இதயத்தைப் பாதிக்கும் மற்ற நோய்களைப் பற்றிப் பார்ப்போமா? உடலின் மற்ற உறுப்புகளைப்போல இதயமும் நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்படலாம். ஏற்கெனவே ஏதாவது குறை இருக்கும் இதயத்தைத்தான் பாக்டீரியா கிருமிகள் பாதிக்கும். இதயத்தின் மேல், கீழ் அறைகளுக்கு இடையில் வால்வுகள் உள்ளன. இவற்றின் வழியாகத்தான் மேல் அறைகளிலிருந்து கீழ் அறைகளுக்கு ரத்தம் செல்லும். இவை மூடித் திறக்கும் அமைப்பு கொண்டவை. இதில் இடதுபுறம் உள்ளது மைட்ரல் வால்வு. இது சுத்திகரிக்கப்பட்ட நல்ல ரத்தம் மேலிருந்து கீழறைக்கு வரும் வழியில் உள்ள அமைப்பு.
குழந்தைப் பருவத்தில் சிலருக்கு வழியில் ருமாட்டிக் மூட்டுவலி ஏற்படலாம். இந்த மூட்டுவலி மைட்ரல் வால்வைப் பாதித்து அதைச் சுருங்கச் செய்துவிடும். இதனால், சுத்த ரத்தம் மேலிருந்து கீழறைக்கு வந்து மகா தமனி வழியாக மூளைக்கும் மற்ற பாகங்களுக்கும் செல்வதில் தடை ஏற்படும். ஏற்கெனவே மூட்டுவலியால் பாதிப்படைந்து ஸ்கார்ஸ் என்கிற தழும்புகள் உள்ள வால்வில் பாக்டீரியா, பூஞ்சை போன்ற கிருமித் தொற்றுகள் ஏற்பட்டால் திராட்சைக் குலைகள் போன்று முடிச்சு முடிச்சாகத் தேவையில்லாத திசு வளர்ச்சி ஏற்படும். கடுமையான காய்ச்சல் வரும். இந்தத் திசு வளர்ச்சி இடம்பெயர்ந்து உடலின் வேறு இடங்களில் அடைப்பை ஏற்படுத்தக்கூடும்.
தொற்று காரணமாக உடலின் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதைச் சரிசெய்ய பெனிசிலின் போன்ற ஆன்டிபயாடிக்கை நேரடியாக சிரைகள் வழியாகத் தகுந்த அளவில் கொடுக்கவேண்டும். இப்போது இந்தச் சிகிச்சைக்காக மிகச் சக்தியுள்ள பல மருந்துகள் வந்துவிட்டன.
இந்த ருமாட்டிக் மைட்ரல் ஸ்டீனொஸிஸ் என்கிற காரணத்தைத் தவிர ஒருவருடைய இதயத்தில் பிறவியிலேயே சில குறைபாடுகள் இருந்தாலும் இந்த நோய்த்தொற்று ஏற்படும். உதாரணத்துக்கு இதயத்தின் கீழ் அறைகளின் தடுப்புச் சுவராக விளங்கும் வென்ட்ரிகுலார் செப்டத்தில் ஒரு ஓட்டை இருந்து அதன்மீதும் இந்த நோய்த் தொற்று உண்டாகக்கூடும்.
இதில் வெஜிடேஷன் என்கிற நோய்த் தொற்றினால் ஏற்படும் திசு இடம்பெயர்ந்து நுரையீரலுக்குப் போய் ரத்த நாளத்தை அடைக்கும் மிகப்பெரிய அபாயமும் உண்டு. ஆனால், இந்தத் திசு வளர்ச்சி மிகச் சிறியதாக இருக்கும்போதே அதாவது தொடக்கத்திலேயே அல்ட்ரா சவுண்டு கருவி மூலம் கண்டுபிடித்து வேண்டிய மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கும்வகையில் இப்போது மருத்துவ வசதிகள் வந்துவிட்டன.
அடுத்ததாக மிக நுண்கிருமிகளான வைரஸ்கள் எப்படி இதயத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்ப்போம். இந்த வைரஸ்கள் இதயத்தசையைத் தாக்குபவை. உதாரணமாக சின்னம்மை வந்தால் இதயம் பாதிக்கப்படலாம். டிப்தீரியா என்கிற தொண்டை அடைப்பான் நோய் வந்தாலும் குணம் அடைந்தபின் அதனால் இதயம் பாதிப்படைந்த நோயாளிகளைக் கண்டிருக்கிறேன். இவற்றுக்கெல்லாம் தனிப்பட்ட சிகிச்சை இல்லை. நல்ல ஓய்வும் சத்துணவும்தான் நாளடைவில் குணப்படுத்தும். ஏதாவது பக்க விளைவுகளோ பின்னடைவுகளோ ஏற்பட்டால் அதற்கு உரிய சிகிச்சை மட்டுமே அளிக்கப்படும். அடுத்து குடலில் ஏற்படக்கூடிய காக்சாகி பி வைரஸ் தொற்று இதயத்தைப் பாதிக்கலாம். நான் முன்பு கூறியவாறு ஓய்வும் சத்துணவும்தான் குணப்படுத்தக்கூடிய மருந்துகள்.
ஒரு சிலருக்கு இதயத்தைச் சுற்றி மூடியிருக்கும் பெரிகார்டியம் என்கிற இரண்டு மடிப்புகளாக இருக்கும் பை போன்ற உறையில் நோய்த் தொற்று ஏற்படலாம். அதன் இரண்டு சுவர்களுக்கு இடையில் பெரிகார்டியல் திரவம் இருக்கிறது. இந்தத் திரவத்தின் அளவு நோய்த் தொற்றால் அதிகரிக்கலாம். அல்லது இந்த இடத்தில் சீழ் பிடிக்கலாம். இதை ஒரு ஊசிமூலம் உறிஞ்சி எடுத்து சிகிச்சை அளிப்பார்கள். இவற்றை எல்லாம் குணப்படுத்த மருந்துகள் இருக்கின்றன.
இவை தவிர கொரோனரி நாள வியாதி போன்ற காரணமே இல்லாமல் இதயம் விரிந்து தசைகள் தளர்ந்து தழும்பாக மாறும் ஒரு வியாதி உண்டு. இதன் பெயர் கார்டியோ மயோபதி. இது ஏன் சிலருக்கு ஏற்படுகிறது, காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. சில மருந்துகளை நீண்ட நாள் தொடர்ந்து எடுத்துக்கொள்வதாலும் இதய நோய் ஏற்படலாம். இதனால், இதயம் வலுவிழந்து மூச்சுத் திணறலும் கால்களில் நீர் சேர்ந்து வீக்கமும் ஏற்படும். சில நேரம் மருந்துகளால் நீர் சேர்வதைக் குறைத்து வீக்கத்தை வடியச் செய்து மூச்சுத் திணறலைக் குறைக்கலாம். அல்லது முற்றிலுமாகக் குணமாக்கக்கூட முடியும்.
இதயத்தசைகளின் இயக்கத்தை அதிகப்படுத்தும் ஒரு மருந்து உண்டு. மாரடைப்பு நோயால் ரத்த அழுத்தம் மிகக் குறைந்து உயிருக்கு ஆபத்து என்கிற நிலையில் இந்த மருந்துகள் கொடுத்து நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும். இந்த மாதிரி நிலையில் டோபமைன் என்கிற மருந்தை குளூக்கோஸ் சலைனில் கலந்து இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து சிரை வழியாக ரத்த ஓட்டத்துள் செலுத்துவார்கள். இது கொஞ்சம் கொஞ்சமாக உடலில் சேர்ந்து இதயத் தசையை சரியான முறையில் இயங்கச் செய்யும். நோயாளியை மிகக் கவனமாகக் கண்காணித்துத் தேவைப்பட்டால் மீண்டும் இதே மாதிரி செலுத்தவேண்டி வரும் அறிகுறிகள் தென்படவில்லை என்றால் மீண்டும் செய்ய அவசியமில்லை. எத்தனை நாளைக்கு இந்த ரத்த அழுத்தக் குறைவு இருக்கும். சிகிச்சைசெய்தால் சரியாகிவிடுமா இல்லை மீண்டும் வருமா எப்போது வரும் என்றெல்லாம் யாராலும் சொல்ல முடியாது.
(மறைந்த டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.)
முந்தைய அத்தியாயம் > ஆபத்தில் உதவும் பேஸ்மேக்கர்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago