ஜூன் 23, வில்மா ருடால்ஃப் பிறந்தநாள்: உலகின் அதிவேகமான பெண்!

By ஸ்நேகா

வில்மா ருடால்ஃப் யாரென்று தெரியுமா? அவர் தடகள வீராங்கனை. ஆப்பிரிக்க அமெரிக்கர். அமெரிக்காவுக்காக இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வாங்கிக் கொடுத்தவர்.

வில்மா சாதாரணமானவர் அல்ல. 4 வயதில் அவருடைய இடது கால் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டது. இனிமேல் வில்மாவால் நடக்கவே முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். ஆனால், வில்மாவின் அம்மா மட்டும், உன்னால் நடக்க முடியும் என்று உறுதியாகச் சொன்னார். அம்மாவின் வார்த்தைகளை முழுமையாக நம்பினார் வில்மா.

வில்மாவின் குடும்பம் வசதியானதல்ல. அவர் அம்மா வேலைக்குச் சென்றால்தான் பிள்ளைகளால் சாப்பிட முடியும். வில்மாவின் அக்கா, அண்ணன்களிடம் ஒரு மருந்தைக் கொடுத்து, தினமும் மூன்று வேளை வில்மாவின் காலில் தடவும்படி சொல்லிவிட்டுச் செல்வார். அண்ணன்களும் அக்காக்களும் வில்மா விரைவில் நடக்க வேண்டும் என்பதற்காக ஒரே நாளில் பலமுறை மருந்தைத் தேய்த்து, காலுக்குப் பயிற்சி கொடுத்தனர். விரைவிலேயே செயற்கைக் காலால் நடக்கும் நிலைக்கு முன்னேறினார் வில்மா. மீண்டும் தெரபியும் பயிற்சியும் தொடர்ந்தன. மருத்துவரால் கைவிடப்பட்ட வில்மா, 12 வயதில் தன் குடும்பத்தினரால் சொந்தக் காலில் நடக்க ஆரம்பித்துவிட்டார். விரைவிலேயே அதிவேகமாகவும் அவரால் ஓட முடிந்தது. திடீரென்று ஒரு காய்sசல் வந்து, வில்மாவைச் சிறிது காலத்துக்கு முடக்கிவிட்டது. அதிலிருந்து மீண்டு, அக்கம்பக்கத்துச் சிறுவர்களுடன் பந்தயம் வைத்து ஓட ஆரம்பித்தார் வில்மா.

16 வயதில் மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வில்மாவுக்குக் கிடைத்தது. முதல் போட்டியிலேயே வெண்கலப் பதக்கத்தை வென்றார்! எல்லாரும் வெண்கலப் பதக்கத்தைத் தொட்டுப் பார்த்ததால், அது பொலிவிழந்தது. அடுத்த முறை தங்கப் பதக்கம் வாங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டார் வில்மா.

20 வயதில் ரோம் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு, 3 தங்கப் பதக்கங்களைக் குவித்தார். 1960ஆம் ஆண்டில் ‘உலகிலேயே அதிவேகமாக ஓடக்கூடிய பெண்’ என்கிற பெயரையும் பெற்றார்!

நடக்க மாட்டார் என்று சொல்லப்பட்ட வில்மா, அதிவேகமாக ஓடக்கூடியவராக மாறியதோடு, தன் நாட்டுக்கும் பெருமை தேடித்தந்தார். வரலாற்றிலும் இடம்பெற்றுவிட்டார்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE