துடிக்கும் தோழன் 6 | நீரிழிவும் உடல் பருமனும் இதயத்துக்குப் பகை

By கல்யாணி நித்யானந்தன்

மாரடைப்பு ஏற்பட புகைப்பழக்கம் முதல் காரணம் என்று சொல்லியிருந்தேன். இரண்டாவது காரணம் நீரிழிவு நோய். உலகிலேயே நம்நாட்டில்தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம். ஒருவேளை நாம் அதில் முதலிடத்தில்கூட இருக்கக் கூடும். வியாதி என்று நாம் நீரிழிவு நோயைச் சொல்ல முடியாது. குறைபாடு என்றுதான் கூறவேண்டும்.

உடலில் சர்க்கரை செரிமானம் அதாவது மெடபொலைஸ் ஆவதற்கு இன்சுலின் தேவை. அது கணையம் என்கிற பான்கிரியாஸில் சுரப்பது. திசுக்களுக்குப் போதுமான சர்க்கரைச் சத்தை அளித்து மிகுதியைக் கல்லீரலில் சேமித்துவைக்கும் அளவுக்கு இன்சுலின் சுரப்பு இருக்க வேண்டும். இன்சுலின் அளவு குறைவதால்தான் நீரிழிவுப் பிரச்சினை ஏற்படுகிறது. இதைச் சரியான நேரத்தில் கண்டுபிடித்து உணவுப் பழக்கம், மருந்துகள் போன்றவற்றின் மூலம் சீரான இன்சுலின் அளவு இருக்கும்படி கட்டுப்பாடாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது மாரடைப்பு போன்ற விளைவுகளைத் தவிர்த்துவிடலாம்.

பரம்பரையாகத் தொடர்வது

நீரிழிவு என்பது பரம்பரையாக ஏற்படக்கூடிய குறைபாடு. பெற்றோர்களுக்கு இருந்தால் குழந்தைகளுக்கு வரும் சாத்தியம் அதிகம். பெற்றோர் இருவருக்கும் சர்க்கரை இருந்தால் குழந்தைக்கும் நீரிழிவு பாதிப்பு ஏற்பட 100 சதவீத சாத்தியமும் ஒருவருக்கு மட்டும் இருந்தால் 50 சதவீத சாத்தியமும் உண்டு. சித்தப்பா, அத்தை, மாமா, சித்தி போன்றவர்களுக்கோ அவர்களது குழந்தைகளுக்கோ இருந்தால் 25 சதவீத சாத்தியம் உள்ளது.

நீரிழிவு நோய்க்கு இனிப்பான சிறுநீர் என்று பொருள்படும் ‘மதுமேகம்’ என்கிற வடமொழிப் பெயர் உண்டு. பெற்றோருக்கு மதுமேகம் இருந்தால் குழந்தைகள் நடுவயதிலிருந்தே அதாவது 45-50 வயதிலிருந்தே நீரிழிவு நோய்ப் பரிசோதனையை அவ்வப்போது அதாவது வருடத்தில் இருமுறையாவது செய்துகொள்வது நல்லது. அப்படிச் செய்தால் நீரிழிவு நோய் வருவது குறித்து முன்கூட்டியே தெரிந்துவிடும். PP Sugar சோதனை மட்டும் போதாது. அந்தப் பரிசோதனையில் நார்மலாக இருந்தால் 100 கிராம் குளூகோஸ் கொடுத்து ஒரு மணி, இரண்டு மணி, மூன்று மணி நேர இடைவெளியில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதிக்க வேண்டும். இதில் உங்களுக்குச் நீரிழிவு நோய் இல்லை என்றோ இருக்கிறது என்றோ அல்லது வரும் வாய்ப்பு (prediabetes status) இருக்கிறது என்றோ தெரிந்துவிடும்.

எச்பிஏ1சி பரிசோதனை (haemoglobin A1 test சுருக்கமாக HbA1Cஎன்று அழைக்கப்படும்) ரத்தத்தின் மூன்று மாத சராசரி சர்க்கரை கட்டுப்பாட்டை வெளிப்படுத்தும். இதன் அளவு 7 வரைக்கும் போகலாம். ஆனால், அதற்கு மேல் என்றால் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 8க்கு மேல் என்றால் நீரிழிவு வருவதற்குத் தயராகிவிட்டது என்று அர்த்தம். எனவே, அதைத் தவிர்க்கும் முறைகளைக் கையாள வேண்டும். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் ஆறு மாதத்துக்கொருமுறை போஸ்ட் ப்ராண்டியல் அல்லது ஹெச்1 பிஸி டெஸ்ட் செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம் நீரிழிவு நோய் வராமல் காக்கலாம். அல்லது பல வருடங்களுக்குத் தள்ளிப்போடலாம்.

எடையைக் கட்டுக்குள் வைப்போம்

உங்களுக்கோ மனைவிக்கோ நீரிழிவு நோய் இருந்தால் உங்கள் மக்களுக்குத் திருமணம் செய்யும்போது ஜாதகக் கட்டங்களைப் பரிசோதித்து ஒத்துப்போகிறதா இல்லையா என்று தீர்மானிப்பதுபோல் வரும் பெண் அல்லது பிள்ளைக்கு நீரிழிவு நோய் வரும் சாத்தியம் இருக்கிறதா என்று கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. இதை யாரும் தீவிரமாக யோசிப்பதே இல்லை என்பதுதான் என் கவலை. இன்று பலவிதமான மருந்துகள் உள்ளன. இந்த நோய் சிகிச்சையில் கைதேர்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். சர்க்கரையை முழுதும் தவிர்த்து, மாவுச் சத்துப் பொருட்களை அளவாக உண்டு ‘உடல் இடை’யைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் கவலையே இல்லை.

உடல் பருமன் அதாவது குண்டாக இருப்பதும் ஆரோக்கியம் அல்ல. கொழு கொழு குழந்தைதான் அழகு, ஆரோக்கியம் என்கிற எண்ணம் தவறு. இரண்டு வயதிலேயே ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடிய கொழுப்புத் திசுக்களின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, இரண்டு வயதிலேயே குழந்தையைத் தானாகச் சாப்பிடப் பழக்க வேண்டும். தனக்கெனத் தேவைப்படும் அளவை உணர்ந்து சில குழந்தைகள் அதிகமாகச் சாப்பிடும். சில குழந்தைகள் சாப்பிடாது. ஆனால், எல்லாத் தாய்மார்களும் குழந்தை சாப்பிடப் படுத்துகிறது என்றுதான் சொல்வார்கள். காக்கா, குருவியைக் காட்டி வாயில் உணவைத் திணிப்பார்கள். குழந்தை சாப்பிட மறுத்துத் தலையைத் திருப்பிக் கொண்டாலும் ஒரே ஒரு வாய் என்று அசந்த நேரத்தில் உணவைத் திணிக்கும் பழக்கம் எல்லாத் தாய்மார்களுக்கும் இருக்கிறது.

வயதுக்கேற்ப உண்போம்

பதின் பருவத்தில் பத்து இட்லி, தோசை சாப்பிட்டாலும் செரிமானம் ஆகும். அதே 25 வயதில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யும்போது இப்படிச் சாப்பிட்டால் செரிமானம் ஆகாமல் எடை கூடும். 30 வயதுக்குள் பெல்ட்டையும் மீறி தொப்பை பிதுங்கும். புதிதாகத் திருமணம் முடித்தவராக இருந்தால் மறுவீட்டு விருந்து என்று பஜ்ஜி, போண்டா, இனிப்பு என்று பலவகையாகச் சாப்பிட்டு தொப்பையை மேலும் வளர்த்துவிடுவார். தானும் சாப்பிட்டுத் திருமணத்துக்குப் பின் மடமடவென்று 10 -15 கிலோ எடை கூடி இடுப்புப் பெருத்துவிடும்.

இந்த மாதிரி எடை கூடினால் நீரிழிவு நோய் வரும் சாத்தியம் உள்ளவர்களுக்கு சிரமம் இன்னும் அதிகமாகும். நோயை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதுபோல்தான் இது. இன்சுலின் அளவு இயல்பைவிடக் குறையும்போது குண்டாக இருப்பவர்களுக்கு அதிகம் தேவைப்படும் என்பதால் இன்சுலின் பற்றாக்குறை ஏற்படும். மூன்று பேருக்கு உண்டான ஆழாக்குச் சாதத்தை ஐந்து பேர் பங்கிட்டால் ஒருவருக்கும் பசி அடங்காதுதானே. அதுபோல்தான் குண்டாக இருப்பவர்களுக்கு இயல்பான இன்சுலினைவிட அதிகம் தேவை. இயல்பான இன்சுலினே சரியாகச் சுரக்காதபோது அதிகப்படித் தேவை எப்படிப் பூர்த்தியாகும்? எனவே, உடல் எடையை ஒழுங்காகப் பராமரித்துவந்தால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கவோ தள்ளிப்போடவோ முடியும்.

பட்டினி கிடப்பது தவறு

எடைகூடுவது என்பது இதயத்துக்கும் அதிக பாரத்தை ஏற்றுவதுபோல்தான். சுலபமாக மூச்சுவிட்டு இதயம் சரியாக உந்தித் தள்ளினால்தான் ரத்த ஓட்டம் சீராக எல்லா உறுப்புகளுக்கும் சென்று ஆரோக்கியமாக இருக்கும். அப்படியில்லாமல் பத்து கிலோ உருளைக்கிழங்கை முதுகில் கட்டிக்கொண்டு உங்களால் சரியாக மூச்சுவிட முடியுமா? மூட்டையை இறக்கிவிடலாம். ஆனால், உடல் எடையை நினைத்தவுடன் இறக்க முடியுமா? படிப்படியாகத்தான் இறக்க முடியும். பத்திரிகைகளில் உடல் எடையைக் குறைக்க என்று வருவதையெல்லாம் படித்துவிட்டுச் சரியான வழிகாட்டுதல், கண்காணிப்பு இல்லாமல் பட்டினி கிடந்து எடையைக் குறைப்பது தவறு. சாப்பிட ஆரம்பித்ததும் முன்னைவிட வேகமாக எடைகூடிவிடும். சமச்சீரான தினசரி உணவாக நாம் வழக்கமாகச் சாப்பிடுவதில் மூன்றில் ஒருபங்கைக் குறைத்து இனிப்பு, வறுத்தது, பொரித்தது என்று இஷ்டப்படி சாப்பிடாமல் தவிர்த்தாலே ஒருமாதத்தில் ஒன்றரை கிலோ வீதம் எடையைக் குறைத்துவிடலாம். இப்படிச் செய்தால் மீண்டும் எடை கூடாது.

டாக்டர். கல்யாணி நித்யானந்தன்

கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு) தொடர்புக்கு: joenitya@yahoo.com
(தற்போது 87 வயதாகும் டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.)

முந்தைய அத்தியாயம் > புகை பிடிப்பதால் மாரடைப்பு வரலாம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்