ஐந்து ரூபாய்க்கு ஐம்பது பொருள்கள்! - என். மாதவன்

By என்.மாதவன்

அந்தக் காலத்தில் எங்கள் மதூர் கிராமத்திலிருந்து மதுராந்தகம் போன்ற நகரங்களுக்குச் செல்வது மிகவும் அரிது. ஆனால், என் அண்ணன் பத்ரி, மதுராந்தகத்தில் பணி செய்ததால் தினமும் கிராமத்திலிருந்து நகரத்துக்குச் சென்றுவருவார்.

எங்கள் கிராமத்தினருக்கு நகரத்திலிருந்து வாங்கிவர வேண்டிய பொருள்களை எல்லாம் அவர்தான் வாங்கிவந்து தருவார். அவற்றில் இதயம் பேசுகிறது, கல்கி, ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளிலிருந்து எங்களைப் போன்றோருக்கான பம்பரம், கோலி, விளையாட்டுப் பொருள்கள், கல்வி தொடர்புடைய குறிப்பேடுகள், வடிவியல் பெட்டி, அளவுகோல் போன்றவையும் அடங்கும். மொத்தத்தில் அவர் எங்கள் கிராமத்தினருக்கு கொரியர் சர்வீஸ் செய்துகொண்டிருந்தார்!

எங்கள் குடும்பம் பெரியது. நான் கடைக்குட்டி. எங்கள் அப்பா, அம்மா இருதரப்பு உறவினர்களும் அவ்வப்போது வீட்டுக்கு வருவார்கள். வீட்டில் எப்போதும் நான்கைந்து பேர் சாப்பிடும் அளவுக்குச் சாப்பாடு இருக்கும். உறவினர்கள் வந்தால் உடனே கிளம்ப மாட்டார்கள். ஒரு வாரம், பத்து நாள் இருந்து சிறப்பித்துவிட்டுத்தான் செல்வார்கள். மூன்று வேளையும் சாப்பிடுகிறார்களோ இல்லையோ, மூன்று வேளையும் உபதேச மழையாகப் பொழிவார்கள்! முதல் முறை, இரண்டாம் முறை இயல்பாக இருப்போம். சில நேரம் அவர்களிடம் வேற்றுமுகம் காட்டுவோம்.

அப்படி வரும் உறவினர்கள் ஊருக்குக் கிளம்பும்போது காசோ ரூபாயோ கொடுத்துவிட்டுச் செல்வார்கள். ஒருமுறை எங்கள் பெங்களூரு மாமா ஐந்து ரூபாய் கொடுத்துவிட்டுச் சென்றார். அந்த நேரம் ஏதோ விளையாடச் செல்வதில் மும்முரமாக இருந்த நான், பத்ரி அண்ணனிடம் அதைக் கொடுத்தேன். அவரும் வாங்கி வைத்துக்கொண்டார்.

மறுநாள் காலை அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்த அண்ணனிடம், “மாலை வரும்போது அவசியம் வடிவியல் பெட்டி வாங்கிவா” என்றேன். “சரி... சரி...” என்று சொல்லிவிட்டுச் சென்றவர், மறக்காமல் வாங்கிவந்தார்.

நான்கு நாட்களுக்குப் பிறகு அண்ணன் வேலைக்குப் புறப்படும்போது, “சாயங்காலம் மறக்காமல் பட்டர் பிஸ்கட் வாங்கிவா” என்றேன்.

“டேய் தினமும் ஒன்னு கேட்கறே, இதுக்கெல்லாம் ஏது காசு?” என்றார் அண்ணன்.

“அதான் மாமா கொடுத்த காசைக் கொடுத்தேனே” என்றேன். “சரி... சரி...” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

சில நாட்கள் கடந்தன. காலாண்டுத் தேர்வு விடுமுறை நெருங்கிக்கொண்டிருந்தது. எனவே பம்பரம் வாங்கிவரச் சொன்னேன். “காசு” என்று அண்ணன் கேட்டார்.

“அதான் மாமா கொடுத்த காசு இருக்கே!” என்றேன்.

ஒருமாதிரி முறைத்துவிட்டுச் சென்றார். ஆனால், பம்பரம் வாங்கித் தந்துவிட்டார். காலாண்டு விடுமுறையில் வினாத்தாள்களில் உள்ள விடைகளை எழுத தாள் தேவைப்பட்டது.

மாதவன்

மறுநாள் காலை அண்ணன் அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தார்.

“சாயங்காலம் வரும்போது கொஞ்சம் பேப்பர் வாங்கி வா” என்றேன்.

அதிர்ச்சியாகப் பார்த்தார் அண்ணன். “அதான் மாமா கொடுத்த ரூபாய் இருக்கே?” என்றேன்.

“என்னது, ரூபாயா? அதில்தானே ஏகப்பட்ட பொருள்களை வாங்கிக்கிட்டே? அப்புறம் எப்படி இருக்கும்? இன்னிக்கோட உன் பிரச்சினையை முடிக்கிறேன். இந்தா நீ கொடுத்த அஞ்சு ரூபாய்” என்று சொல்லிவிட்டு, ஐந்து ரூபாயை எடுத்துக் கொடுத்தார்!

அப்போதுதான் எனக்குப் புரிந்தது, ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டு எத்தனை பொருள்களை அண்ணனிடம் கேட்டு வாங்கியிருக்கிறேன் என்று. ஆனாலும், மாலை மறக்காமல் தாள் வாங்கிக்கொண்டு வந்தார்!

கட்டுரையாளர், ஆசிரியர், எழுத்தாளர்

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்