெருவிலேயே நின்று படித்துவிட்டு, பிறகு வீட்டுக்கு எடுத்துச் செல்லத் தொடங்கினேன்.
அம்புலிமாமா படிப்பதற்கு அரை கிலோமீட்டர் தொலைவில் இருந்த நகராட்சி நூலகத்துக்குச் செல்வேன். ஒருமுறைகூட அந்த இதழ் உடனடியாகக் கிடைத்ததில்லை. யாராவது படித்துக்கொண்டிருப்பார்கள். எப்படியாவது அவர்களுக்கு அருகே சென்று உட்கார்ந்துவிடுவேன். அப்போதுதானே அவர் கீழே வைத்தவுடன் நான் எடுத்துக்கொள்ளலாம்! அவர் ஒவ்வொரு பக்கத்தைத் திருப்ப நேரம் எடுத்துக்கொள்ளும்போதும் அவரை என் மனத்தில் திட்டிக்கொண்டே இருப்பேன். ஒருமுறை ‘கொஞ்சம் வேகமாகத்தான் படியுங்களேன்’ என்று வாய்விட்டே கூறிவிட்டேன். அவர் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, சட்டென்று புத்தகத்தை என்னிடம் கொடுத்துவிட்டார். மகிழ்ச்சியுடன் படிக்கத் தொடங்கிவிட்டேன்.
நான் படித்த ஹிந்து தியாலஜிகல் பள்ளி அப்போது சென்னை நகரின் பெருமை மிகுந்த கல்விக்கூடங்களில் ஒன்று. வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் அந்தப் பள்ளிக்கு தினமும் சென்று வர வேண்டும். அந்தப் பள்ளிக்கு என்று விளையாட்டு மைதானம் எதுவும் கிடையாது. அங்கிருந்து மேலும் இரண்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ஒரு பொது மைதானத்தில்தான் என்சிசி மாணவர்களுக்கான பயிற்சி வாரம் ஒருமுறை நடைபெறும். காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை பயிற்சி இருக்கும். பள்ளியில் முதல் வகுப்புக்கு மட்டும் வர வேண்டியதில்லை. அதாவது பத்து மணிக்கு பள்ளியில் இருக்க வேண்டும். இடைப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் நான்கு கிலோமீட்டர் ஓட்டமாக ஓடி வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு, கையில் டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு மீண்டும் இரண்டு கிலோமீட்டர் ஓடி பள்ளியை அடைய வேண்டும்.
அம்மாவுக்கு கண்புரை அறுவை சிகிச்சை நடந்தது. அப்போதெல்லாம் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து சில நாட்களுக்குக் கண்களில் கட்டுப் போட்டிருப்பார்கள். வார இதழில் அவர் படித்து வரும் தொடர்கதைகளை அம்மா என்னைப் படிக்கச் சொல்லிக் கேட்பார். என் கற்பனையை பயன்படுத்தி அந்தத் தொடர்கதையில் இல்லாத திருப்புமுனைகளை எல்லாம் உருவாக்கி, படித்துக் காட்டுவேன். ‘அடப்பாவி அவனை ஏண்டா சாகடிச்சான்?’ என்று அம்மா சொல்லும்போது எனக்கு உற்சாகமாக இருக்கும். படிக்கும் வேகத்தில் என்னால் ஒரு கதையை உருவாக்க முடிகிறது என்பதை உணர்ந்துகொண்ட அந்தத் தருணம்தான் நான் எழுத்தாளன் ஆவதற்கான அஸ்திவாரமாக அமைந்தது!
கட்டுரையாளர், எழுத்தாளர்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago