நடுக்கடலில் சுனாமி தாக்கம் வருமா?

By ஆதன்

ஒரு காலத்தில் இந்தோனேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில்தாம் சுனாமி தாக்குதல் இருந்ததாக நாம் கேள்விப்பட்டிருந்தோம். திடீரென்று 2004ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கிவிட்டது. அந்தப் பேரழிவுக்குப் பிறகே ‘சுனாமி’ என்றால் என்ன என்பதை நாம் முழுமையாக அறிந்துகொண்டோம்.

கடல் மூலம் ஏற்படும் ஆபத்துகளிலேயே மிகப் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தக்கூடியது சுனாமிதான். 2004ஆம் ஆண்டு 14 நாடுகளைச் சேர்ந்த இரண்டரை லட்சம் மக்களைப் பலி வாங்கிவிட்டது.

சுனாமி ஏன் உருவாகிறது?

நிலத்தில் மட்டுமன்றி, கடலுக்கு அடியிலும் பூகம்பங்கள் உருவாகின்றன. அதன் விளைவாகத்தான் சுனாமிகளும் தோன்றுகின்றன. எல்லாப் பூகம்பங்களும் சுனாமியைத் தோற்றுவிப்பதில்லை. மிகக் கடுமையான பூகம்பங்கள் மட்டுமே சுனாமியை உருவாக்குகின்றன.

சுனாமி எப்படி இருக்கும்?

கடலுக்கு அடியில் பூகம்பம் நிகழும் இடத்திலிருந்து பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் இருக்கும் நிலப்பகுதி சுனாமியால் தாக்கப்படலாம். அப்படி என்றால் சுனாமியின் ஆற்றல் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

சுனாமி வரும்போது கடல் நீர் 10 முதல் 30 மீட்டர் உயரம் வரை மேலே செல்லும். அதிவேகத்தில் நிலத்துக்குள் புகுந்து, அனைத்தையும் மூழ்கடித்துவிடும். பிறகு வந்த வேகத்தில் கடலுக்குள் நீரை இழுத்துச் செல்லும். இப்படி வந்து செல்லும்போது உயிர்ச் சேதத்தையும் பொருள் சேதத்தையும் அதிக அளவில் ஏற்படுத்திவிடும்.

சுனாமி வரும்போது எப்படித் தப்பிக்கலாம்?

சுனாமி வருவதற்கு முன்பு கடல்நீர் உள்வாங்கும். அப்போதே ஆபத்தை உணர்ந்து வெகு தொலைவுக்குச் சென்றுவிட வேண்டும். ஆனால், மக்கள் கடல் உள்வாங்குவதை அதிசயம் என்று நினைத்துப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதனால்தான் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன.

நடுக்கடலில் கப்பலுக்கு ஆபத்து ஏற்படாதா?

சுனாமி வரும்போது நிலத்திலேயே இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதே, நடுக்கடலில் இருக்கும் கப்பல் என்னவாகும் என்று தோன்றுகிறதா? நடுக்கடலில் இருக்கும் கப்பல்களுக்கு சுனாமியால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. கப்பலில் இருப்பவர்களால் சுனாமி வந்ததைக்கூட உணர இயலாது. காரணம், நிலத்தில் 10 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் ஏற்படும் அலைகள், நடுக்கடலில் ஓர் அடி உயரத்துக்குத்தான் ஏற்படுகின்றன. அதனால் நடுக்கடலில் இருக்கும் கப்பல்களுக்கு சுனாமியால் பாதிப்பு இல்லை. சுனாமி நிலத்தில் மட்டும்தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாகவே சுனாமி வருவது முன்கூட்டியே தெரிந்தால், துறைமுகத்தில் இருக்கும் கப்பல்களை நடுக்கடலுக்குள் கொண்டு சென்றுவிடுகிறார்கள்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE