இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என கோலிவுட்டில் சுறுசுறு தேனீயாக வலம் வந்துகொண்டிருப்பவர் சுந்தர்.சி. ’அரண்மனை 3’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது, ‘காபி வித் காதல்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இன்னொரு பக்கம் பல படங்களில் நடித்து வருகிறார். ஜெய்யுடன் அவர் இணைந்து நடித்துள்ள ‘பட்டாம்பூச்சி’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இந்து தமிழ் திசைக்கு சுந்தர்.சி அளித்த பிரத்யேகப் பேட்டி இது.
படத்தின் கதை என்ன? ஒரு சைக்கோ கில்லர் படத்துக்குப் ‘பட்டாம்பூச்சி’ என்கிற தலைப்பு ஏன்?
எண்பதுகளின் இறுதியில் சென்னையில் நடக்கும் ஒரு சைக்கோ த்ரில்லர் கதை. இன்று ரசிகர்கள் சில ஜானர்களை விரும்பிப் பார்க்கிறார்கள். அவற்றில் இதுவும் ஒன்று. இரண்டு முதன்மைக் கதாபாத்திரங்களைக் கொண்டு கதை நகரும். முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை தலையை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திருப்ப முடியாது. அப்படிப்போகும் கதை. போலீஸ் அதிகாரி, சைக்கோ கொலைகாரன் ஆகிய இரண்டு பேரில், யார் ஜெயிக்க வேண்டும், யார் தோற்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் ரசிகர்களுக்கு பெரிய சவால் காத்திருக்கிறது. ‘பட்டாம்பூச்சி’ என்கிற தலைப்புக்கு கதைக்குள் முக்கியமான இடம் இருக்கிறது. இப்படியொரு தலைப்பு வைக்க முன்னோர்கள்தான் வழிகாட்டியிருக்கிறார்கள். ரோஜா பூ என்பது எத்தனை மென்மையானது, ரொமாண்டிக்கானது! பாரதிராஜா சார், ‘சிகப்பு ரோஜாக்கள்’ என்று தலைப்பு வைத்தார் அல்லவா? அந்தப் பாணியைத்தான் தலைப்பு வைக்கப் பயனபடுத்திகொண்டோம்.
ஒரு முன்னணிக் கதாநாயக நடிகரை சைக்கோ கில்லராக நடிக்க வைக்க என்ன காரணம்?
சைக்கோ கில்லர் கதாபாத்திரத்தை ஒரு குணச்சித்திர நடிகரோ, அல்லது ஒரு வில்லன் நடிகரோ பண்ணுவதைவிட, ஒரு நாயக நடிகர் அதைச் செய்தால், வித்தியாசமாக இருக்கும். ரசிகர்களுக்கும் அது புதிய அனுபவமாக இருக்கும். இதைவிட ஒரு முக்கிய காரணம் உண்டு. ரசிகர்கள் படத்துடன் ஒன்றவேண்டுமானால், அந்த சைக்கோ கில்லர் கேரக்டரை வெறுக்காமல் பார்க்க வேண்டும். அவன் செய்யும் குற்றங்களையும் அவனது செய்கைகளையும்தான் வெறுக்க வேண்டுமே தவிர, அவன் ஏன் அப்படி ஆனான் என்கிற காரணம் வெறுப்புக்குரியதாக இருக்கக் கூடாது. அப்படியொரு அழுத்தமான காரணத்தை ஒரு நாயக நடிகரின் மேல் பொருத்தும்போது அது எடுபடும். இதற்கு யார் சரியாக இருப்பார் என்று யோசித்தபோது ஜெய் தான் சரியான சாய்ஸ் என்கிற முடிவுக்கு வந்தோம். ஆனால், அவர் ஒப்புக்கொள்ள வேண்டுமே? அவருக்கு இயக்குநர் பத்ரி முதலில் கதையைச் சொன்னார். ஜெய், துள்ளிக் குதித்து ஒப்புக்கொண்டது மட்டுமல்ல; அந்தக் கேரக்டருக்கு தேவைப்படும் பல மேனரிசங்களை தன்னுடைய கடும் உழைப்பால் கொண்டுவந்திருக்கிறார். வசனம் பேசிக்கொண்டே கழுத்தைச் சொடுக்கி அவர் ஷாட்டிலும் மேனரிசம் செய்தபோது நரம்புப் பிரச்சினை வந்துவிடுமோ என்று மிகவும் பயந்தோம். அவர் எடுத்துள்ள ‘ரிஸ்க்’ அவருக்கு நல்ல பெயர் கொண்டுவந்து சேர்க்கும்.
நடிகர் ஜெய் முகம் என்பது குழந்தைத்தனமாக இருக்கும். அவருடைய கேரக்டர் எப்படிப்பட்டது?
‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தில் கமல் சாரை நீங்கள் வில்லன் என்று சொல்ல முடியாது. ‘வாலி’ படத்தில் அண்ணன் அஜித்தை நீங்கள் வில்லன் என்று சொல்ல முடியாது. அப்படித்தான் இந்தப் படத்தில் ஜெய் ஏற்றிருக்கும் கேரக்டரும். பிரம்மாண்டமான உடம்புக்குள் ஒரு வில்லன்,கொலைகாரன் இருப்பதாகப் பார்த்துப் பழகிவிட்டோம். அதுவே குழந்தை மூஞ்சியில் ஒரு கொலைகாரனைக் காட்டும்போது.. இவன் எதற்குக் கொலைகாரனாக அதுவும் சீரியல் கில்லராக மாறினான் என்கிற எதிர்பார்ப்பு ஏற்படும் இல்லையா? அதற்காகத்தான் ஜெய். ஒவ்வொரு நடிகருக்கும் சில கதாபாத்திரங்கள் அவர்களுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாதா ஒன்றாக அமையும். அதைப் புரிந்துகொண்டு அந்தக் கதாபாத்திரத்தில் புகுந்து விளையாடிருப்பார்கள். ஜெய் இந்தப் படத்தில் தனது முந்தைய படங்களின் அனைத்து பிம்பங்களையும் மறந்துவிட்டு, தன் முன்னால் கேரமா இருப்பதையும் மறந்துவிட்டு, இதில் வேறொரு ஜெய்யாக மிரட்டியிருக்கிறார். செட்டில் என் கண்கள் முழுவதும் அவர் மீதுதான் இருந்தது. அவர் அறிமுகமாகிற காட்சியில் தொடங்கி கிளைமாக்ஸ் வரை அந்தக் கேரக்டருக்காக மாற்றிகொண்ட தன்னுடைய உடல்மொழியில், நடிப்பிலிருந்து அவர் துளிகூட பின்வாங்கவில்லை.
முதல் முறையாக, நீங்கள் நடித்துள்ள படம் நகைச்சுவை இல்லாமல் வருகிறது போலிருக்கிறதே?
ஆமாம்! இதுபோன்ற படங்களில் நகைச்சுவை என்பது ‘மூட்’ என்பதையே மாற்றிவிடும். ரசிகர்கள் கதையை விட்டு விலகிச் என்றுவிடக் கூடாது என்றுதான் மிக கவனமாக நகைச்சுவையைத் தவிர்த்திருக்கிறோம். இமான் அண்ணாச்சி படத்தில் இருக்கிறார். அவரையும் கூட ஒரு சீரியஸான ரோலில்தான் நடிக்க வைத்திருக்கிறோம்.
போலீஸ் வேடம் உங்களுக்கு புதிதல்ல. இதில் ஏற்றுள்ள போஸீஸ் வேடத்தில் என்ன புதுமை உள்ளது ?
ரவுடி அல்லது போலீஸ் இந்த இரண்டில் ஏதாவது ஒரு கேரக்டருக்குத்தான் என்னைக் கூப்பிடுவார்கள். அது மாற வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தில் ஏற்றுள்ள போலீஸ் அதிகாரி வேடம் கொஞ்சம் சிக்கலானது. அடிதடி, ஆக்ஷன் என்பதற்கெல்லாம் இரண்டாவது இடம்தான். புத்திசாலித்தனம்தான் கேரக்டருக்கு முக்கியமான பலமாக இருக்கும். எனக்கும் கில்லருக்கும் இடையில் நடப்பது முழுக்க முழுக்க ‘மைண்ட் கேம்’ ஆக இருக்கும். ஒரு காட்சியில் கூட காக்கி யூனிஃபார்ம் போட்டிருக்க மாட்டேன்., போலீஸாக இருந்தால் இவனை மாதிரி இருக்கணும் என்று எண்ண வைத்துவிடும் என்னுடைய கேரக்டர்.
எண்பதுகளில் கதை நடக்கிறது என்றால், அந்தக் காலகட்டத்தைத் திரையில் கொண்டுவர என்ன செய்தீர்கள்?
சென்னை திருவல்லிக்கேணியில் எண்பதுகளின் சென்னையை நினைவுபடுத்தும் பல இடங்கள் உள்ளன. ஆனால், அங்கே படப்பிடிப்பு நடந்த அனுமதியில்லை. இதனால் முழுவதும் புதுச்சேரியில் படமாக்கினோம். அப்படியும் கூட பல நவீன சாதனங்கள் காட்சிகளில் வந்துவிட்டதால், அவற்றையெல்லாம் டி.ஐ., கிராஃபிக்ஸ் மூலம் ‘எரேஸ்’ செய்துவிட்டோம். எண்பதுகளின் மவுண்ட் ரோட், பல்லவன் பேருந்துகள், கார்கள், வாகனங்கள், ஜீப்கள் என ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறோம். இதை கிராஃபிக்ஸில் உருவாக்கவே 8 மாதங்கள் பிடித்தது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago