உலகின் மிகப் பழமையான எகிப்து, மெசபடோமியா, சீனா போன்ற நாடுகளின் நாகரிகங்களைப் போன்றே மிகவும் தொன்மையானது சிந்து சமவெளி நாகரிகம். கி.மு. 3000க்கும் கி.மு. 2500க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் உச்ச நிலையில் இருந்த நாகரிகம் இது. இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து நதியை ஒட்டிய பகுதிகளில் செழிப்புடன் இருந்தது இந்த நாகரிகம்.
ஒருசில காரணங்களால் இந்த நாகரிகம் மிக வேகமாக அழிந்துவிட்டது. இங்கு வாழ்ந்த மக்கள், மொழி ஆகியவற்றைப் பற்றிய உறுதியான தகவல் கிடைக்கவில்லை. பல்வேறு ஆய்வாளர்களும் பலவிதமாகக் கூறிவருகிறார்கள். தொல்லியல் ஆய்வுகளில் கண்டறியப்பட்ட ஏராளமான முத்திரைகளில் காணப்படும் மொழியையும் அதன் குறியீடுகளையும் இன்னமும் வாசிக்க முடியவில்லை.
சிந்து சமவெளிப் பகுதியில் கி.மு. 6000-வது ஆண்டிலேயே மக்கள் குடியேற்றங்களும், சிறுசிறு நகரங்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. பலுசிஸ்தானில் உள்ள மெஹெர்கர் பகுதி, ஹரப்பா ஆகியவை சுதந்திரமான நிர்வாகம் மற்றும் தன்னிறைவான பொருளாதாரம் கொண்ட நகரங்களாக இருந்தன.
சிந்து சமவெளி மிகவும் பெரிதாக இருந்தது. சுமார் 13 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. இங்கே சிறிதும் பெரிதுமான 200க்கும் மேற்பட்ட ஊர்களும், 6 மிகப் பெரிய நகரங்களும் இருந்தன. இவை அமைந்திருக்கும் பாங்கைப் பார்க்கும்போது நல்ல வளர்ச்சிபெற்ற பகுதியாக இது இருந்திருப்பது தெரிகிறது. சமூக ஒருங்கிணைப்பு கொண்ட, ஒரே நிர்வாகத்தின் கீழ் இவை அமைந்திருந்ததையும் உணர முடிகிறது.
சமயம்
சமயச் சடங்குகளோடு தொடர்புடைய அல்லது வழிபாட்டுத் தலங்கள் என்று சொல்லக்கூடிய கட்டிடப் பகுதிகள் எதுவும் தொல்பொருள் ஆய்வில் கண்டறியப்படவில்லை. ஆனால், சிறிய உருவச் சிலைகள் மற்றும் முத்திரைகளில் காணப்படும் உருவங்கள், காட்சிகளில் பெண் தெய்வ வழிபாடு, லிங்க வழிபாடு, பசுபதி, பலி பீடங்கள் போன்றவை காணப்படுகின்றன. இவற்றை வைத்து, தற்கால இந்து சமய வழிபாட்டு முறைகள் சிந்து சமவெளி காலத்திலேயே தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நகரஅமைப்பு
சிந்து சமவெளி நாகரிகத்தில் உயர் நுட்பம் வாய்ந்த நகர அமைப்பு காணப்படுகிறது. இதில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உள்ளூராட்சி அமைப்பு மற்றும் நகரத் திட்டமிடல் அறிவு நிலவியதைக் காண முடிகிறது. மொஹஞ்சதாரோ, ஹரப்பா மற்றும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ராக்கிகர்ஹி போன்ற முக்கிய நகரங்களின் தெருக்கள் சத்தம், துர்நாற்றம், திருடர் தொல்லை போன்றவை இல்லாமலிருந்தன. நகரங்களில் வீடுகள் தனியாகவோ மற்ற வீடுகளுடன் கூட்டாகவோ கிணறுகளில் இருந்து நீர் பெற்றன. குளிப்பதற்குத் தனியான அறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
கழிவு நீர், வீடுகளில் இருந்து தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மூடிய கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டது. இந்தக் கழிவு நீரகற்றல் மற்றும் வடிகால் அமைப்பு முறைகள் சமகால மத்தியக் கிழக்கு நாடுகளில் காணப்படுபவற்றைக் காட்டிலும் திறன் மிக்கவையாக
இருந்தன. தற்கால இந்தியா, பாகிஸ்தானில் உள்ள சில பகுதிகளில் தற்போது காணப்படுவதைக் காட்டிலும் இவை சிறந்ததாக விளங்கின.
கட்டிடக்கலை
தானிய சேமிப்புக் கிடங்குகள், களஞ்சியத் தொகுதிகள், செங்கல் கட்டுமான மேடைகள் மற்றும் பாதுகாப்புச் சுவர்கள் போன்ற அமைப்புகள் மூலம் கட்டிடக் கலையின் உயர் தரம் பற்றி அறிய முடிகிறது. மெசபடோமியா, எகிப்து போன்ற நகரங்களில் காணப்படுவன போன்ற பிரம்மாண்டமான சின்னங்கள் எதுவும் இங்கே கண்டறியப்படவில்லை. அரண்மனைகளோ, கோயில்களோ இருந்ததற்கான உறுதியான சான்றுகளோ, அரசர்கள், படைகள், சமய குருமார்கள் போன்றவர்கள் இருந்ததற்கான தகவல்களோ கிடைக்கவில்லை.
சமுதாயம்
பெரும்பாலான நகரவாசிகள் வணிகர்களாகவும் கைவினைக் கலைஞர்களாகவும் இருந்ததாகத் தெரிகிறது. சில வீடுகள் மற்றவற்றைக் காட்டிலும் பெரியவையாகக் காணப்படுகின்றன. பொதுவாக
இந்த இடத்தின் அமைப்பைப் பார்க்கும்போது சிந்து சமவெளி நகரம் சமத்துவச் சமுதாயமாக விளங்கியதாகவே தெரிகிறது.
வீழ்ச்சி
கி.மு. 1800-ம் ஆண்டிலிருந்து இந்த நாகரிகம் படிப்படியாக வீழ்ந்ததற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கி.மு. 1700-ம் ஆண்டு அளவில் பெரும்பாலான நகரங்கள் அழிந்துவிட்டன. ஆனால் இந்த நாகரிகம் உடனடியாக மறைந்துவிடவில்லை. இவை கி.மு. 1000 முதல் 900 வரையிலுமாவது இருந்திருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன.சிந்துவெளிப் பண்பாட்டின் வீழ்ச்சிக்கு இயற்கைச் சீற்றங்கள் காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த இடம் மிக அதிகக் குளிராகவும், வறண்டதாகவும் மாறியதாகக் கூறப்படுகிறது. ஆரியர், துருக்கியர், முகலாயர் போன்றோர் இந்து குஷ் மலைப் பகுதியில் உள்ள கணவாய்கள் வழியாகத் தெற்காசியாவுக்குள் வந்த பாதையில்தான் இந்தப் பகுதி உள்ளது. இவர்களின் படையெடுப்புகளும் இதன் வீழ்ச்சிக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இக்கூற்றை நிரூபிக்கும் வகையில் போரில் இறந்த அடையாளங்களுடன் பலரின் உடல்கள் புதைகுழிகளில் காணப்பட்டன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago