சென்னையில் 3 நாள் கொரிய திரைப்பட விழா

By ஆர்.சி.ஜெயந்தன்

உலகின் சிறந்த ஜனநாயக நாடுகளில் ஒன்று தென்கொரியா. இந்தியாவைப் போலவே அதன் திரைப்படத்துறையின் சந்தையும் மிகப்பெரியது. கொரிய வெகுஜனத் திரைப்படங்களுக்கும் அது உருவாக்கும் உலகத் திரைப்படங்களுக்கும் இங்குள்ளது போலவே பெரும் வேறுபாடுகள் உள்ளன. உண்மையில் கொரிய திரைப்பட உலகம் மறுமலர்ச்சி கண்டது 1980களில்தான். 1984ஆம் ஆண்டு, தென் கொரிய அரசு திரைப்படத்துறை மீதான தணிக்கையில் தேவையான விலக்குகளை வழங்கியதுடன் திரைப்படத் துறையின் சந்தை இயங்குமுறை, வரி விதிப்பு ஆகியவற்றில் இருந்த கடும் கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது. அடுத்து வந்த 1986ஆம் ஆண்டின் சட்டத் திருத்தம், தென் கொரியாவில் வெளிநாட்டுத் திரைப்படங்களை இறக்குமதி செய்ய அனுமதித்தது. பின்னர் 1988ஆம் ஆண்டில் வெளிநாட்டு படங்களுக்கான கட்டுப்பாடுகளை முழுவதும் நீக்கியது. மேலும் ஹாலிவுட் படத் தயாரிப்பு நிறுவனங்கள் தென் கொரியாவில் தங்களது அலுவலகங்களைத் தொடங்கவும் அனுமதித்தது.

இந்தத் தங்கு தடையற்றச் சுதந்திரம் காரணமாக தென்கொரியப் படங்கள் சர்வதேச அளவில் கவனம் பெறத் தொடங்கின. பன்னாட்டு மின்னனு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சேம்சங், கிம் யு சியோக்கின் இயக்கத்தில் உருவான 'மேரேஜ் ஸ்டோரி' என்கிற படத்தை 1992இல் ஆங்கிலம், சீனம், ஜப்பானியம் ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியிட்டபோது தென்கொரிய சினிமாவின் திரைக்கதையாக்கம், படமாக்கலில் அதன் தொழில்நுட்ப நேர்த்தி ஆகியவை உலக அரங்கில் தெரிய வந்தன.

இதன்பின்னர் கொரிய வெகுஜன சினிமாவும் உலக சினிமாவும் ஒரேநேரத்தில் உலக திரைப்படச் சந்தைகளிலும் உலகப் படவிழாக்களிலும் பேசுபொருளாகின. 1999ஆம் ஆண்டு இயக்குநர் காங் ஜெ கியூ இயக்கத்தில் ‘வட கொரியா உளவாளி பற்றிய கதை’யைக் கொண்ட 'ஷிரி' என்கிற திரைப்படம் தென்கொரியா முழுவதும் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அந்தப் படமும் சீனம், ஜப்பானியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் டப் ஆகி வெளியானது.

இதைத் தொடர்ந்து 2003இல் வெளியான 'ஓல்ட் பாய்' என்கிற திரைப்படம் 2004ஆம் ஆண்டு கான் சர்வதேசப் பட விழாவின் போட்டிப்பிரிவில் கலந்துகொண்டு கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது. இந்தப் படத்தைப் பார்த்த குவெண்டின் டராண்டினோ உள்ளிட்ட பல ஹாலிவுட் இயக்குநர்களால் பாராட்டப்பட்டது, தென்கொரிய வெகுஜனப் படங்களின் மீதான கவனத்தைக் கூட்டியது. இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் உருவாக்கிய தாக்கத்தில் இந்தி மற்றும் தமிழ் சினிமாவில் பல காட்சிகள் வடிவமைக்கப்பட்டன. இதே ‘ஓல்டு பாய்’ 2013இல் இயக்குநர் இஸுப்பைக் லீயால் ஹாலிவுட்டில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

அதேபோல் 2006இல் வெளியான 'ஹோஸ்ட்' (2006) என்கிற தென்கொரியப் படம் 7 ஆண்டுகள் கழித்து ஹாலிவுட்டில் 'ஸ்னோவ்பியர்ஸர்' (2013) என்கிற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டதும், உலகம் முழுவதும் பைரசி டிவிடி ஆர்வலர்கள் தென்கொரியப் படங்களை சாலையோரக் கடைகளில் தேடத் தொடங்கினார்கள்.

தமிழ், மலையாள சினிமாவிலும் பிரபலமான பல தென்கொரியப் படங்களின் தாக்கத்தில் பல படங்கள் உருவாகின. பல கதாபாத்திரங்கள் எடுத்தாளப்பட்டன. இதற்கிடையில் ஆக்‌ஷன், அதீத வயலன்ஸ் என்கிற அளவுகோலில் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வெகுஜன கொரியப் படங்களுக்கு அப்பால், கொரிய உலகத் திரைப்படங்கள் உலகப் பட ரசிகர்களை எப்போதும்போல் பிரமிக்க வைத்து வருகின்றன. கொரிய உலக சினிமா என்றாலே கிம் கி டுக் தான் என்கிற காலம் கடந்துபோய்.. இன்று பல கொரிய உலகப் பட இயக்குநர்கள் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் கடந்த 2019-ல் சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்துக்கான விருதை வென்ற ‘பாராசைட்’ படத்தின் இயக்குநர் பொங் ஜுன் ஹோ.

இந்த பின்னணியில் நீங்கள் தற்கால கொரிய வெகுஜன சினிமாவையும் அதன் உலகப் படங்களையும் அணுக வசதியாக சென்னையில் 3 நாள் கொரியப் படவிழாவை ஒருங்கிணைத்துள்ளது இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன் திரைப்படச் சங்கம் (Indo Cine Appreciation Foundation). சென்னை சர்வதேசப் படவிழாவை ஒருங்கிணைத்து வரும் இச்சங்கம், சென்னையில் உள்ள கொரியக் குடியரசின் துணைத் தூதரகத்துடன் (Consulate General of the Republic of Korea in Chennai) இணைந்து இந்தப் படவிழாவைச் சென்னையில் நடத்துகிறது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலம் அருகாமையில் உள்ள ராணி சீதை அரங்கில் இன்று மாலை 7 மணிக்கு 202ஆம் ஆண்டுக்கான கொரியப் படவிழாவின் தொடக்கவிழா நடக்கிறது. இதில், தமிழ்நாடு அரசின், தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சரான தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, படவிழாவைத் தொடங்கி வைக்கிறார். கொரியக் குடியரசு சென்னைத் துணைத் தூதரகத்தின் தலைவர் குவான் யங் சியப் (Kwon Young Seup) தலைமை தாங்குகிறார். இவர்களுடன் தமிழ்த் திரையுலகிலிருந்து பூர்ணிமா பாக்யராஜ், ஐ.சி.ஏ.எஃப் துணைத்தலைவர் பி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்கின்றனர்.

ஜூன் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் இப்படவிழாவில் மொத்தம் 5 தற்காலக் கொரியப் படங்கள் ( உலக சினிமாக்கள்) ராணி சீதை அரங்கில் திரையிடப்படவுள்ளன. தொடக்க விழா திரைப்படமாக ‘அசாசினேஷன்’ (Assassination/Amsal/2015/Dir.: Dong-hoon Choi/140 min) இன்று மாலை 7 மணிக்குத் திரையிடப்படுகிறது.

அடுத்து வரும் நாட்களில் ‘தி ஃபிரெண்ட்லைன்’ (The Front Line/Go-ji-jeon/2011/Dir.: Hun Jang/133 min), ’டோங்ஜு: தி போர்ட்ரேய்ட் ஆஃப் எ பொயட்’ (Dongju: The Portrait of a Poet/Dongju/2015/Dir.: Joon-ik Lee/110 min), ‘நேம்லெஸ் கேங்ஸ்டர்: ரூல்ஸ் ஆஃப் த டைம்’ Nameless Gangster: Rules of the Time/Bumchoiwaui junjaeng: Nabbeunnomdeul jeonsungshidae/2012/Dir.: Jong-bin Yoon/134 min), ’தி ஃபேஸ் ரீடர்’ The Face Reader/Gwansang/2013/Dir.: Jae-rim Han/140 min) ஆகிய 4 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இப்படங்கள் அனைத்துமே பன்னாட்டுப் படவிழாக்களில் விருதுகளைக் குவித்தவை என்பது குறிப்பிடத் தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்