பிற குழந்தைகளுடன் சிறிதும் ஒப்பிட இயலாத சிறுபருவ வாழ்க்கை என்னுடையது. என் அப்பாவழிப் பாட்டி காந்தியம்மாவுக்குப் பெண் குழந்தை மீது அளவற்ற ஆசை. அவருக்கோ ஒரே ஓர் ஆண்பிள்ளை, என்னுடைய தந்தை. எனவே என்னைத் தத்துப்பிள்ளைபோல் எடுத்துக் கொண்டார்கள். தாத்தா பாட்டியிடம் வளர்ந்தேன். சுயமரியாதை இயக்கக் காலம் தொடங்கி பெரியாரோடு தன்னை இணைத்துக்கொண்ட குடும்பம். பெரியாரின் பெண் விடுதலைக் கருத்துகளுக்கு ஏற்ப நான் வாழ வேண்டும் என்பதே அவர்கள் லட்சியம்.
எட்டு, ஒன்பது வயதுக்குள் எல்லாவற்றையும் வாசித்துத் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் தெரிந்த அனைத்தையும் பேசிவிட வேண்டும் என்ற துடிப்பும் எனக்குள் வேகமாக வளர்ந்தன. என் உலகம் என் வாசிப்பின் வழியே விரிந்தது. வீட்டில் விடுதலை நாளேடும் உண்மை இதழும் தாத்தா வாசிக்க, பாட்டி கேட்டுக்கொண்டிருப்பார்.
அறிஞர் அண்ணா வாசகசாலை
காலையில் எழுந்து குளித்துவிட்டு, அடுத்த தெருவிலிருந்த அறிஞர் அண்ணா வாசகசாலைக்குச் சென்று, அன்று வந்திருக்கும் அத்தனை நாளிதழ்களையும் வாசிக்கும் பழக்கம் இருந்தது. என்னை வாசகசாலைக்குத் தன்னுடன் அழைத்துச் சென்று வாசிக்க ஊக்குவித்தவர் என் தாத்தா சவீக முத்துச்சாமி. அவர் கையைப் பிடித்துக்கொண்டு போன நான், பிறகு தனித்துப் போகத் தொடங்கினேன். ஒரு பெண் குழந்தையாக எனக்குத் தடையின்றி கிடைத்த அந்த அனுபவங்களால்தாம் என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறியது.
அந்த வாசகசாலை மதுரை நரிமேடு பகுதி திமுக தொண்டர்களால் நடத்தப்பட்டு வந்தது. அந்தப் பகுதி பொதுமக்களும் அங்கு வந்து அன்றாட நாளிதழ்களை வாசித்துச் செல்வார்கள். அந்த இடத்தில் அரசியல் பேசும்போது நானும் எதையாவது பேசுவேன். என்னைச் சுற்றிப் பொது விவாதம் நடைபெற்றால் அதில் என்னை இணைத்துக்கொள்ளாமல் இருக்க முடிந்ததே இல்லை.
நரிமேடு அறிஞர் அண்ணா வாசகசாலையில் ஆறேழு பேர் மட்டுமே உட்கார முடியும். பாதிச் சுவருக்கு மேல் மூங்கில் தட்டி கட்டப்பட்டிருக்கும் . அதன் வாசலிலும் ஆள்கள் உட்கார்ந்திருப்பார்கள். என் வயது சிறுமிகளும் அங்கே வந்ததில்லை; சிறுவர்களும் வந்ததில்லை.
பெரியாருடனான சந்திப்பு
நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். மதுரையில் அம்சவள்ளி உணவு விடுதியில் திராவிடர் கழகக் குடும்ப விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியார் வருகை தர இருந்தார். நானும் பாட்டியும் வழக்கம்போல் முன்பே அங்கே சென்றுவிட்டோம். நல்ல கூட்டம். பெரியார் இன்னும் வரவில்லை. சிலர் என்னிடம் ஏதோ கேட்க, நானும் பதில் சொல்ல, எல்லாரும் என் பேச்சை ஆர்வமாகக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். என்னை ஒரு மேஜை மீது தூக்கி வைத்து, ஒவ்வொரு கேள்வியாக எழுப்பி பதில்களைக் கேட்டு ரசித்தார்கள்.
பெரியார் வந்தவுடன், நான் பேசிய விஷயத்தைச் சொன்னார்கள். அதைக் கேட்டு மகிழ்ச்சியாகச் சிரித்தார் பெரியார். வாஞ்சையுடன் என்னை அவர் அருகில் அழைத்து நிறுத்திக்கொண்டார். திராவிடர் கழகத்து மேடைகளில் முழங்கப்படும் கடவுள் மறுப்பு வாசகங்களை நான் பெரியார் முன்னால் தெளிவாகக் கூறினேன். உடனே நண்பரை அழைத்து ஒரு போட்டோ எடுக்கச் சொன்னார். அப்போது பெரியாருடன் படம் எடுக்க ஆறு ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால், அவரே சொன்னதால் அந்தப் படம் இலவசமாக எடுக்கப்பட்டது. இன்று வரை அந்தத் தருணத்தைப் போல் இன்னொரு தருணம் என் வாழ்வில் இல்லை!
கொண்டாட்டமும் விமர்சனமும்
மதுரையில் ஒரு பிரபலமான பள்ளியின் மாணவி நான். ஆசிரியர்களுக்குப் பிடித்த மாணவி. ஆனால், எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை மட்டும் அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எப்படியாவது எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டாக்க வேண்டும் என்று முயன்றார்கள். ஆனால், முடியவில்லை. படிப்பிலும் மற்ற விஷயங்களிலும் நான் சிறப்பாகச் செயல்பட்டதால், அவர்களால் என்னை ஒதுக்கவும் முடியவில்லை.
பள்ளி சார்பாகப் பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு, பள்ளிக்குப் பெருமை தேடித் தந்தேன் என்பதால், அவர்கள் எனக்காக ஜெபிக்கத் தொடங்கினார்கள். ஒருமுறை காலை பிரார்த்தனையில், 'ஓவியாவுக்கு நல்ல புத்தி கொடுங்கள் ஆண்டவரே' என்று ஜெபித்தார்கள். நான் திடுக்கிட்டேன். பிற மாணவிகள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தது இன்றும் நினைவில் நிற்கிறது. ஒரே நேரத்தில் ஆசிரியர்களால் கொண்டாடப்படும் மாணவியாகவும் விமர்சிக்கப்படும் மாணவியாகவும் இருந்தது அவர்களுக்கே புதிராகத்தான் இருந்தது! இந்தச் சமுதாயத்தை நான் எப்படி உறுதியாக எதிர்கொள்வது என்பதை நான் அப்போதே பயிற்சியெடுத்துக்கொள்ள இந்த அனுபவங்கள் உதவின. இன்று வரை என்னைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. என் வாழ்வு பற்றிய ஒரு பேருண்மையை அவை எனக்கு உணர்த்தின. ஒரு பெருங்கூட்டத்தின் பின் என்னால் போக முடியாது. எனக்குப் பின்னால் ஒரு பெருங்கூட்டம் எப்போதும் வராது.
கட்டுரையாளர், எழுத்தாளர், சமூக ஆர்வலர்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago