கடலின் ஆழம்? - பாடல் - அழ. வள்ளியப்பா

By அழ.வள்ளியப்பா

காட்டை விட்டுக் குள்ள நரியும்
வெளியில் வந்ததாம்.
கடலைப் பார்க்க வேண்டு மென்றே
ஆசை கொண்டதாம்
காற்று வீசும் கடற் கரைக்கு
வந்து சேர்ந்ததாம்.
கரையில் நின்றபடியே கடலை
உற்றுப் பார்த்ததாம்!

‘கடலின் ஆழம் அதிக மென்றே
எனது பாட்டனார்
கதைகள் சொல்லும் போதே எனக்குச்
சொல்லி யிருக்கிறார்.
கடலின் ஆழம் என்ன வென்றே
இந்த நேரமே
கணக்காய் நானும் அளந்து சொல்வேன்’
என்று ரைத்ததாம்!


தண்ணீர் அருகே சென்று நரியும்
நின்று கொண்டதாம்.
தனது வாலை மெல்ல மெல்ல
உள்ளே விட்டதாம்.
தண்ணீருக்குள் வாலை முழுவதும்
விட்ட உடனேயே
தரையும் அந்த வாலின் நுனியில்
தட்டுப் பட்டதாம்.


‘கடலின் ஆழம் எனது வாலின்
நீளம் தானடா!
கண்டு பிடித்து விட்டே’னென்று
துள்ளிக் குதித்ததாம்.
‘அடடா, மிகவும் ஆழம் என்று
சொல்லும் கடலையே,
அளந்து விட்டேன்’ என்றே பெருமை
அளக்க லானதாம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE